"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்"- தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

இன்றைய (04-01-2010) செய்திப் புகைப்படங்கள்


தூக்க மாத்திரை கொடுத்து கணவன் படு கொலை: நாடகம் ஆடிய மனைவி,கள்ளக்காதலனுடன் கைது


ஆவடியில், காதல் மோகத்தில், கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .சென்னை ஆவடி, பஜார் நகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார்(24). அமைந்தகரையில் உள்ள சைக்கிள் கடையில் பணியாற்றி வந்தார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரேகா சுவீட்டி(20) என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரலில் திருமணம் முடிந்தது, இருவரும் ஆவடியில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் குடியேறினர்.இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி, தனது சகோதரர் திருமணத்திற்கு சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு ரேகா சென்றார்.

இந்நிலையில், வருவதாக கூறிய தனது கணவர் வரவில்லை என, ஆவடியில் இருந்த அசோக்குமாரின் பெரியப்பா ரத்னா லாலுக்கு தொலைபேசியில் ரேகா தெரிவித்தார். இதையடுத்து, ரத்னா லால் அசோக்குமாரை தேடினார். அசோக்குமாரின் மொபைல் போனை தொடர்பு கொண்டபோது அதுவும், "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, ஆவடி போலீசில், கடந்த டிசம்பர் 2ம் தேதி, ரத்னா லால் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், அம்பத்தூர் துணை கமிஷனர் வரதராஜு (பொறுப்பு) கண்காணிப்பில், ஆவடி உதவிக் கமிஷனர் அழகர் ராஜா, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், எஸ்.ஐ., பெரியபாண்டி மற்றும் போலீசாரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

தனிப்படை போலீசார், ரேகாவை மீண்டும் அழைத்து நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து, ரேகா மீதான போலீசின் பிடி இறுகவே, கணவனை, கள்ளக்காதனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.இதுகுறித்த விசாரணையில், ரேகா திருமணத்திற்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தார். அங்கு, ஆற்காட்டைச் சேர்ந்த சையது ஆசிம் (25) என்பவர் தனது சித்தப்பாவின் பேன்சி கடையில் பணியாற்றி வந்தார். அடிக்கடி பேன்சி கடைக்கு ரேகா சென்றதால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து, ஜாலியாக இருந்துள்ளனர். இந்நிலையில், குடும்ப கவுரவம் கருதி, அசோக்குமாருடனான திருமணத்திற்கு ரேகா ஒப்புக் கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்து, ஆவடி வந்த பின்பும், தனது காதலனுடனான தொடர்பை, ரேகா விடவில்லை. ஆசிம் அடிக்கடி ஆவடி வந்து, காதலியைச் சந்தித்து, தனது கள்ளக்காதலை வளர்த்துள்ளார்.ரேகாவுக்கு, ஆசிமை பிரிய மனமில்லாத நிலையில், இருவரும் சேர்ந்து, தங்களுக்கு தடையாக இருக்கும் அசோக்குமாரை கொல்ல திட்டமிட்டுள்ளனர். ஆசிம் தனது நண்பரான, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (19) மூலம், நவம்பர் 26ம் தேதி, 30 தூக்க மாத்திரைகளை ரேகாவிடம் கொடுத்துள்ளார். அன்று இரவு, பாலில் அனைத்து மாத்திரைகளையும் கலந்த ரேகா, கணவனை குடிக்கச் செய்தார். அசோக்குமாரும் மனைவியை நம்பி குடித்ததும், மயங்கினார். கணவன் இறந்து விட்டதாக நினைத்த ரேகா, ஆசிமிற்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆசிம், தனது நண்பர் வினோத் மற்றும் ஆற்காட்டைச் சேர்ந்த, கால் டாக்சி வைத்திருக்கும் மற்றொரு நண்பரான தாலிப் பாட்சா(21) ஆகியோருடன் ஆவடி வந்தார்.வீட்டில் இருந்து காரில் அசோக்குமாரை ஏற்றும் போது, அவருக்கு உயிர் இருப்பது தெரிந்து, ரேகா மற்றும் ஆசிமின் நண்பர்கள் பிடித்துக் கொள்ள, ஆசிம் கழுத்தை நெரித்து, அசோக்குமாரை கொன்றுள்ளார். காரில் ஏற்றி மூவரும் ஆற்காடு சென்று அங்கிருந்து ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஜி.டி., நகர் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில், வாகனம் ஒன்றில் ஆட்கள் வரவே, அப்படியே பிணத்தை போட்டுவிட்டு, தப்பியுள்ளனர். ஜி.டி., நகர் காட்டுப்பகுதியில், துர்நாற்றம் வீசுவதாக தகவல் வரவே, அப்பகுதி போலீசார் பிணத்தை கைப்பற்றி, அடையாளம் தெரியாதவர் என்ற பெயரில் அடக்கம் செய்துவிட்டனர்.இதற்கிடையில், கணவனை கொலை செய்த ரேகா ஒன்றும் அறியாதவர் போன்று ராஜஸ்தான் சென்று பின், அங்கிருந்து கணவன் அங்கு வரவில்லை என்று அவரது பெரியப்பாவிற்கு போன் செய்துள்ளார். இவ்வாறு, விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, ரேகா சுவீட்டி, கள்ளக்காதலன் ஆசிம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் வினோத், தாலிப் பாட்சா ஆகியோரை ஆவடி தனிப்படை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். சமயோஜிதமாக செயல்பட்டு, கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார்.


ஏமன் நாட்டு தீவிரவாத எதிர்ப்பு போலீசுக்கு ரூ.700 கோடி நிதி உதவி
இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு


ஏமன் நாட்டில் தீவிரவாதத்தை சமாளிப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள தீவிரவாத எதிர்ப்பு போலீசுக்கு ரூ.700 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் அறிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஏமன் தீவிரவாதத்துக்கு தொட்டிலாகவும், சொர்க்கமாகவும் இருக்கிறது. அது உலக அமைதிக்கு ஆபத்தாக இருக்கிறது. எனவே ஏமன் நாட்டு தீவிரவாத எதிர்ப்பு போலீசுக்கு வருகிற 2011-ம் ஆண்டு வரை 700 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் இந்த போலீசுக்கு நிதி உதவி அளிப்பதாக உறுதி அளித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


இன்றைய செய்திப் புகைப்படங்கள்












வன்னியர்கள் வீணாகி விட்டோம்: ராமதாஸ் 'விரக்தி'


கல்வி தேர்ச்சி விழுக்காட்டில் விருதுநகர் முதலிடம் பிடித்தது போல் மதுபான விற்பனையில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரத்தில் சமூக முன்னேற்ற சங்கத்தின் ஐந்தாவது மாநில மாநாடு நடந்தது. இதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:இந்த புத்தாண்டு நம் சமுதாயத்தினருக்கு உன்னதமான ஆண்டாகவும், வெற்றி ஆண்டாகவும் இருக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன். நம் சமுதாயத்தினரின் நிலையை ஆராய்ந்து பார்க்கும் போது நாம் இன்னும் கீழ் நிலையில் தான் இருக்கிறோம். ஆட்சி அதிகாரம் செய்ய வேண்டும்.முதல்வர் கருணாநிதி மூன்று கோடி மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதாக கூறுகிறார். ஆனால், தமிழகத்தில் 6.24 கோடி மக்கள் உள்ளனர். அதில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மூன்று கோடி மக்கள் அரை நிர்வாணமாக தான் உள்ளனர்.

அவர்களில் இரண்டு கோடி பேர் வன்னியர். ஆட்சி அதிகாரத்திற்காக வன்னியர்களை திட்டமிட்டு அழிக்க நினைக்கின்றனர். அரசியலில் வன்னியர்கள் அநியாயமாக வீணாகி விட்டோம்.கடந்த 1952ம் ஆண்டு உழவர் உழைப்பாளர் கட்சி, உழவர் உழைப்பாளர் பொதுவுடமை கட்சி ஆரம்பித்த வன்னியர்களான மாணிக்கவேல், எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி ஆகியோர் அமைச்சர் பதவிக்காக காங்கிரசிடம் கட்சியை அடமானம் வைத் தனர். காங்கிரசிடம் வன்னிய சமுதாயத்திற்கு தேவையை பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் கேட்கவில்லை.கடந்த 1980ல் இட ஒதுக்கீடு சம்பந்தமாக எம்.ஜி.ஆர்., ஒரு கமிஷன் அமைத்தார். அக்கமிஷன் நிறைவேற்றுவதற்குள் அவர் இறந்தார்.

