உலக செய்திகள் நாடு கடந்த தமீழ் ஈழ அரசு குறித்த விளக்கவுரை: விடுதலைப் புலிகள் வெளியீடு: ![]() கொழும்பு, செப்.15-2009 நாடு கடந்த தமிழ் ஈழ அரசு குறித்த விளக்கவுரையை விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ருத்திரகுமாரன் இந்த விளக்கவுரையை இன்று வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் தெரிவித்துள்ளன. இந்த விளக்கவுரையில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு எவ்வாறு செயல்படும் என்றும் அதன் பணிகள் என்ன என்றும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. மேலும், இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன. உலகில் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு நாடுகளுக்கும் இந்த செயற்குழுவின் சார்பில் நியமிக்கப்படும் பொறுப்பாளர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் விடுதலைப் புலிகள் தங்களது விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கக்கோவை 1. நாடு கடந்த தமிழீழ அரசு என்றால் என்ன? நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Tamil Eelam) தமிழ் மக்களது அரசியல் வேட்கையை உயிர்ப்போடு பேணித் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஓர் அரசியல் அமைப்பாகும். இது ஒரு புதுமையான எண்ணக் கருவாகும். தமது தாயகத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கைகளையும் உரிமைககளையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்பொழுது எவ்வித வாய்ப்புகளும் இல்லை. ஸ்ரீலங்கா அரசு சட்ட அடிப்படையான தடைகள், இராணுவ ஆக்கிரமிப்பு, படுகொலை ஆகிவற்றின் ஊடாகத் தமிழ் மக்களது விடுதலை வேட்கையையும் உரிமைகளையும் ஒடுக்கி வருகின்றது. இந்நிலையில் தமிழீழ நாட்டின் உறுப்பாகிய புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள மக்களாட்சி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்காக பாடுபடும் அதியுயர் அரசியல் நடுவமாக இந்த நாடுகடந்த அரசு அமைக்கப்படுகிறது. தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் மக்களும் இந்த அரசிற் பங்கு பெறுவது நடைமுறைச் சாத்தியமற்றது. எனவே இந்த அரசில் உறுப்புரிமை வகிக்கும் சார்பாளர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களிடையே இருந்து மக்களாட்சி முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த அரசு இலங்கைத் தீவில் இருக்கும் நட்பு சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும். 2. நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான தேவை என்ன? ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின் அரசியல், பண்பாடு;, பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தைத் தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் அவற்றிற்கு ஈடாகவும் செயற்படுவதிலுமே தங்கியுள்ளது. இதனை நிலைநாட்டுவதற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கட்டுப்படுத்தி வெற்றி கொள்வதற்கும் ஏதுவாக ஓர் உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமான அரசியல் கட்டமைப்பு தேவையாகும். இத்தேவை 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக வடிவம் பெற்று 1977 ஆம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப் படுத்தப்பட்டது. 1985 திம்பு கோட்பாடுகள், 2003 இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபு இதற்கு மேலும் வலுச் சேர்த்தன. கடந்த 60 ஆண்டுகளாக ஸ்ரீலங்காவின் அரசியல் கட்டமைப்பு தொடர்ச்சியாக இராணுவ மயப்படுத்தப்பட்டு இப்பொழுது மேலும் கூர்மைப் படுத்தப்பட்டுள்ளது. சிங்கள - பௌத்த வல்லாண்மை குமுகத்தினால் இயற்றப்பட்ட அரசியலமைப்பும் சட்டங்களும் ஏனைய தேசிய இனங்களின்; அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளன. இவை தமிழ் மக்களதும் பௌத்த சிங்களவர் அல்லாத ஏனைய குமுகங்களதும்; அரசியல் தனித்துவத்திற்கும் குமுக இருப்புக்கும் மற்றும் சுதந்திரமான பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப்பெரும் தடைக்கற்களாக இருக்கின்றன.
அத்துடன் தமிழ்மக்கள் தங்கள் அரசியல் வேட்கையைச் சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கும் அதற்காகக் குரலெழுப்பிப் போராடுவதற்கும் இலங்கைத் தீவின் உள்ளக நிலைமைகள் மிகப்பெரும் தடையாகவும் பேரச்சுறுத்தலாகவும் உள்ளன.
தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழரும் அடிமைகளாகவும் திறந்தவெளிச் சிறைச்சாலைகளிற் கைதிகளாகவும் வாழ கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். அதேவேளை சிங்கள அரசுத் தலைவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அரசதந்திரிகளும் படைத் தளபதிகளும் இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கு எதுவித சிக்கலும் இல்லை என்றும் அரசியல் தீர்வு தேவையற்றது எனவும் உள்நாட்டிலும் அனைத்துலக நாடுகள் மட்டத்திலும் பொய்ப் பரப்புரை செய்து வருகின்றனர். இவற்றை எல்லாம் எதிர்கொண்டு தமிழ்மக்களது அரசியல் தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை பல்வேறுபட்ட அணுகுமுறைகளைக் கையாண்டு முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழ்மக்களது கைகளில் வீழ்ந்துள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையைப் பெற்றதுமான ஒரு மக்களாட்சிக் கட்டமைப்பின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடுகடந்த தமிழீழ அரசு எனத் இப்பொழுது முன்மொழியப்பட்டுள்ளது. 3. நாடு கடந்த அரசுக்கும் புகலிட அரசுக்குமிடையில் வேறுபாடுகள் உண்டா? அல்லது இரண்டும் ஒன்றேதானா? இவ்விரண்டு அரசுகளுக்கும் இடையே பல பொதுப் பண்புகள் இருந்தாலும் கோட்பாட்டு அடிப்படையில் அவை வேறானவை. புகலிட அரசு என்பது வெளிநாடுகளுக்கு தப்பியோடும் அரசியல் தலைவர்கள் தமக்கு ஆதரவு அளிக்கக்கூடிய நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்து அங்கு அமைக்கும் ஓர் அரசாகும். சொந்த நாடு விடுதலை பெறும் பொழுது அவர்கள் நாடு திரும்புவர். புகலிட அரசை அமைக்க குறைந்தளவு ஒரு நாட்டின் ஒப்புதலும் ஏற்புதலும் தேவை. புகலிட அரசு செயற்படுவதற்குப் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் இருக்க வேண்டிய தேவையில்லை. நாடு கடந்த அரசு பற்றிய கோட்பாடு கடந்த இரு பத்தாண்டுகளாக குமுக அறிஞர்களது கவனத்தை ஈர்த்து வருகிறது. அது புலம் பெயர்ந்து வாழும் மக்களது நாடு கடந்த வாழ்க்கை முறையோடும் நாடு கடந்த அரசியலோடும் தொடர்புள்ளது.
புலம் பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளில் மட்டும் அல்லாது தமது தாயகத்தோடும் வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தம் மக்களோடும் உறவைப் பேணி வருகின்றனர். இவர்களது வாழ்க்கைமுறை தாம் வாழும் நாடுகளின் எல்லைகளுக்குள் சுருங்கி விடுவதில்லை. நாடுகள் கடந்த ஒரு குமுகமாக இவர்கள் தமது வாழ்க்கையை அமைத்துள்ளனர். தாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் தமது வாழ்வை இவர்கள் அமைத்துக் கொண்டபொழுதும் இவர்களது அரசியல் குமுக பொருளாதார மற்றும் பண்பாட்டு பண்புகளைத் முடிவுசெய்வதில் நாடு கடந்த குமுக வெளி (Transnational Government of Tamil Eelam) முதன்மையான பங்கினை வகிக்கிறது. ஈழத் தமிழரது புலம் பெயர் வாழ்க்கையும் இவ்வாறே உள்ளது. புலம் பெயர் தமிழ் மக்கள் மட்டுமல்லாது தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும் நாடுகடந்த தமது தொடர்புகளைப் பேணிய வண்ணம் உள்ளனர். எனவே அம்மக்களும் ஈழத்தமிழரது நாடு கடந்த குமுக வெளியின் உறுப்பாகவே உள்ளனர். ஈழத் தமிழரது அரசியல் இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குள் சுருங்கி விடவில்லை. அவர்களது அரசியல் இப்பொழுது நாடு கடந்த அரசியலாகவும் மாற்றம் கண்டுள்ளது. பன்முகப்பட்டதும் குமுகநலன்மிக்கதும் மக்களாட்சி அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டதுமான தேசியமே தமிழ்த் தேசியம்; ஆகும். அமைக்கப்பட இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு நாடு கடந்த குமுக வெளியில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் தமிழீழ மக்களது அரசியல் வேட்கைகளை வென்றெடுப்பதற்காக அமைக்கப்படுகிறது. மேலும் தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களது குமுக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டையும் இந்நாடு கடந்த அரசு அதன் ஆளுகைக்குள் கொள்ளும். மக்களால் மக்களில் தங்கி நிற்கக்கூடிய முறையில் இவ்வரசு அமைக்கப்படுவதால் இதற்கு நாடுகளின் ஒப்புதல் என்பது ஒரு முன் தேவையாக இருக்காது. தமிழ் மக்களிடையே உள்ள பொது அமைப்புகள் இவ்வரசினைத் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்க வேண்டும். மக்களில் தங்கிநின்றவாறே அனைத்துலக அரங்கில் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியச் சிக்கலுக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கு அனைத்துலக நாடுகளினதும் மக்களினதும் ஆதரவை இவ்வரசு திரட்டும். மேலும் இவ் அரசு தமிழீழ நாட்டின் விடுதலைக்காக அரசியல் மற்றும் அரசதந்திர வழிமுறைகள் ஊடாகப் போராடும். 4. நாடுகடந்த அரசு உருவாகிவிட்டதா? இல்லையெனில் அது எவ்வாறு உருவாக்கப்படும்? நாடு கடந்த அரசை உருவாக்கும் பணி எவ்வாறு நடைபெறும்? நாடு கடந்த அரசு இன்னும் உருவாகவில்லை. அதனை உருவாக்குவதற்கான நிறைவேற்றுச் செயற்குழு அமைக்கப்பட்டு வருகின்றது. . இந்த நிறைவேற்றுச் செயற்குழுவின் உறுப்பினர்களில் இதன் இணைப்பாளரான திரு ருத்ரகுமாரனின் பெயர் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த அரசை உருவாக்குவதற்கான செயற்பாட்டுக் குழுவினை நாடுகள் தோறும் உருவாக்கும் பணிகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றன. இச்செயற்பாட்டுக் குழுவில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளோரை இப்பொழுது இணைத்து வருகிறோம். விரைவில் ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய செயற்குழு பற்றிய விளக்கங்களை அறிவிப்போம். இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள மதிவுரைக் குழு உருவாக்கற் செயற்குழுவுக்கு மதிவுரை வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்நாடுகள் தழுவிய செயற்பாட்டுக் குழுக்கள் தத்தமது நாடுகளில் தமிழ் அமைப்புக்களோடும் தமிழ் மக்களோடும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும். தமிழரிடையே மட்டுமன்றி தமது நாடுகளில் உள்ள பொதுச் குமுகத்தின் ஆதரவையும் இவ்வரசை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். மேலும் தத்தமது நாடுகளின் அரசியல் தலைவர்களதும் அரசுகளதும் ஆதரவை இந்நாடுகடந்த அரசு அமைக்கும் முயற்சிக்குத் திரட்டும் செயற்பாடுகளிலும் இச்செயற்குழு ஈடுபடும். முசுலிங்கள்;, இந்திய அறிவாளிகள் ஆகியோரை உள்வாங்கி மதியுரைக் குழு விரிவுபடுத்தப்படும். தமிழரிடையே இயங்கும் மக்கள் அமைப்புக்களது துணையோடும் நன்மதிப்புப் பெற்ற ஒரு நிறுவனத்தோடு இணைந்தும் ஓவ்வொரு நாட்டிலும் வாழும் ஈழத்தழிழ் மக்களது வாக்காளர் பட்டியல் ஆக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு உருவாக்கப்பெற்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் அனைத்துலக நெறிமுறைகளுக்கு அமைய சுதந்திரமான தேர்தல் குழு அமைக்கப்பட்டுத் தேர்தல்கள் நடத்தப்பட்டு நாடு கடந்த அரசுக்கான மக்கள் பேராளர்கள் தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்படும் பேராளர்கள் தம்மை அரசியலமைப்பு அவையாக மாற்றிச் சட்டச் சிறப்புக் குழுவின் உதவியோடு மக்கள் அமைப்புகளின் பரிந்துரைகளை உள்வாங்கி நாடு கடந்த அரசு தொடர்பான யாப்பை எழுதுவர். 5. நாடு கடந்த அரசு அமைக்கும் முயற்சியைப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர் ஏன் முன்னெடுக்க வேண்டும்? அவர்களுக்குத் தமிழீழ அரசியல் விடுதலையில் உள்ள பங்கு யாது?. இன்றைய சூழலில் புலம்பெயர் தமிழர் மட்டுமே தமிழீழத் தமிழரது அரசியல் வேட்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் இருக்கின்றனர். இது ஈழத் தமிழருக்கு வலுச்சேர்க்கின்ற காரணியகவே உள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் உண்மைநிலை நாடுகடந்த அரசியலாகவே உருமலர்ச்சி பெற்று வருகின்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்து வருகின்ற அயர்லாந்து மக்கள் வடஅயர்லாந்து மக்கள் போராட்டத்திற்கு உறுதியானதும் வெளிப்படையானதுமான ஆதரவை வழங்கினர். புலம்பெயர்ந்து வாழ்கின்ற யூதமக்கள் இந்நாள் வரை இசுரேல் நாட்டை அரசியல் மட்டத்திலும் பொருளியல் அடிப்படையிலும் வலுப்படுத்தி வருகின்றனர். இன்னுமொரு தளத்தில் இத்தாலி, எல் சல்வடோர், எரித்திரியா, குரோசியா, மோல்டோவா முதலிய நாடுகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களைத் தமது சொந்த நாட்டு அரசியலின் தவிர்க்கமுடியாக உறுப்பாக ஏற்றுள்ளன. இத்தாலிய நாடாளுமன்றத்திற்கு புலம்பெயர்ந்த இத்தாலிய மக்கள் நான்கு உறுப்பினரைத் தெரிவு செய்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் கெயிட்டி மக்களுக்காக கெயிட்டியில் ஒரு தனித் தேர்தல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பாதிக்கு மேலானவை இரட்டைக் குடியுரிமையை ஏற்றுக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் புதிய நூற்றாண்டில் நாடுகடந்த அரசியலுக்குக் கிடைத்துள்ள முதன்மைக்குச் சான்றுபகருகின்றன. இப்பின்னணியில்தான் ஈழத்தமிழர்களின் நாடுகடந்த அரசுக்கான முயற்சியையும் நோக்க வேண்டும். தொடர்ச்சியாகத் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதம் காரணமாக பல்லாயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்கு ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்து குடியேறினர். இன்னொரு பகுதி மக்கள் வடகிழக்குக்கு வெளியே இடம் பெயரக் கட்டாயப்படுத்தப் பட்டனர். எஞ்சியோர் போரினால் சிதைக்கப்பட்டு உள்ளுரில் பொருளியலில் திக்கற்றவர்களாகவும் அரசியல் அடிமைகளாகவும் சிறைக் கைதிகளாகவும் மாற்றப்பட்டனர்.
எனவே தாயகத்தில் ஈழத் தமிழர் தமது தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கான பேராட்டங்களை முன்னெடுப்பது புலம்பெயர் தமிழரது உரிமையும் கடமையுமாகும். 6. நாடு கடந்த தமிழீழ அரசு எங்கே அமையும்? அதன் தன்மை எவ்வாறு இருக்கும்? அதன் முதன்மையான பணிகள் யாவை? அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசுக்கு ஏனைய முறைசார்அரசுகள் போல் ஒரு நாட்டின் நிலப்பரப்பினைத் தளமாகக் கொண்டதாகவோ அல்லது சட்டம் இயற்றுதல், பாதுகாப்பு, வரி அறவிடல் போன்ற முறைமையான அரசுச் செயற்பாடுகள் மூலம் தனது இறையாண்மையை நிலைநாட்டவோ தேவை ஏற்படாது. தாயகத்தில் வாழும் மக்களது பாதுகாப்பு, விரிவுபடுத்தப்பட்டதும் விரைவுபடுத்தப்பட்டதுமான முழுமையான தன்னாட்சி உரிமைக்கான போராட்டம், குமுக பொருண்மிய, பண்பாட்டுச் செழுமை ஆகியவற்றைத் தனது முதன்மைக் குறிக்கோள்களாகக் கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசு செயற்படும். மேலும், புலம்பெயர் ஈழத் தமிழர் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு இசைவாகப் தம்மைப் வலுவுள்ள ஒரு குமுகமாகக் கட்டியெழுப்புவதற்கும் அதனூடாக அவர்களால் அடையக்கூடிய குமுக, பொருண்மிய, அரசியல் மேல் நிலையினைத் தாயக விடுதலைக்கான உந்து சக்தியாக மாற்றும் உயரிய செயற்பாட்டினையும் இவ்வரசு முன்னெடுக்கும். நாடுகடந்த தமிழீழ அரசு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியினைத் தனது ஆள்புலமாக கொண்டிருக்காவிடினும் தனது குறிக்கோள்களை அடைய செயலணிகளையும் அதற்கான செயற்பாட்டு அலுவலகங்களையும் உலகளாவிய மட்டத்தில் பல்வேறு நாடுகளில் அவற்றின் சட்டவரம்புகளுக்கு அமைய உருவாக்கிச் செயற்படுத்தும். 7. நாடுகடந்த தமிழீழ அரசுக்கு அனைத்துலக நாடுகள் ஒப்புதல் அளிக்குமா? அவற்றின் ஒப்புதலின்றி அதன் திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுக்க முடியுமா? முன்னரே குறிப்பிட்டது போல் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது ஒரு புதிய முயற்சியாகும். இத்தகைய முயற்சிக்கான மாதிரிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. கடந்த காலத்தில் அரசியல் விடுதலைக்காக போராடிய பல குமுகங்கள் தங்களது நாட்டுக்கு வெளியே புகலிட அரசுகளை உருவாக்கிச் செயற்பட்டன. புகலிட அரசுகள் இயங்குவதற்குப் வலுவான புலம்பெயர் குமுகம் தேவையாக இருக்காது. ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசைப் பொறுத்தவரை அதற்கு மிகவும் வலுவான புலம்பெயர் குமகமும் தெளிவான அரசியல் இலக்குகளும் உண்டு. அதேவேளை ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு ஈழத்தமிழரது அரசியல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான தேவையை வலியுறுத்தும் அனைத்துலக நாடுகளினதும் தோழமைச் சக்திகளினதும் தொடர்ச்சியான வற்புறுத்தல் எமக்கு மிகச் சாதகமான காரணிகளாக உள்ளன. 8. நாடுகடந்த தமிழீழ அரசு பற்றிய எண்ணக்கருவை தமிழீழ விடுதலைப்புலிகளது அதைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களே முதலில் முன்வைத்தார். அப்படியாயின் இதனைத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் திட்டமாகக் கொள்ள முடியுமா? ஈழத்தமிழர் தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் கடந்த பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கட்டங்களையும் அணுகுமுறை மாற்றங்களையும் தாண்டி வந்துள்ளது. இக் காலகட்டத்தில் அரசியல் கோரிக்கைகளின் வடிவங்கள் மேலும் துல்லியமானதும் தீர்க்கமானதுமான நிலைக்கு முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. அதேபோன்று போராட்ட முறைகளும் அதற்கான தலைமைகளும் மாற்றம் பெற்றன. வரலாற்றின் இயங்கியல் தன்மையானது ஈழத் தமிழர் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்பட்டதனையே இது வெளிப்படுத்துகின்றது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய நிலைமையையும் நோக்கவேண்டியுள்ளது. 2000 ஆண்டுகளின் பிற் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருமைப்படுத்தப்பட்ட தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப்போராட்டம் ஸ்ரீலங்காவினதும் அதன் நட்பு நாடுகளினதும் கூர்மைப்படுத்தப்பட்ட இராணுவ மேலாண்மையால் வலுவிழக்கச் செய்யப்பட்டது. இங்கு வலுவிழக்கச் செய்யப்பட்டது ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவமே தவிர விடுதலைப் போராட்டமல்ல. ‘செப்ரம்பர் 11’ எனக் குறிப்பிடப்படும் துன்பியல் நிகழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்கா முன்னெடுத்த ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற கருத்தியலை ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர் போரின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய மனிதாபினமான சட்டங்களுக்கும் மனித நாகரீகங்களுக்கும் முற்றிலும் புறம்பாக ஒரு போரைத் ஈழத் தமிழர் மீதும் அவர்கள் தாயகத்தின் மீதும் திணித்து 21 ஆம் நூற்றாண்டின் பெருங்கேடான இனப்படுகொலையை நடத்தி முடித்துள்ளனர். இச்சூழ்நிலையில் ஈழத்தமிழரது தாயகவிடுதலைக்கான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான வரலாற்றுக் கடமை தமிழ்மக்களிடம் தமிழீழ விடுதலைப்புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளது. இம்முதன்மையான பங்களிப்பை உரிய காலகட்டத்தில் உரியமுறையில் செல்வராசா பத்மநாதன் அவர்கள் முன்மொழிந்தார். இன்றைய சூழலில் புதிய உலக அரசியல் ஒழுங்கைக் கவனத்தில் எடுத்து அனைத்துலக நாடுகளின் புவிசார் அரசியல் வலைப்பின்னல்களுக்கு ஊடாக பொருத்தமான புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி ஈழத்தமிழரது தாயக விடுதலைக்கும் தன்னாட்சி உரிமைக்குமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசுக்கான கருத்தினை தமிழீழ விடுதலைப்புலிகள் முன்மொழிந்து அதனைப் புலம்பெயர் தமிழர்களிடம் கையளித்ததன் மூலம் தமது வரலாற்றுக் கடமையைச் செய்துள்ளனர். அதனைப் புரிந்துகொண்டு ஈழத் தமிழர் அனைவரையும் ஒன்றிணைக்கும் அமைப்பாக நாடுகடந்த தமிழீழ அரசு செயற்படும். இது மேலிருந்து திணிக்கப்படும் அரசாக இருக்காது. முற்றாகக் கீழிருந்து மேல்நோக்கி கட்டியெழுப்பப்படுகின்ற ஒரு மக்களாட்சி அரசாக இருக்கும். நாடுகடந்த தமிழீழ அரசு வெளிப்படைத்தன்மையும் பொறுப்புத்தன்மையும் கொண்டதாக வடிவமைக்கப்படும். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத்தன்மையை ஊக்குவித்து மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை ஒளிவுமறைவின்றி வழங்கும். மக்களாட்சிச் செயன்முறையூடாகப் புலம்பெயர் தமிழரால் தெரிவுசெய்யப்படும் பேராளர்களால் இது ஆளப்படும். இவ்வரசு செயற்படவுள்ள முறைமை தொடர்பான கூடுதல் விளக்கங்களை நாம் விரைவில் அறியத் தருவோம். 9. சிறீலங்கா அரசும் சிங்கள - பௌத்த தேசியவாதிகளும் இந்த அரசை எவ்வாறு நோக்குவர்? இப்பொழுது முன்னெடுக்கப்படுகின்ற ‘நாடுகடந்த தமிழீழ அரசு’ வேலைத்திட்டத்தை சிறீலங்கா அரசும் அதன் இனவெறி ஆட்சியாளரும் மிகவும் அச்ச உணர்வோடு தொல்லை மிகுந்ததாகப் பார்க்கின்றனர்;. ஏனெனில் சிறீலங்கா அரசு ஈழத் தமிழர் மேலும் தாயகத்தின் மீதும் இப்பொழுது கொண்டுள்ள மேலாண்மை உண்மையான ஒரு வெற்றி அல்ல. மேலும் அது நிரந்தரமானதும் அல்ல. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் அவர்கள் பெற்றுக் கொண்டது இராணுவ வலுச்சமனிலை மேலாண்மை மட்டுமே. இதுவும் இலங்கைத்தீவினுள் மட்டும்தான் செல்லுபடியாகும். அத்தோடு அவர்களது இந்த இராணுவ மேலாண்மை ஆயுதப் போராட்ட அணுகுமுறைக்கு மட்டுமே ஈடு கொடுக்க வல்லது. அரசசதந்திர அணுகுமுறைக்கு இதனால் ஈடு கொடுக்க முடியாது. இத்தகைய நிலைமையில் தமிழ்மக்களது தன்னாட்சி உரிமைக்கான் போராட்டம் ஆயுதப் போர்முறைக்குப் புறம்பாக பன்னாட்டுத் தளத்தில் கட்டியெழுப்பப்படுவதை சிறீலங்கா ஆட்சியாளர் தங்களால் எதிர்கொள்ள முடியாத ஒன்றாகவே அச்சத்தோடு பார்க்கின்றனர்;. எனவே இப்பொழுது முன்மொழியப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசுக்கான வேலைத்திட்டமானது தங்களால் என்றுமே வெற்றி கொள்ளமுடியாத ஈழத்தமிழரது பலங்கொண்ட வலுக்கொண்ட வடிவமாக மாறிவிடும் என்று கருதுகின்றனர். இன்று சிறீலங்காவும் அதன் துணைச் சக்திகளும் தமது வளர்ச்சியின் உச்சத்துக்குப் போய்விட்டனர். கடந்தகால இராணுவ அணுகுமுறைகளை மீளவும் மீளவும் செயற்படுத்துவதைத் தவிர வேறுவழி அவர்களுக்கு இல்லை. தன்னால் வெற்றிபெறக்கூடிய ஒரு களத்திற்குள் ஈழத்தமிழரது போராட்டவடிவத்தை மட்டுப்படுத்தவே சிறீலங்கா அரசு முயற்சிக்கின்றது. போர்க்கள நெறிகளைத் தீர்மானிக்கும் கட்டுப்பாட்டைத் தனக்குள் வைத்திருக்கவே அது முயல்கின்றது.
முன்மொழியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு என்பது ஈழத்தமிழரால் திறக்கப்படும் புதியதோர் ஆடுகளமாகும். இதன் நெறிகளைச் சிறீலங்கா அரசு வரையறை செய்ய முடியாது. அதன் இராணுவ மேலாண்மையும் ஆள்புலக்கட்டுப்பாடும் இங்கு செல்லுபடியற்றது. 10. நாடுகடந்த தமிழீழ அரசு என்பது இப்பொழுது இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் ஈழத்தமிழரது அமைப்புக்களைப் போன்ற ஒன்றா? அல்லது தனித்துவம் கொண்டதா? தனித்துவம் கொண்டதாயின் அது எவ்வாறு இப்போது இயங்கும் நிறுவனங்களுடனும் கட்டமைப்புக்களுடனும் உறவுகளைப் பேணும்? பல்வேறு குமுக நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புக்களும் புலம்பெயர் ஈழத்தமிழரால் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன. அவை செயற்பாட்டளவிலும் உறுப்பினரைப் பொறுத்தும் தம்முள் ஒத்த தன்மைகளையும் தனித்தன்மைகளையும் கொண்டுள்ளன. இவ்வாறான அமைப்புகள் ஆற்றும் பணிகளின் முதன்மையும் செயற்பாட்டு ஆற்றலும் போற்றத்தக்கன. எனினும் இப்பொழுது ஈழத்தமிழர் எதிர்கொண்டுள்ள தேசிய மற்றும் பன்னாட்டு அறைகூவல்களை எதிர்கொள்ள இவ்வமைப்புகளுக்கு மேலான ஓர் அமைப்பின் தேவை உணரப்பட்டுள்ளது. இதுதான் முன்மொழியப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு ஆகும். மக்களால் மக்களாட்சி முறையில் தெரிவுசெய்யப்பட்ட பேராளர்களைக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசானது புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே இயங்கும் மக்கள் அமைப்புகளைத் தன்னோடு இணைத்துப் பணியாற்றும். இந்த இணைவு எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல்களை நாம் இப்பொழுது மேற்கொண்டு வருகிறோம். 11. நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் இலங்கைத்தீவினுள் வாழும் தமிழ்மக்களது அரசியல், குமுகம், பொருண்மியம், பாதுகாப்பு, மீள்வாழ்வு, மீள்கட்டமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவை தொடர்பாக எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? ஈழத்தமிழரது தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதே நாடுகடந்த தமிழீழ அரசின் முதன்மையான குறிக்கோளாகும். அதேவேளை வேறு இரண்டு முனைகளிலும் அது செயலாற்றும். ஒன்று சிறீலங்காவின் ஆட்சியாளரால் தமிழ்மக்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளையும் புறக்கணிப்புக்களையும் பழிவாங்கல்களையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கு வேண்டிய மாற்றுமுயற்சிகளை பன்னாட்டு மட்டத்தில் அரசதந்திர அடிப்படையில் முன்னெடுத்தல். மற்றையது புலம்பெயர் தமிழரது ஆற்றல்களையும் வளங்களையும் ஒன்றுதிரட்டி வழிப்படுத்துவதன்மூலம் சிங்கள பௌத்த மேலாண்மைச் சக்திகள்; தாயக வளங்களை சுரண்டுவதையும் சூறையாடுவதையும் தடுத்து நிறுத்துதல். இந்த நோக்கங்களை வெற்றியாக நிறைவேற்றுவதற்காகவும் இலங்கைத்தீவினுள் வாழும் தமிழர்த பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் உள்ளுர் வளங்கள் மீது அவர்களுக்குள்ள உரிமைகளைத் தக்கவைக்கவும் பொருத்தமான மாற்று ஒழுங்குகளையும் துணை அமைப்புகளையும் நாடுகடந்த தமிழீழ அரசு கண்டறிந்து உருவாக்கி நெறிப்படுத்தும் அல்லது ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களின் வளங்களைப் பொருத்தமான முறையில் உள்வாங்கும். தேவையான பொழுது அனைத்துலக உதவி வழங்கும் நிறுவனங்கள், நன்கொடை அமைப்புகள், இருதரப்பு மற்றும் பல்தரப்பு மேம்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றோடு உறவுகளை ஏற்படுத்தி தாயகத்தின் மீள்குடியேற்றம், வளர்ச்சியும் முதலீடும், மனிதவள மேம்பாடு;, சூழல் பாதுகாப்பு என்பவை தொடர்பாகப் பேசி அவர்களின் பங்களிப்பை தமிழ்மக்களது முழுமையான நிறைவுக்காக வழிப்படுத்தும். இலங்கைத்தீவினுள் தமிழ்மக்களது தேசியத்துடன் இணைந்த அரசியல் குறிக்கோள்களுக்காக செயற்படும் அமைப்புகளுக்கு பொருத்தமான உள்ளீடுகளை வழங்கி அவற்றின் வினைத்திறனை இவ்வரசு மேம்படுத்தும். 12. புலம்பெயர்ந்து வாழும் தமிழருக்கு நாடுகடந்த தமிழீழ அரசு எத்தகைய தலைமையை வழங்கும்? நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமை அவர்களுக்குத் தேவைதானா? அவர்கள் இப்பொழுது அடைந்துள்ள குமுகப் பொருளாதார மேனிலை போதாதா? மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுத்திரேலியா முதலிய நாடுகளில் வாழும் புலம்பெயர் குமுகங்களை ஒப்புநோக்கும் போது ஈழத்தமிழர் வெற்றிபெற்ற குமுகங்களில் ஒன்றாகவே கணிக்கப்படுகின்றனர். அவர்களது கடின உழைப்பு, கல்வியறிவு, தொழிலாற்றல், அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல், சிக்கனம், சொத்துடமை, கூட்டுவாழ்க்கை ஆகியவையும் தாயக உறவுகள் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றும் பரிவும் மிகவும் வியந்து பாராட்டப்படுகின்றது. எனினும் போரினாலும் இன வன்செயல்களினாலும் சிதைக்கப்பட்டு நாட்டிலிருந்து சிதறடிக்கப்பட்ட ஒரு குமுகத்திற்கு, குறிப்பாக விடுதலைக்காகப் போராடும் ஓர் இனத்திற்கு, இச்சிறப்பியல்புகள் மட்டும் போதுமானவை அல்ல. அரைநூற்றாண்டுக்கு மேல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இன வன்செயல்களாலும் பொருளாதாரப் புறக்கணிப்புக்களாலும் மீண்டும் மீண்டும் தறித்து வீழ்த்தப்பட்ட தமிழ் குமுகம் தனது தன்னாற்றல் மூலம் மீளவும் முளைவிட்டு எழுந்தது. ஆனாலும் இக்குமுகம் தனது வளர்ச்சியை ஒருவரையறைக்குள் முடக்கிக் கொண்டுள்ளதாகவே நோக்கப்படுகின்றது. கல்வியறிவில் ஒப்பீட்டளவில் உயர் விழுக்காட்டினைக் கொண்டிருந்தாலும் இக்குமுகம் உயர் முடிவெடுக்கும் நிலைகளில் பெற்றிருக்கக்கூடிய பங்கு மிக மிகக் குறைவாகவேயுள்ளது. அதேபோன்று கூடிய சேமிப்பு ஆற்றலைக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ்ச் குமுகம் தொழிற்படு மூலதன உருவாக்கத்தில் மிக நலிவானதாகவே காணப்படுகின்றது. தொழில்வினை ஆற்றலில் சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருந்தும் தொழிலாண்மையிலும் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதிலும் போதிய அக்கறையற்ற நிலைமையே நிலவுகின்றது. இன வன்செயல்களால் தோற்றுவிக்கப்பட்ட உயிராபத்துக்களையும் இன்னல்களையும் துணிகரமாக எதிர்கொண்டு தங்களைத் தக்கவைத்துள்ள ஈழத்தமிழர் திறந்த சந்தைப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கு முன்வரத் தயங்குபவர்களாகவே உள்ளனர். போரினால் இழக்கப்பட்ட வாய்ப்புக்களை மீளவும் விரைவாகக் கட்டியெழுப்புவதற்குரிய காப்பகங்கள், மனிதவள மேம்பாட்டு அமைப்புகள், தொழிற்பயிற்சி நடுவங்கள், பணிநிலையங்கள் ஆகியவற்றைக்கூட சொந்தமாகக் கட்டியெழுப்ப முன்வராமல் ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகளிலே தங்கிவாழும் குமுகமாகவே உள்ளனர். இந்நிலைமைகள் யாவும் மாற்றப்படவேண்டும். ஈழத்தமிழரது மேனிலையானது பன்னாட்டின் அனைத்துப் பரப்புகளிலும் கட்டியெழுப்பப் படவேண்டும்;. தாம் வாழும் நாடுகளது பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தக்;கூடிய அளவிற்கு மூலதனவாக்கத்திலும் தொழிலாண்மையிலும் ஈழத்தமிழரது பங்கு அதிகரிக்கப்படவேண்டும். ஈழத்தமிழரின் அறிவாற்றலும் தொழில்சார் புலமையும் இன்றி நிறுவனங்கள் உயர் முடிவெடுக்க முடியாதெனும் நிலை ஏற்படவேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் உயர்நிலைகளில் ஈழத்தமிழர்களின் ஆளுமை ஒளிரவேண்டும். இவற்றின் மூலமே ஈழத்தமிழரது தாயகவிடுதலைக்கான பயணத்தை விரிவுபடுத்தவும் விரைவுபடுத்தவும் முடியும். இதற்கு தேவையான கொள்கை அடிப்படையான உத்திகளையும் தலைமையையும் நாடுகடந்த தமிழீழ அரசு வழங்கும். 13. நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பது தொடர்பான பணிகள் எந்தளவில் உள்ளன? அரசின் வடிவமும் ஏனைய விடயங்களும் இறுதி செய்யப்பட்டு விட்டனவா? குறிக்கப்பட்ட கால அட்டவணைகள் தாயக மாந்தநேய நெருக்கடிகளோடு ஒப்பிடும்போது காலநீட்டம் கொண்டவையாக கருதமுடியாதா? ‘நாடுகடந்த தமிழீழ அரசு’ என்ற செயற்றிட்டம் ஒரு புதுமையான முயற்சியாகும். எனவே அதுபற்றிப் போதிய கலந்துரையாடல்களையும் கருத்தாடல்களையும் மக்களிடையேயும் பொருத்தமான துறைசார் நிபுணர்களிடையேயும் நடத்துதல் இன்றியமையாததாகும். தாயகத்தில் நிலவும் மாந்தநேய அவலங்கள் தொடர்பாக விரைந்து செயற்படவேண்டிய தேவை உணரப்பட்டாலும்; ஈழத்தமிழரது தேசிய விடுதலைக்கான புலம்பெயர் குமுகத்தின் அதி உயர் அமைப்பை உருவாக்குவதற்கு கணிசமான காலம் தேவை என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும். இதுவரை முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான கருத்துரையாடல்களாகவே அமைந்துள்ளன. இக்கருத்துரையாடல்கள் மூலம் சிறப்பான முடிவுகளை உருவாக்க வேண்டிய மதியுரைகள் கிடைத்துள்ளன. இந்த மதியுரைகள் யாவற்றையும் கருத்திற் கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான உருவாக்கக் குழுவும் புலமைசார் மதியுரைக் குழுவும்; கலந்துரையாடி ஆக்கப்படும் திட்ட விபரங்கள் மக்கள் முன் வைக்கப்படும். முன்மொழியப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான செயற்பாடுகள் பலகட்டங்களாக முன்னெடுக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவையாவன: முதலாம் நிலை: கருத்துருவாக்கம். இரண்டாம் நிலை: துறைசார் புலமையாளர் குழு அமைத்தல். மூன்றாம் நிலை: பரந்த தளத்தில் நாடுகள் தழுவியதாக கலந்துரையாடல்களை நடத்துதலும் நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்குவதற்கான குழுவினை நாடுகள் சார்ந்ததாகத் தெரிவுசெய்தலும். நான்காம் நிலை: முன்மொழியப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் அடிப்படை வடிவத்தை வரையறை செய்தலும் பேராளர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் முறையை வடிவமைத்து முன்னெடுத்தலும். ஐந்தாம் நிலை: தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களைக் கொண்டதான நாடுகடந்த தமிழீழ அரசின் அரசியலமைப்பு அவையைக் கூட்டுதலும் யாப்பை உருவாக்கி ஒப்புதல் பெறுதலும் அதனை நிறைவேற்றுவதற்கான அரசியற் கட்டளை அமைப்பைம் தொடக்கி வைத்தலும். ஆறாம் நிலை: நாடுகடந்த தமிழீழ அரசைச் செயற்பாட்டுக்குக் கொண்டு வருதல். மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் இப்பொழுது 3 ஆம் நிலைச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. 14. நாடுகடந்த அரசுக்கான தேர்தல் எப்பொழுது நடைபெறும்? புலம்பெயர் தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் இத்தேர்தலை; 2010 ஏப்பிரல் திங்களுக்கு முன் நடத்தி முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விளக்கங்களை நாம் விரைவில் அறியத் தருவோம். 15. நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்குழுவில் இணைந்து பணியாற்றுவதற்கான தகுதிகள் எவை? எவ்வாறு அதில் இணைவது? இக்குழுவில் இணைய விரும்புவோர் அகவை 18 ஐ நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும். இலங்கைத்தீவில் ஈழத் தமிழ் மக்களது தேசியச் சிக்கலுக்குத் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டோராக இருக்க வேண்டும். ஓவ்வொரு நாட்டுக்கும் குழுக்களுக்குத் தலைமை தாங்குபவர் பெயரையும் அவரது தொடர்பு விளக்கங்களையும் விரைவில் அறியத் தருவோம். அவர்களோடு தொடர்பு கொண்டு நீங்கள் இக்குழுவில் இணைந்து கொள்ளலாம். மேலும் எமது மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொண்டும் இணைந்து கொள்ளலாம். எமது மின்னஞ்சல் முகவரி- info@govtamileelam.org |