![]() அரசியல் காங்கிரசில் சேர விஜயசாந்தி முடிவு அ.தி.மு.க.வில் பாராளுமன்ற தொகுதி பங்கீட்டுக்குழு!.ஜெயலலிதா அறிவிப்பு!. ![]() சென்னை,மார்ச் 2- அ.தி.மு.க.வில் பாராளுமன்ற தொகுதி பங்கீட்டுக் குழுவினை ஜெயலலிதா அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இதில் தீவிர கவனம் செலுத்தி தங்களை தயார்ப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கூட்டணி அமைப்பதில் விரைவாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அணியில் ஏற்கனவே இருக்கும் சில கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு கட்சிகள் புதிதாக கூட்டணி சேர்ந்துள்ளன. அடுத்த கட்டமாக தொகுதி பங்கீடுக்காக குழுவும் நியமிக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விரைவில் நடைபெற உள்ள 2009 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொகுதிப் பங்கீட்டுக்குழு அமைக்கப்படுகிறது என்பதையும் அதில் கீழ்க்கண்டவர்கள் இடம்பெறுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி.ஜெயக்குமார், கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை. இவ்வாறு அதில் ஜெயலலிதா கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை!.குலாம் நபி ஆசாத் நாளை சென்னை வருகிறார்!.கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். ![]() சென்னை,மார்ச் 1- காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் நாளை(திங்கட்கிழமை) சென்னை வருகிறார். பாராளுமன்ற தேர்தல் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் நாளை(திங்கட்கிழமை) சென்னை வருகிறார். அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளின் கருத்துக்களை அவர் கேட்டறிகிறார். பின்னர் அவர் மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். அவரின் உடல் நிலை குறித்தும், பாராளுமன்ற தேர்தல் குறித்தும் அவர் விவாதிப்பார். ஏற்கனவே குலாம்நபி ஆசாத், டெல்லியில் தமிழக எம்.பி.க்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து இருக்கிறார். தற்போது நடைபெறும் இந்த கூட்டத்திலும் கலந்து கொண்டு ஒத்த முடிவுகளை அகில இந்திய தலைவர் சோனியாகாந்தியிடம் தெரிவிப்பார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை தற்போது உள்ள மாநில, மாவட்ட மற்றும் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் தேர்தல் முடியும் வரை அதே பொறுப்பில் செயல்படுவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்து இருக்கிறார். எங்களை பொறுத்தவரையில் கூட்டணி பற்றி முழு முடிவையும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தான் அறிவிப்பார். தற்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். கம்யூனிஸ்டுகள் இப்போது எங்களை விட்டு பிரிந்து போய் இருந்தாலும் தேர்தலுக்கு பிறகு எங்களுடன் சேருவார்கள். இது தான் உண்மை. போக போக உங்களுக்கே தெரியும். இலங்கை தமிழர் பிரச்சினையில், ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். போர் விïகம் தீர்வாக அமையாது. பேச்சுவார்த்தை தான் தீர்வாக அமையும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்து இருக்கிறோம். இந்த பிரச்சினை சம்பந்தமாக அந்த நாட்டு அரசிடம் பிரதமரும், மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜியும் வலியுறுத்தி இருக்கிறார். நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சினையால் பொது மக்கள் பாதிக்கப்பட கூடாது. கோர்ட்டு தொடர்ந்து நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் நீதிபதி கமிஷன் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார். அரசியல் ஜெயலலிதா முன்னிலையில் ராஜகண்ணப்பன் அ.தி.மு.க.வில் இணைந்தார் ![]() தமிழகம், பிப்ரவரி.28- ராஜகண்ணப்பன் தொண்டர்களுடன் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். "தாய் வீட்டுக்கு வந்தது போல மகிழ்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்த ராஜகண்ணப்பன் நேற்று சென்னையில் மக்கள் தமிழ்தேசம் கட்சியின் பொதுக்குழுவை கூட்டினார். இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அ.தி.மு.க.வில் இணைவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க. பொது செயலாளர் வீட்டுக்கு ராஜகண்ணப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்றனர். அங்கு ஜெயலலிதா முன்னிலையில் அவர்கள் அ.தி.மு.க.வில் மீண்டும் தங்களை இணைத்துக் கொண்டனர். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேற்று மாலை 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொது தேர்தலில் தி.மு.க. சார்பில் இளையான்குடி சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (முன்னாள் அமைச்சர்) நேரில் சந்தித்து மீண்டும் தன்னை கழகத்தின் உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அவருடன் தி.மு.க.வைச் சேர்ந்த சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அனிதா சைமன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் லட்சுமி ரத்தினம், இளையான்குடி பேரூராட்சி வார்டு உறுப்பினர் சபியுல்லா, பரமக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சந்திரா தினகரன், மண்டபம் ஊராட்சி மன்றத் தலைவர் வீரபத்திரன், திருப்புவனம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வி.சி.கோபி, முன்னாள் தலைவர் பாபாசாகிப், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களான தேவக்கோட்டை ஒன்றியம் இருதயராஜ், திருப்பத்தூர் ஒன்றியம் திருப்பதி, சண்முகநாதன், திருப்புவனம் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் திருப்பதி, ரமேஷ், பாரூக்ராஜா, பூமி, இப்ராஹிம்ஷா, நாகராஜ், சிங்கம்புணரி பேரூராட்சி வார்டு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, காளையார் கோவில் ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் ராமசாமி,
மானாமதுரை ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் சுப.கிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் ஊராட்சி தி.மு.க. செயலாளர் சேது தினகரன் மற்றும் ஏராளமான தி.மு.க. கிளைச் செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் இணைந்த பின்னர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. எம்.எல்.ஏ. பதவி உள்பட அடிப்படை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டேன். 6 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பொதுக்குழு தீர்மானப்படி அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளோம். இந்திய அரசியலை தீர்மானிக்கும் ஒப்பற்ற தலைவியாக விளங்கும் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுக்கொள்வதாக கூறி எங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டுள்ளோம். வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் எங்கள் உயிரையும் துச்சமாக மதித்து பணியாற்றுவோம். அ.தி.மு.க. தான் ஆக்கப்பூர்வமான இயக்கம். என்றென்றும் இந்த இயக்கத்தில் விசுவாசமாக செயல்படுவோம். அ.தி.மு.க.வில் இணைந்ததில் மனம் நெகிழ்கிறது, தாய் வீட்டுக்கு வந்தது போல மகிழ்ச்சி பொங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, "அம்மா கட்டளை எதுவாக இருந்தாலும் சிரமேற்கொண்டு செயல்படுவோம். எங்களுக்கென்று தனிப்பட்ட கோரிக்கைகள் எதுவுமில்லை" என்றார். அரசியல் தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க., புகார் மனு தமிழகம், பிப்ரவரி.27- திருமங்கலம் இடைத்தேர்தலில் கடைசி ஒருமணி நேரத்தில் 45 ஆயிரம் ஓட்டுகள் வரை பதிவானது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இனி நடக்க இருக்கும் தேர்தல்களிலாவது முறைகேடுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க., புகார் மனு அளித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க., சார்பில் எம்.பி.,க்கள் மைத்ரேயன், மலைச்சாமி மற்றும் பாலகங்கா ஆகியோர் சென்று ஒரு மனு அளித்தனர். திருமங்கலம் இடைத் தேர்தல் தொடர்பாக விரிவான முறையில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா சார்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி 9ம் தேதி நடந்த திருமங்கலம் சட்டசபை இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவின்போது மாலை 4 மணி வரை வெறும் 60 சதவீதம் மட்டுமே ஓட்டுப்பதிவாகியுள்ளது. ஓட்டுப்பதிவு முடியும் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், 30 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இறுதியில் 88.89 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் 45 ஆயிரம் ஓட்டுகள் வரை பதிவாகியுள்ளது. நாங்கள் மேற்கொண்ட விசாரணையின்படி நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தேர்தல் ஆணையம் சார்பில் பார்வையாளர்கள் அனுப்பப்பட்டும்கூட இதுபோன்ற முறைகேடுகள் எப்படி நடந்தது என்பது பற்றியும் இதை ஏன் தடுக்க முடியவில்லை என்பது பற்றியும் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். அரசியல் சட்ட அமைப்பிற்கு உட்பட்ட ஒரு அங்கம் தான் தலைமைத் தேர்தல் ஆணையம். எனவே இனி மேல் நடக்கவுள்ள தேர்தல்களாவது நியாயமான வகையில் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் கூச்சல், குழப்பம் : அ.தி.மு.க - ம.தி.மு.க - பா.ம.க - கம்யூ., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம் தமிழகம், பிப்ரவரி.21- சென்னை ஐகோர்ட் சம்பவம் தொடர்பாக விவாதிக்க அனுமதி கேட்டு அ.தி.மு.க -ம.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். தமிழக சட்டசபை நேற்று துவங்கியதும் அ.தி.மு.க - பா.ம.க - ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல். ஏ.,க்கள் சென்னை ஐகோர்ட்டில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். "கேள்வி நேரத்திற்கு பிறகு இதர பிரச்னைகள் குறித்து பேசுங்கள்' என்று சபாநாயகர் தெரிவித்தார்.இதை ஏற்காமல் எம்.எல்.ஏ.,க்கள் குரல் எழுப்பினர். விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். பா.ம.க.,வினர் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பியவாறு இருந்ததால், அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கேள்வி நேரம் நடந்தது.கேள்வி நேரம் முடிந்ததும், அமைச்சர் துரைமுருகன், விதி 110ன் கீழ் அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது, ஐகோர்ட் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஜெயக்குமார், வேலுச்சாமி உள்ளிட்டோர் குரல் எழுப்பினர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வமும் அனுமதிக்குமாறு கோரினார். இதற்கு அனுமதி மறுக்கப் பட்ட நிலையில், அ.தி.மு.க - ம.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபையில் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, அமைச்சர் துரைமுருகன் ஐகோர்ட் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து அறிக்கை படித்தார்.அப்போது, அமைச்சர் அன்பழகன் எழுந்து, "ஐகோர்டில் நடந்த சம்பவம் குறித்து தலைமை நீதிபதியின் ஆணையின் படி நீதிமன்றமே முடிவு எடுத்துள்ளது. இதில், அரசிற்கோ, அரசியல் கட்சிகளுக்கோ தொடர்பு இல்லை. நீதிமன்றத்தின் கருத்தை அவையில் தெரிவிப்பதற்காக இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது' என்றார்.அதன் பிறகும், எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று தொடர் கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் அமைச்சர் துரைமுருகன் அறிக்கையை வாசித்து முடித்தார். இது தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பினர். "110வது விதியின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் மீது விவாதம் நடத்த முடியாது. அனைவரும் அமருங்கள்' என்று சபாநாயகர் ஆவுடையப்பன் வேண்டுகோள் விடுத்தார். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கவில்லை.
"ஐகோர்ட்டில் ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மேல் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் அரசியலுக்காக வாதிடுகிறீர்கள்; நீதிக்காக வாதிடவில்லை' என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.அதன் பிறகும், எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து கோஷமிட்டவாறு இருந்தனர். சபாநாயகர் ஆவுடையப்பன், "சபை நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டால் உங்களை வெளியேற்ற வேண்டி வரும்' என எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்பும் அமளி ஓயவில்லை. இந்நிலையில், சபை நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்யும் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் ஆவுடையப்பன், சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவைக் காவலர்கள் அவர்களை வெளியேற்றினர்.வெளியேறாமல் முரண்டு பிடித்த இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., சிவபுண்ணியத்தை தூக்குவதற்கு காவலர்கள் முயற்சி செய்தனர். அதன் பின் அவராகவே வெளியேறினார். அதே போல், அ.தி.மு.க., எம். எல்.ஏ., கருப்புசாமியும் சபைக் காவலர்களிடம் முரண்டு பிடித்து, பின் வெளியேற்றப்பட்டார். ம.தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களும் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. அ.தி.மு.க - ம.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தொடர் கோஷங்களாலும், அவர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டதாலும் சட்டசபை வளாகத்தில் நேற்று தொடர்ந்து பரபரப்பு நிலவியது. அரசியல் பிப்ரவரி 3-ந் தேதி அண்ணா நினைவு நாளையொட்டி, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில், சென்னையில் அமைதிப்பேரணி தமிழகம், ஜன.30- பிப்ரவரி 3-ந் தேதி அண்ணா நினைவு நாளையொட்டி, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில், சென்னையில் அமைதிப்பேரணி நடக்கிறது. இது குறித்து, சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் ஜெ.அன்பழகன், புரசை வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பிப்ரவரி மாதம் 3-ந் தேதி, உலகத்தமிழர் உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்துக்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் பேரறிஞர் அண்ணாவின் 40-வது நினைவு நாள் ஆகும். இதையொட்டி, 3-ந் தேதி காலையில், சென்னையில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைதிப்பேரணி நடக்கிறது. வாலாஜா சாலையில் உள்ள முதல்-அமைச்சர் கருணாநிதியின் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் இருந்து அமைதிப்பேரணி புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்று அடையும். காலை 7 மணிக்கு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில், தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில், பொதுச்செயலாளர் அமைச்சர் அன்பழகன், பொருளாளர் அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன்மைச்செயலாளர் ஆற்காடு வீராசாமி மற்றும் கழக முன்னணியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக்கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட தி.மு.க.வின் அனைத்து அணியினரும் அண்ணன் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வர வேண்டுகிறோம். இவ்வாறு சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் ஜெ.அன்பழகன், புரசை வி.எஸ்.பாபு ஆகியோர் கூறி உள்ளனர். அரசியல் "நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே என்ற குறிக்கோளை அடைவோம்"- ஜெயலலிதா தமிழகம், ஜன.16- எம்ஜிஆரின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, பேரறிஞர் அண்ணா தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்ப நிலையை மாற்றிக்காட்டியவர். அவருடைய தம்பியாக அரசியல் வானில் வளர்ந்து ஒளி வீசி மிக உயர்ந்த இடத்தை அடைந்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு கிடைத்த வெற்றியானது இயற்கையானது, இமயம் போன்றது. அப்படிப்பட்ட வெற்றியை எட்டிப்பிடிக்க முயன்றவர்கள் சறுக்கி விழுந்து விட்டனர். எம்ஜிஆருக்கு பிறகு அவரது ஆட்சியை மீண்டும் அமைக்க நான் பட்ட துன்ப துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றைக்கு தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை சுட்டிக்காட்டி போராட்டங்களை நடத்தி வருவதுடன் மக்களுக்கு சேவை செய்வதிலும் முனைப்பு காட்டி வருகிறது. ஆளும் காட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணி என்பதே அதிமுகவின் குறிக்கோள். நாம் தொய்வின்றி மக்கள் பணியாற்றி துணிச்சலாக செயலாற்ற வேண்டும். அவ்வாறு துணிந்து செயல்படுபவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும். நாளைய வெற்றி நமக்காக காத்திருக்கிறது. வானத்தையே வசப்படுத்தும் வலிமை மிக்க மக்கள் தலைவரான எம்ஜிஆரின் பிறந்த நாளில் பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற நெறிமுறைகளை பின்பற்றி விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும் கருணாநிதியின் அராஜகங்களை, வன்முறை வெறியாட்டங்களை, நிர்வாகத் திறமையின்மையை மக்கள் முன் எடுத்து வைத்து துணிச்சலுடன் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை பறிப்போம். "மறைந்தும் மறையாத மாமனிதரான தமிழக மக்கள் நினைவில் என்றென்றும் நிற்கும் எம்ஜிஆர் பிறந்த நாளில் மக்களுக்கு சேவை செய்வோம். நாளை நமதே; நாற்பதும் நமதே என்ற குறிக்கோளை அடைவோம்." என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அரசியல் அதிசய எம்.எல்.ஏ. தமிழகம், ஜன.13- வில்லிவாக்கம் தொகுதியில் சட்டசபைத் தேர்தலுக்கு எல்லா கட்சி வேட்பாளர்களையும் பேட்டி எடுத்ததில், ரங்கனாதன் அவர்கள் பேட்டி சற்று வித்தியாசமாக இருந்தது. எந்த வகையில் என்றால், எந்தெந்த பகுதிகளில், வார்டுகளில், என்னென்ன குறைகள் உள்ளன, எப்படி தீர்வு காணமுடியும் என்ப்தைப்பற்றி மிகவும் தெளிவாக கூறியதில் இருந்து, அவர் தொகுதிக்குள்,முழுவதுமாக சுற்றி அலைந்து, அலசி, ஆராய்ந்துள்ளார் என்பதை தெளிவுபடுத்தியது. மூன்று மணி நேரம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்த பேட்டியில், எங்கெங்கு சாலைகள் செப்பனிடப்படவேண்டும், புதியதாக போடப்படவேண்டும், மின்சார விளக்குகள், தண்ணீர் வசதிகள் என்று விவரங்களை விரல் நுனியில் வைத்து பேசியதை பதிவு செய்தேன். தேர்தலில் வெற்றிபெற்ற பின் படிப்படியாக அவர் நடவடிக்கைகளை, உடன் இருந்து பார்த்த போது வில்லிவாக்கம் தொகுதியின் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. உள்ளாட்சி தேர்தல் அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில், அவருடைய உழைப்பும், பங்கும், மாவட்டச்செயலாளா¢ன் வேலையை எளிதாக்கியது மட்டுமல்லாது, வேட்பாளர்களுக்கும் பெரும் ஊக்கமளித்ததை காணமுடிந்தது. வெற்றி பெற்ற கவுன்சிலர்களை அழைத்து, அவர்கள் பகுதியில் உள்ள நிறைகுறைகளை பட்டியலிட்டு, உடனடியாக நிறைவேற்ற முடிவதை செய்ய ஏற்பாடுகளை முடுக்கிவிட்டும்,அடுத்து செய்யவேண்டியவைகளுக்கு, தீர்மானம் போடுதல், போன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தியதையும் காண முடிந்தது. மழை மற்றும் வெள்ளம் மழைவெள்ளத்தின்போது, நகராட்சி அலுவல்ர்கள், கவுன்சிலர்களுடன், பாதிக்கப்பட்ட இடங்களில் வந்து உடனடி நடவடிக்கை எடுத்ததை, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராட்டினர். அடிப்படை விவரங்களை விளக்குதல் அமபத்தூர் பானு நகரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், ஒரு பொ¢யவர், தங்களுக்கு, குடியிருக்கும் புறம்போக்கு நிலத்திற்கு, பட்டா, பல வருடங்களாக, கிடைக்கவில்லை என்று புகார் கூற, அதற்கு பதிலளித்துப் பேசிய ரங்கனாதன், புறம்போக்கில் எத்தனை வகை உள்ளது என்பதையும், இவர்கள் இருக்கும் இடத்தை, பட்டா தரும் தகுதி பெறுமாறு, அரசிடம் முறையீடு செய்த பின்புதான், பட்டா வழங்கமுடியும் என்பதை மிகவும் விளக்கமாக எடுத்து கூறிய விதம் எடுத்துக் காட்டாக அமைந்தது. ஆக்கிரமிப்பை அகற்றுதல் வில்லிவாக்கத்தில் ஒரு பகுதி மக்கள், அரசு அதிகாரிகள், தங்கள் குடியிருப்பு பகுதிகளை பொக்லைன் மெஷின் வைத்து அகற்றுகிறார்கள், என்று, கூட்டமாக வந்து முற்றுகையிட்டபோது, அந்த இடம், என்றைக்கிருந்தாலும், காலி செய்து தான் ஆகவேண்டும் என்பதை, மிகவும் பொறுமையுடன், பலமுறை , எடுத்துச்சொல்லி, மாற்று இடம் தர ஏற்பாடு செய்வதாக கூறி, அவர்களை சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள் என்று பணமும், கொடுத்து அனுப்பியதைப் பார்க்க முடிந்தது. மேம்பாலங்கள் இந்த பகுதியில் 4 முதல் 6 மேம்பாலங்கள் வர உள்ளன என்று தேர்தலுக்கு முன்பே சொன்னார். அதே போல மேம்பாலங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.வரும் ஐந்தாண்டுக்ளுக்குள் அவை முடிக்கப்பட எல்லாவித முயற்சிகளும் செய்துகொண்டிருக்கிறார் என்பதை, அந்தந்த துறைக்கு செல்லும்போது, நமக்கு செய்திகள் வருகின்றன. எம்.எல்.ஏ. அலுவலகம் அம்பத்தூர் நகராட்சி கட்டிடத்திற்குப்பக்கத்தில், எம்.எல்.ஏ.ரங்கனாதன் அவர்களின் அலுவலகம்,ஒரு உதவியாளருடனும், மூத்த கழக, நகரமன்ற உறுப்பினரான, அ.இர. நாதன் அவர்கள் வழிகாட்டுதலுடனும் செயல்படுகிறது. மற்ற எம்.எல்.ஏ.க்களைப்போல் இவருக்கும் P.A க்கள் இருந்தபோதிலும், வரும் போன் அழைப்புக்களை, இவரே, நேரடியாக கையாள்வதோடு மட்டுமல்லாமல், அழைப்பவரின் பகுதிக்கு, தான் என்றைக்கு வர இருக்கிறேன், என்பதையும் தெரிவிப்பது நல்ல ஏற்பாடு மட்டுமல்ல, மற்ற அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டியதாகும். அந்த பகுதிக்கு வரும்போது, அந்த நபரை பெயர் சொல்லி மேடைக்கு அழைத்து, குறையைக்கேட்டு, அதிகாரிகளை உடனுக்குடன், விளக்கம் அளிக்க, பணிக்கிறார். தினமும் தொகுதியில் வில்லிவாக்கம் தொகுதி மிகப் பெரியது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இவ்வளவு பெரிய தொகுதியில் எதாவது ஒரு பகுதியில், ரங்கனாதன்,தினமும், மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திலோ, வேறு மக்கள் முன்னேற்றப் பணியிலோ, ஈடுபட்டிருப்பதைக் காணலாம். சட்டசபை நடக்கும் நாட்களில் கூட, மாலை நேரங்களில், அதிகாரிகளுடன் தொகுதியில் பணியாற்றுவதைப் பார்க்கலாம். முன்பு ஜே.சி.டி.பிரபாகரன், எம்.எல்.ஆவாக இருந்த போது அம்பத்தூரில் சிறப்பான முன்னேற்றம் இருந்ததைப்போல, பல மடங்கு முன்னேற்றங்களை, இவருடைய பணிக்காலத்தில் எதிர்பார்க்கலாம் என்பது கட்சி வேறுபாடின்றி எல்லா மக்களும் எதிர் பார்க்கிறார்கள். ஜே.சி.டி. க்கு, எம்.ஜி.ஆர். அவர்கள் உற்ற துணையக இருந்தது போல், ரங்கனாதனுக்கு, உள்ளாட்சி மற்றும் ஊரகத்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களும், முதலமைச்சர் கலைஞர், கழக மாவட்ட செயலாளர் இ.ஏ.பி.சிவாஜி , ஆகியோர் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள் என்பது பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, பொது மக்களும் உணர்ந்தே உள்ளனர். மரங்கள் நடுவதில் ஆர்வம் இவருடைய முந்தைய தொகுதியான புரசைவாக்கத்தில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு இன்றும் பராமாரிக்கப்பட்டு வருகின்றன. அதே போல் அம்பத்தூரிலும், மரங்கள் நடுவதைத் தொடங்கியுள்ளார். அதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற ஆள் போட்டு, தன்னுடைய பணத்தில் இருந்து சம்பளமும் தருகிறார் என்றால். . . . இவர் ஒரு வித்தியாசமான எம்.எல்.ஏ.தானே!
அரசியல் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் தி.மு.க. அரசு இலங்கையில் யுத்தம் தீவிரமடைவதை விரும்புகிறதா? தமிழகம், ஜன.10- இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியதால், புலிகள் வலுவிழந்துவிட்டதாக வரும் தகவல்கள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார்" என முதல்வர் கலைஞரிடம் காங்கிரஸ் அரசு வாக்குறுதி கொடுத்து ஒரு மாதம் ஆகிறது. அந்த வாக்குறுதி என்னவானது? காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்பமொய்லியும், மகிந்த ராஜபக்ஷே அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பேசியபேச்சும் தமிழகத்தில் தகிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. "இலங்கையில் போரை நடத்துவதே இந்தியாதான். கிளிநொச்சியைக் கைப்பற்றியது இந்திய அரசின் வழிகாட்டுதலில்தான்' என்றெல்லாம் தமிழ் உணர்வாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். "இவ்வளவு தூரம் யுத்தம் நடந்த பிறகும் இந்திய அரசு மவுனம் சாதிப்பதுதான் இதுபோன்ற பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இலங்கைத் தமிழ் மக்கள் மீது மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறையின்மையையே இது காட்டுகிறது". திருமங்கலம் தேர்தல் பிரச்சாரம் நிறைவு-9 ஆம் தேதி வாக்குப்பதிவு திருமங்கலம், ஜன.8- திருமங்கலம் தொகுதியில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி ம.தி.மு.க. எம்.எல்.ஏ. வீர. இளவரசன் மரணம் அடைந்ததைத்தொடர்ந்து தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. லதா அதியமான் (தி.மு.க.), முத்துராமலிங்கம் (அ.தி.மு.க.), தனபாண்டியன் (தே.மு.தி.க.) பத்மநாபன் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி) உள்பட 26 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.பிரசாரம் முடிவுக்கு வந்தபின்னர் மாலை 5 மணிக்கு மேல் இந்த தொகுதிக்குள் தங்கியுள்ள வெளி மாவட்ட மற்றும் தொகுதியை சாராத அரசியல் கட்சியினர், வெளியாட்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து நேற்று மாலை 5 மணிக்கு பின்னர் அவர்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறினார்கள். திருமங்கலத்தில் நேற்று மாலைக்கு பின்னர் அரசியல் கட்சிகளின் கொடி கட்டிய வாகனங்கள் வெளியேறிக்கொண்டே இருந்தன. பஸ் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது. அங்கு போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் இந்த தொகுதிக்குள் வெளி மாவட்டத்தில் இருந்து 15 வழிகள் வழியாகத்தான் வர முடியும். இந்த வழிகள் அனைத்திலுமே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.தொகுதிக்குள் செல்லும் வாகனங்களில் ஆயுதம் ஏதும் உள்ளதா? மதுபாட்டில்கள் இருக்கின்றனவா? தொகுதியை சாராதவர்கள் செல்கின்றனரா? என பார்வையிட்டபின்னரே தொகுதிக்குள் வாகனங்கள் அனுப்பப்பட்டன. நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் தான் அரசியல் கட்சியினர் இருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட போட்டோ ஒட்டிய 9 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளர் கொண்டு வர வேண்டும். அவர்கள் மட்டுமே ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள். ரேஷன் கார்டுகள் அனுமதிக்கப்படமாட்டாது. வாக்குச்சாவடிகளில் இயந்திர துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் தொகுதி முழுவதும் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். 33 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்ததாகவும், 65 இடங்கள் பதற்றம் நிறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் ராணுவப்படையினரும், போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள். மொத்தம் 500 துணை ராணுவத்தினரும், 4 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். திருமங்கலம் தொகுதி ஓட்டுகளை மதுரை மருத்துவக்கல்லூரியில் எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் இடத்தை கலெக்டர் சீத்தாராமன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து ஓட்டு எண்ணப்படும். பகல் 1 மணிக்குள் முழுமையாக முடிவு தெரிந்து விடும் என அதிகாரி ஒருவர் கூறினார். இந்த தேர்தலின்போது, ஓட்டுக்கு பணம் கொடுப்பதாகவும், வன்முறை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சி மீது புகார் கூறியது. போலீசார் ஒருதலைபட்சமாக நடப்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதன் பேரில் போலீஸ் அதிகாரிகள் சிலர் மாற்றப்பட்டனர்இந்தநிலையில் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என்பதற்காக துணை ராணுவ பாதுகாப்புக்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்தது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதம் இல்லாமல் பிரசாரம் முடிவடைந்தது. |