இன்றைய (27-09-2009) செய்திப் புகைப்படங்கள் என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் என்.எல்.சி., ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இரவு வாபஸ் பெறப்பட்டது. என்.எல்.சி., முதல் சுரங்க விரிவாக்கத்தில், நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளி ஜான்வில்லியம்ஸ் (26), மின்சாரம் தாக்கி இறந்தார். இதை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, என்.எல்.சி., நிர்வாகத்துடன், தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இறந்த ஜான் வில்லியம்ஸ் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக, ஐந்து லட்சம் ரூபாய் வழங்குவதாகவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதாகவும் நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதை யேற்று, ஒப்பந்தத் தொழிலாளர்கள் இரவு பணிக்கு திரும்பினர். பெஷாவரில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி பாகிஸ்தான் வடமேற்கு பகுதியான பெஷாவரில் இன்று நடந்த கார் குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர். அதே பகுதியில் நேற்று இரவு நடந்த தாக்குதலில் 6 போலீசார் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய செய்திப் புகைப்படங்கள் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() சென்னை11 விஞ்ஞானிகளுக்கு மிக உயரிய அறிவியல் விருது நாட்டின் மிக உயரிய அறிவியல் விருதான "சாந்தி ஸ்வரூப் பட்நாகர்' விருதுக்கு (2009-ம் ஆண்டுக்கான) சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி கிரிதர் உள்ளிட்ட 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு செய்வோர்க்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. 2009-ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வானவர்கள் குறித்து இந்த அமைப்பின் இயக்குநர் சமீர், சனிக்கிழமை தில்லியில் கூறியது: கிரிதர் (இந்திய அறிவியல் நிறுவனம்-சென்னை), அபிஷேக் தர் (ராமன் அறிவியல் நிறுவனம்-பெங்களூர்), சந்தோஷ் (எல்.வி.பிரசாத் நிறுவனம்-ஆந்திரம்), சுரேஷ் (ஹைதராபாத் பல்கலை), ராஜேஷ் கோபகுமார் (ஹரீஷ் ஆராய்ச்சி நிறுவனம்), ஜெயந்த் ராமசாமி (ஐஐஎஸ்-ஹரித்ஸ) உள்ளிட்ட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங், தலைமையில் பின்னொரு நாளில் நடைபெறும் விழாவில் இவ் விருது வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். 77-வது பிறந்தநாள்: பிரதமருக்கு சோனியா, கருணாநிதி வாழ்த்து அமெரிக்காவில் நடக்கும் ஜி-20 மாநாட்டுக்கு சென்றுள்ள மன்மோகன் சிங் அங்கு தன் தனது 77-வது பிறந்தநாளைக் இன்று கொண்டாடினார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சோனியா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார். தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் : முதல்வர் விருப்பம் தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று, காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி தனது விருப்பத்தை வெளியிட்டார். அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழா காஞ்சிபுரத்தில் நடந்தது. தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் விழா துவக்கவுரை ஆற்றினார். பின்னர், முதல்வர் கருணாநிதி, கி.வீரமணி, தவத்திரு. பொன்னம்பல அடிகளார் மற்றும் வ.சே. குழந்தை சாமி ஆகியோருக்கு முறையே, அண்ணா, தந்தை பெரியார், கலைஞர் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் விருதுகள் வழங்கப்பட்டது.பின்னர், தி.மு.க., சார்பில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக, முதல்வர் கருணாநிதி ஏற்புரை ஆற்றினார். அதில், காஞ்சிபுரத்தில் 20 கோடி ரூபாய் செலவில், வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்படும் என்றும், 20 கோடியில் அண்ணா இன்ஜினியரிங் கல்லூரி துவங்கப்படும் என்றும் தெரிவித்தார். தீர்மானத்தில் குறிப்பிட்டபடி, தமிழ் இந்தியாவின் ஆட்சிமொழியாக வரவேண்டும் என்ற தனது ஆவலை அப்போது முதல்வர் வெளியிட்டார். இம்மாநாட்டின் சூளுரையாக, அண்ணா சாட்சியாக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம், உறுதியுடன் செயல்படுவோம் என தெரிவித்தார். அணு சக்தி விவகாரத்தில் ஈரானை கண்காணிப்போம்: ஒபாமா அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜி-20 நாடுகளின் மாநாட்டின் முடிவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்று சர்வதேச சமுதாயம் விரும்புகிறது. எனவே வருகிற அக்டோபர் 1-ந்தேதி நடைபெறும் பேச்சு வார்த்தைக்கு ஈரான் வரும்போது தனது தரப்பில் தெளிவான விளக்கத்தை தரவேண்டும். இந்த விஷயத்தில் தன்னை அனைத்து நாடுகளும் கண்காணிக்கின்றன என்பதையும் ஈரான் உணரவேண்டும். இவ்வாறு ஒபாமா கூறினார். வாலிபருக்கு வெட்டு : போலீஸ் குவிப்பு முதுகுளத்தூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதனால் பல கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (23). இவர் புழுதிகுளம் பகுதியில் வயல்களில் டிராக்டரில் உழவுப் பணி செய்து,பணம் வசூல் செய்துள்ளார். இதனை மற்றொரு தரப்பை சேர்ந்த ராமமூர்த்தி தட்டிக் கேட்டுள்ளார். இவர்களுக்கிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு ராமமூர்த்தி அரிவாளால், சக்திவேலை வெட்டினார். காயமடைந்த சக்திவேல் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியிலுள்ள கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டது. எஸ்.பி., பிரதீப்குமார் உத்தரவின்பேரில் முதுகுளத்தூர், கீழத்தூவல் மற்றும் பல கிராமங்களில் இரவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புனேயில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி மராட்டிய மாநிலம் புனேயில் மேலும் ஒருவர் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியானார். இதை தொடர்ந்து புனே நகரில் மட்டும் இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |