![]() "தமிழகச் செய்திகள்,24/08/2010,காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி, ஏழை விவசாயியின் ஒரு சென்ட் நிலம் கூட எடுக்கக் கூடாது : ராமதாஸ் "விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் மாற்று இடத்தில் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே "கிரீன் பீல்டு' விமான நிலையம் அமைக்க 22 கிராமங்களில் இருந்து விவசாய நிலங்கள், வீடுகள் உட்பட 4,825 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். திருவள்ளூர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதையடுத்து "இப்பகுதியில் உள்ள விளைநிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது. தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நேற்று பா.ம.க., மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது: ஏழை மக்களின் விளை நிலங்களை கையகப்படுத்துவோம் என்றால் அங்கு ராமதாஸ் இருப்பார். விளை நிலங்களை பாழாக்கும் இடத்தில் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஒரு சென்ட் நிலத்தைக்கூட ஏழை விவசாயிகளிடம் இருந்து அபகரிக்கக் கூடாது என தொடர்ந்து நான் கூறியபோது, ஒரு சென்ட் விளை நிலத்தைக் கூட எடுக்க மாட்டேன் என சட்ட சபையில் கருணாநிதி சொன்னார். என் அறிக்கையை பார்த்து கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க ராமதாஸ் முட்டுக்கட்டை போடுகிறார்; எங்கே கட்டுவது என முதல்வர் அறிக்கை விடுகிறார். கிரீன் பீல்டு விமான நிலையம் தேவைதான். ஆனால் 22 கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று இடமான செங்குன்றம் அடுத்த அலமாதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட விமான நிலையம் பயனற்ற நிலையில் உள்ளது. அதனருகே வனத்துறைக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும், பால் பண்ணைக்கு சொந்தமாக ஆயிரம் ஏக்கர் நிலமும் உள்ளது.அங்கு ஏன் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்கக் கூடாது. நாங்கள் நில ஆர்ஜிதம் செய்யவில்லை, மண்ணழுத்த பரிசோதனைதான் செய்தோம் என முதல்வர் கூறுகிறார். விருப்பத்துக்கு மாறாக நிலங்களை அபகரிப்பதற்கு பெயர்தான் ஆர்ஜிதம்.ஆசிய வளர்ச்சி வங்கியின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 99.5 சதவீதம் ஏழைகள்தான் உள்ளனர். மீதமுள்ள அரை சதவீத பணக்காரர்கள்தான் விமானத்தில் செல்பவர்கள். இதற்காக ஏழை விவசாயிகளின் விளைநிலங்களை அபகரிக்காமல் மறுபரிசீலனை செய்து, மாற்று இடத்தில் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீதும், சம்பவ இடத்துக்கு வராத திருவள்ளூர் வருவாய் அதிகாரிகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார். காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு: மேலும் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு வங்ககடலில் உருவாகி உள்ள வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், கடலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்கிறது. சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை அதிகம் பதிவாகி உள்ளது. சென்னையில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பொன்னேரியில்தான் 184 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சோழவரத்தில் 138 மி.மீ., அம்பத்தூரில் 110 மி.மீ., கும்மிடிப்பூண்டி 105 மி.மீ., திருவள்ளூரில் 30 மி.மீ., ஊத்துக்கோட்டை 26 மி.மீ., செம்பரம்பாக்கம் 38 மி.மீ., பூண்டி 30.40 மி.மீ., தாமரைப்பாக்கம் 46 மி.மீ., திருத்தணியில் 19 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்றைய தமிழகச் செய்திப் புகைப்படங்கள் (24/08/2010) ![]()
மாற்றுத்திறன் படைத்த சாதனை வீரர்களை வருத்திய போலீசார் அரசு வேலை கேட்டு உண்ணாவிரதம் துவங்கிய மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்களை, மனிதாபிமானமே இல்லாமல் போலீசார், குற்றவாளிகள் போல் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம் சென்னையில் நடந்தது. "ஊனம் உடலில்தான்; எங்கள் மனதில் இல்லை' என்று தன்னம்பிக்கையோடு, மாற்றுத் திறன் படைத்தோர் பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகின்றனர். விளையாட்டுத் துறையிலும் சாதித்து நாட்டுக்கு பெருமை சேர்த்தோர் ஏராளம். தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை குவித்து, நாட்டுக்கு பெருமை சேர்த்த மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்கள், தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், தங்களுக்கு அரசு நிரந்தர வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாததால், மாற்றுத் திறன் படைத்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள், நேற்று காலை சென்னை அண்ணா சதுக்கம் அருகே, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினர். இதையறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் மாற்றுத் திறனாளிகளிடம் பேசினர். "மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் வந்து பேசினால், எங்கள் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு, கலைந்து செல்கிறோம்' என வீரர்கள் கூறினர். அதை காதில் வாங்காத போலீசார், "உடனடியாக இங்கிருந்து கிளம்புங்கள்; இல்லாவிட்டால் அவ்வளவுதான்...' என எச்சரித்தனர்.திடீரென அவர்கள் வைத்திருந்த உண்ணாவிரத பேனரை பறித்து வீசினர். தடுத்த விளையாட்டு வீரர்களை பிடித்து கீழே தள்ளினர். துணையாக விளங்கும் "வீல் சேர்', கைப்பிடிகளை எல்லாம் பறித்தனர். போராட்டத்தைக் கைவிட மறுத்த, வீரர்களை குற்றவாளிகளைப் போல் குண்டுக் கட்டாக தூக்கியும், தரதரவென இழுத்துச் சென்றும் வேனில் ஏற்றினர். போலீசாரின் இந்த மனிதாபிமானமற்ற செயல், தன்னம்பிக்கையோடு சாதிக்கும் வீரர்களை வெறுப்படைய வைத்தது. வீரர்கள் கூறும்போது, "சாதிப்பதற்காக பிற நாட்டு வீரர்களை போராடி ஜெயித்தோம். இன்று எங்கள் உரிமைக்காக போராடி, நம் போலீசாரிடம் ஜெயிக்க முடியலையே...' என புலம்பினர். போலீசாரின் செயலைப் பார்த்த பொதுமக்கள், "மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அமைச்சகத்தை துவக்கிய முதல்வர், பல்வேறு துறைகளிலும் வேலை அளித்து வருகிறார். ஆனால், போலீசார் மனிதாபிமானமே இல்லாமல், கொடூரமாக நடந்து கொள்கிறார்களே' என திட்டித் தீர்த்தனர். ![]() நைஜீரியா வாலிபரிடம் செல்போன் நம்பர்: போதை பொருள் பயன்படுத்துவதாக அவதூறு பரப்புவதா? நடிகை திரிஷா ஆவேசம் ஆந்திராவில் போதை பொருள் கடத்தலில் நைஜீரிய நாட்டை சேர்ந்த வாலிபர் விக்டர் என்கிற பிரட்லர் சிமாகிளமென்ட் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போதை பொருள் வாங்கிய பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் தம்பிகள் ரகுபாபு, பரத்ராஜ் ஆகியோரும் பிடிபட்டனர். நைஜீரிய வாலிபரின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான நடிகர்- நடிகைகள் செல்போன் நம்பர்கள் இருந்தன. தமிழ் நடிகை திரிஷாவின் செல்போன் நம்பரும் இருந்ததாக ஆந்திர டி.வி. சேனல்கள் பரபரப்பான செய்தி வெளியிட்டன. இதனால் திரிஷா அதிர்ச்சியானார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- போதை பொருள் கடத்தலில் கைதான நைஜீரிய வாலிபரிடம் எனது செல்போன் நம்பர் இருந்ததாக வெளியான செய்திகளை அறிந்து மனமுடைந்தேன். அவருக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது என்று தெரியாது. ஐதராபாத்தில் தங்கி இருந்த தோழி என்னிடம் தொடர்பு கொண்டு என்னைப்பற்றி அவதூறாக வெளியான செய்திகள் பற்றி சொன்னார். நைஜீரிய வாலிபர் போன் புக்கில் எனது பெயர் இல்லை என்றும், எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். போதை பொருள் விவாகரத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் இந்த புரளியை கிளப்பி விட்டுள்ளனர். நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனது பெயரை வேண்டும் என்றே இதில் இழுத்து விட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளை தொடர்பு படுத்துவது தவறு. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை பாதிக்கப்படும். சில பிரச்சினைகள் மனதை உறுதிபடுத்தும். அதே நேரம் இமேஜை உடைக்கவும் செய்யும். இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து பெயர் வாங்கும்போது இதுபோன்று இழிவுபடுத்து வது வருத்தம் அளிக்கிறது. எனக்கு இதனால் கோபம் ஏற்பட்டாலும் வீழமாட்டேன். சந்திப்பேன். எனது மேலாளர் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி வருகிறார். வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறேன். இந்த விஷயத்தில் எனது பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மானநஷ்ட வழக்கும் தொடருவேன். இவ்வாறு திரிஷா கூறியுள்ளார். ![]() ரேஷன் கடைகள் மூலம் சி.எப்.எல்., பல்புகள்: குண்டு பல்புகளை ஒழிக்க அரசு பரிசீலனை மின்சாரத்தைச் சேமிக்கவும், புவி வெப்பமடைதலை தவிர்க்கவும் அனைத்து வீடுகளுக்கும் ரேஷன் கடை வாயிலாக மானிய விலையில் சி.எப்.எல்., பல்புகள் வழங்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், அனைத்து நாடுகளிலும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27ம் தேதி தேவையற்ற மின் விளக்குகள், மின் சாதனங்கள் என ஒரு மணி நேரம் நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில் மின் வாரியம் உட்பட அரசு அலுவலகத்தில் அதிக மின்சாரத்தில் ஒளி தரும் குண்டு பல்புகள் (ஜி.எல்.எஸ்.,) பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இந்த வகை பல்புகளில் வெப்பம் அதிகளவில் இருப்பதால், கோழிப் பண்ணைகளில் முட்டைகள் குஞ்சு பொரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். அதேபோல் சோடியம் மின் விளக்குகள் அதிக மின்சாரத்தில் ஒளி தருவதால், மாற்றுத்திறன் கொண்ட பல்புகளை அரசு மாற்றி வருகிறது.மின்சாரத்தைச் சேமிக்கவும் மாற்றுத்திறன் கொண்ட சிறு குழல் (சி.எப்.எல்.,) பல்புகளை, ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ரேஷன் கார்டுக்கு 30 ரூபாய்க்கு தலா இரண்டு சி.எப்.எல்., பல்புகள் வழங்கவுள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் மாநில உளவுத்துறை போலீசார், தமிழகம் முழுவதும் சி.எப்.எல்., பல்புகள் பயன்பாடு, மக்களிடம் வரவேற்பு குறித்து ரகசியமாக சர்வே எடுத்து அரசுக்கு அளித்துள்ளனர். அதை தொடர்ந்து, ரேஷன் கடைகளில் மானிய விலையில் சி.எப்.எல்., பல்புகளை வழங்கிட அரசு, ஆயத்தப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. மின் நுகர்வை தவிர்ப்பதற்காகவும், அதிக மின்சக்தியை சேமிக்கவும் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுக்கு சொந்தமான உதவி பெறும் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு குண்டு பல்புகளை பயன்படுத்த தடை விதித்து, அரசு ஆணை வெளியிட்டுள்ளது.சி.எப்.எல்., பல்புகள் விற்பனைக்கு வரவுள்ளதால், அரசு அலுவலகத்தில் குண்டு பல்புகளைத் தவிர்த்து, 14 வாட்ஸ் கொண்ட சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முந்தைய தமிழகச் செய்திகள் ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan,044-64541144 +91-7299140319 +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly NewsPaper send your comments and corrections |