இட ஒதுக்கீட்டிற்கு ஏழு நாள் மறியல் போராட்டத்தை நடத்தி வன்னிய மக்கள் சிலரை இழந்தோம். கடந்த தேர்தலில் திட்டமிட்டே நம்மை தோற்கடித்தனர். இதற் காக அந்த கட்சியினரும், மேல் ஜாதியினரும் மறைமுகமாக கூட்டு சேர்ந்து தோற்கடித்து விட்டனர். பா.ம.க., வளர்ச்சியை பிடிக்காமல் அழிக்க நினைக்கின் றனர். வன்னியர் ஓட்டுக்களை பணத்தை கொடுத்து வாங்குகின் றனர். சினிமா, "டிவி' சீரியல்களால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கெட்டு விட்டனர். கல்வி தேர்ச்சி விழுக்காட்டில் விருதுநகர் முதலிடம் பிடித்துள் ளது. ஆனால், 10 ஆயிரத்து 200 ரூபாய் மது விற்பனையில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. சமுதாயத்தினரை மதுகுடிக்க வைத்து குடிமகனாக வைத்திருக்க பார்க்கின்றனர். நிலக்கிழார் என கூறி வந்த சமுதாயத்தினர் ரியல் எஸ்டேட்களுக் காக நிலங்களை விற்று விட்டு ஒரு வீட்டுமனை பட்டா கேட்டு நிற்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.












நவீன ரக போர் விமானம்-ரஷியா சோதனை நடத்தி பார்க்கிறது


ரஷியா 5-வது தலைமுறை போர் விமானத்தை இந்த மாதம் சோதித்து பார்க்கிறது. இது அமெரிக்காவின் எப்.22 ரக போர் விமானத்துக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது. இந்த விமானத் தயாரிப்பில் இந்தியாவும் பங்குதாராக உள்ளது.

இந்த விமானம் இந்த மாதம் சோதித்து பார்க்கப்படுகிறது. ஓடுபாதை சோதனை கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது.

இந்த ரக விமானம் வருகிற 2015-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்படுகிறது.


மாயனூரில் கதவணை அமைக்கும் பணி 2011ல் முடியும் என ஸ்டாலின் உறுதி


"கரூர் மாவட்டம் மாயனூரில், காவிரியாற்றின் குறுக்கே 189 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை அமைக்கும் பணி, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்படும்,'' என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கரூர் மாயனூரில், காவிரியாற்றின் குறுக்கே 189 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை கட்டும் பணியை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கரூர் மாவட்டம் மாயனூரில், காவிரி ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டப்படும் என, 2008ம் ஆண்டு தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. 189 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின் மூலம், காவிரி ஆற்றில் கிடைக்கும் உபரி நீரினை, வறண்ட மாவட்டங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் அக்னி ஆறு, கோரையாறு, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகள் பயன்பெறும். கடந்தாண்டு மார்ச் மாதம், திட்டப் பணிகள் துவங்கின. பணிகளை 2011 பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தில் காவிரியின் வலது கரையில் 16 தூண்கள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது கதவணை ஷட்டர்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

திட்டத்துக்கு இதுவரை 45.58 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது. கதவணை கட்டி முடிக்கப்பட்டால், பருவ காலங்களில் 1.4 டி.எம்.சி., நீரை தேக்கி வைக்க முடியும். அப்பகுதியிலுள்ள வலது, இடது கரை கிராம மக்கள் போக்குவரத்துக்கு வசதியாக, ஏறத்தாழ 45 கி.மீ., தூரத்தை குறைக்கும் வகையில், இருவழிப் பாதையுடன் கூடிய பாலம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


தந்தை மன்னராவதற்கு குறுக்கே நிற்க மாட்டேன்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அறிவிப்பு


"இங்கிலாந்து ராணி எலிசபெத் காலத்துக்கு பிறகு என் தந்தை சார்லஸ் மன்னராவதற்கு தடையாக நான் எந்த செயலையும் செய்ய மாட்டேன்'' என்று இளவரசர் சார்லஸ் அறிவித்து இருக்கிறார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மகன் சார்லஸ் பட்டத்து இளவரசராக இருக்கிறார். அவர் கணவரை விவாகரத்து செய்த பெண்ணை மறுமணம் செய்து கொண்டதில் ராணிக்கு அவர் மீது அதிருப்தி இருக்கிறது. அதோடு சார்லசின் செயல்பாடுகளும் அவருக்கு திருப்தியை அளிக்கவில்லை. இதனால் அவர் தனக்கு பிறகு சார்லஸ் அரியணை ஏறுவதை விரும்பவில்லை.

சார்லசுக்கு பதிலாக அவர் மகனும் தன் பேரனுமான வில்லியம் தான் மன்னராக வரவேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக அவர் வில்லியமை பட்டத்துக்கு தயார்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்.

அவர் ராணியின் பிரதிநிதியாக ஆஸ்திரேலியாவுக்கும், நிïசிலாந்து நாட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறார். ராணியின் சார்பில் வெளிநாடு பயணத்தை வில்லியம் மேற்கொள்வது, இது தான் முதல் முறை ஆகும்.

இதை தொடர்ந்து ராணி எலிசபெத்துக்கு பிறகு வில்லியம் தான் மன்னராவார் என்றும் சார்லஸ் மன்னராக மாட்டார் என்றும் வதந்திகள் இங்கிலாந்து முழுவதும் உலா வர தொடங்கி உள்ளன.

இதை மறுக்கும் வகையில், "என் தந்தைக்கு தடையாக நான் இருக்க மாட்டேன்'' என்று இளவரசர் வில்லியம் அறிவித்து இருக்கிறார். `என் தந்தை மன்னராவதற்கு குறுக்கே நான் இருக்க மாட்டேன்' என்றும் அவர் அறிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் கூறுகையில், இளவரசர் வில்லியம், நிழல் மன்னராக இருக்க விரும்பவில்லை என்றும் அடுத்த சில ஆண்டுகளில் அவர் ராணுவ பணியில் கவனம் செலுத்த இருப்பதாகவும், அது தவிர, அவர் தன் அறப்பணிகளையும் தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.

தன் தந்தையின் அதிகாரத்துக்கு குறுக்கே நிற்க வில்லியம் விரும்பவில்லை என்றும் தன் காலம் என்ற ஒன்று வருவதற்கு முன்பும், தான் அதற்கு தயாராவதற்கு முன்பு அரியணை அதிகாரத்தில் உட்கார விரும்பவில்லை என்று அவரது வட்டாரம் தெரிவிக்கிறது.

அவர் மீட்புப்பணியில் ஈடுபடும் ராணுவ ஹெலிகாப்டர் விமானியாக பணியாற்றவே விரும்புகிறார். இன்னும் 4 ஆண்டுகளுக்கு அவர் விமானியாக பணியாற்றவே விரும்புகிறார் என்று அவரது வட்டாரம் தெரிவிக்கிறது.


ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் குத்திக் கொலை


ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து கொண்டே படித்துவந்த இந்திய இளைஞர் ஒருவர், பணிக்குச் செல்லும் வழியில், அடையாளம் தெரியாத கும்பலால் குத்திக் கொல்லப்பட்டார். ஆஸ்திரேலிய நாட்டில் படித்து வரும் இந்திய இளைஞர்கள் மீது இனவெறித் தாக்குதல் தொடர்ந்து நடந்து வந்தது. சமீப காலமாக நின்று போயிருந்த அந்த வெறிச் செயல், புத்தாண்டு துவங்கியதும் கொலையோடு திரும்பவும் தொடங்கியிருக்கிறது.

பஞ்சாப்பைச் சேர்ந்த நிதின் கார்க் (21) என்பவர், ஆஸ்திரேலியாவின் நியூபோர்ட் என்ற பகுதியில் தங்கிப் படித்து வந்தார். பகுதி நேரமாக மேற்கு பூட்ஸ்பிரே என்ற இடத்திலுள்ள "ஹங்க்ரி ஜாக்'ஸ்' என்ற ரெஸ்டாரென்ட்டில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை அவர் அந்த ரெஸ்டாரென்ட்டுக்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிலரால் வயிற்றில் குத்திக் கொல்லப்பட்டார். கும்பல் தப்பியோடிய பிறகு, அவர் சிறிது தூரம் ரத்தம் சிந்தியபடியே தள்ளாடியபடி நடந்து வந்துள்ளார். இதைப் பார்த்தவர்கள், அவரை ராயல் மெல்போர்ன் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி, இறந்துபோனார்.

இது குறித்து, அப்பகுதி போலீசார் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,"கொலைக்கான நோக்கம் என்ன என்பதை கண்டுபிடிக்கவில்லை. இனவெறி அடிப்படையில்தான் இக்கொலை நடந்துள்ளது என்று கூற முடியாது' என்று தெரிவித்தனர்.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections