* சினிமாவில் அரசியலை நுழைத்து கெடுத்துவிட வேண்டாம்: கருணாநிதி பேச்சு * மத்திய மந்திரியிடம் பி..டி. கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு * நெல்லை எஸ்.ஐ., கொலை வழக்கு : மேலும் 2 பேர் கைது * சீன பொருட்களை புறக்கணிக்க அருணாச்சல் மாணவர்கள் அழைப்பு * கோவையில் 75 ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் * டெல்லியில் சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Download latha tamil font


COMMUNICATION(S) POINT as your Homepage

"அண்மை செய்திகள்,07/02/2010,காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,





  • சினிமாவில் அரசியலை நுழைத்து கெடுத்துவிட வேண்டாம்: கருணாநிதி பேச்சு


    தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, தமிழ் திரையுலகம் சார்பில் நேற்று நடைபெற்ற பாசத்தலைவருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் கருணாநிதி ஆற்றிய ஏற்புரையில் கூறியதாவது:- இந்த இனிய விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து-வாழ்த்தியும்-சில நல்ல அறிவுரைகளை வாழ்த்தியவர்களுக்கும், திரை உலகத்தினருக்கும் எடுத்துக் கூறியுள்ள இந்தியாவினுடைய தலைசிறந்த கலைஞர் அமிதாபச்சனுக்கு நான் முதற்கண் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    நாமெல்லாம் இங்கே ஒன்று சேர்ந்திருப்பது-அரசியல் ரீதியாக அல்ல. நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்வது - கலைக் குடும்பம் என்ற அந்த வார்த்தையின் அடிப்படையிலே தான் இங்கே ஒன்று சேர்ந்திருக்கிறோம். இதிலே அரசியலை நுழைக்க நான் விரும்பவில்லை. அரசியல் தானாக நுழைந்தால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல. அரசியலை நுழைத்து இதை யாரும் கெடுத்து விடாதீர்கள். அரசியலை நுழைத்து மேலும் நன்மைகளைச் செய்ய வேண்டுமேயல்லாமல், அரசியல் நுழைந்தால், ஆமை புகுந்த வீடாக இந்தத் திரைப்படத் துறை அமைந்து விடக் கூடாது என்பதில் நான் மிகுந்த அக்கறையாக இருக்கிறேன். ஆகவே அரசியலை நுழைக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.


    இனி அனைவரும் செஞ்சுரி போடலாம்


    மனிதர்களின் நாகரிகம் வளர, வளர அவர்களை ஆட்கொள்ளும் நோய்களின் எண்ணிக்கையும் புதிது புதிதாக வளர்ந்து கொண்டே வருகிறது. மேலும் மக்களின் சீரற்ற உணவுமுறை, பழக்க வழக்கங்கள் ஆகியவை ஆயுட்காலத்தை பெரிதும் குறைக்கின்றன. தற்போது இந்தியாவில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டுகளாக உள்ளது. சர்வதே அளவிலும் மனிதர்களின் ஆயுட்காலம் குறித்த ஆய்வுகள் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காலேஜ் ஆப் மெடிசின், வயது முதிர்வு குறித்த ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

    அவர்கள நடத்திய ஆய்வில் புதிய மருந்து ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து முக்கியமாக அல்ஜீமியர், நீரழிவு மற்றும் மாரடைப்பு நோயை தடுக்க முக்கிய பங்கு வகிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 3 நோய்களும் மனிதனின் ஆயுட்காலத்தை பெரிதும் குறைப்பதாகவும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து வெற்றி பெறுமேயானால், கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் செஞ்சுரி அடித்து சாதனை புரிவது போல, இந்த மருந்தை உட்கொண்ட அனைவரும் 100 ஆண்டுகள் வாழ்நது செஞ்சுரி அடிக்கலாம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்துமில்லை.



  • முதல்-அமைச்சர் கருணாநிதியின் பேனா, சமூக மாற்றத்தையே கொண்டு வந்துள்ளது: அமிதாப்பச்சன் புகழாரம்


    தமிழ் திரையுலகம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழாவில் நடிகர் அமிதாப்பச்சன் பேசியதாவது:- தமிழ் சினிமா எப்போதும் ஒழுக்கம் நிறைந்ததாகவும், திறமை மிக்கதாகவும், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியும் வருகிறது. இந்தியாவில் சிறந்த படங்கள் எடுக்கப்படும் போதெல்லாம் தமிழகத்தில் இருந்துதான் அதிக அளவில் அவை வெளிவந்திருக்கின்றன. தமிழ் திரையுலகில் உள்ள இதுபோன்ற திறமைகள் மும்பை படவுலகத்தில் இல்லை. அதை தமிழ் திரையுலகத்திடம் இருந்து நாங்கள் கற்கவேண்டியுள்ளது. இந்த உணர்ச்சிகரமான மாலைப் பொழுதில் உங்களது முதல்-அமைச்சரின் பார்வை மற்றும் பேனா வழியாக ஒரு சிறப்பான கலைப்பயணத்தை நான் கண்டிருக்கிறேன். உங்களது பேனா வலிமையானது தமிழகத்தில் சிறந்த திரைப்படங்கள் வெளி வருவதற்கு மட்டும் அது காரணமாக இல்லை. தமிழகத்தில் ஒரு சமூக மாற்றத்தையே கொண்டு வந்திருக்கிறது. அதற்கு உங்களுக்கு நாங்கள் பெரிதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம் என்று பேசினார்.


    தென் ஆப்ரிக்க ஓபன் டென்னிஸ் : பைனலில் போபண்ணா ஜோடி


    தென் ஆப்ரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின், இரட்டையர் பைனலுக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் அசம் உல்- ஹக்- குரோஷி ஜோடி முன்னேறியது. தென் ஆப்ரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், ஜோகனஸ்பர்க் நகரில் நடக்கிறது. நேற்று நடந்த இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் அசம் உல்- ஹக்- குரோஷி ஜோடி, அமெரிக்காவின் எரிக் புடோரக், ராஜீவ் ராம் ஜோடியை சந்தித்தது. 'டை-பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை, போபண்ணா ஜோடி 7-6 எனக் கைப்பற்றியது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணா ஜோடி, இரண்டாவது செட்டை 6-4 என தன்வசப்படுத்தியது. இறுதியில் போபண்ணா-குரோஷி ஜோடி 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.




    கோவையில் 75 ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்


    கோவை ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து, சென்னைக்கு அனுப்பப்பட இருந்த 75 ஆயிரம் திருட்டு சி.டி.க்களை போலீசார் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் மேற்கு ராமலிங்க ரோட்டை சேர்ந்த ராஜேந்திரகுமார் குப்தா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 528 மாஸ்டர் சி.டி.க்களும், சி.டி. ரைட்டர் மற்றும் பல கம்ப்யூட்டர் கருவிகளும் கைப்பற்றப்பட்டன.


    உடுமலை பகுதிகளில் காற்று சீசன் துவக்கம் : மின் காற்றாலை உற்பத்தி அதிகரிப்பு


    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காடு கணவாய் வழியாக வரும் காற்றை மையமாக கொண்டு, உடுமலை பகுதிகளில் அந்தியூர், குடிமங்கலம் வட்டாரம், கிணத்துக்கடவு அருகேயுள்ள இடையர்பாளையம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் மற்றும் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் காற்றின் திசையிலேயே, 1,880 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடைய, 3,682 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரம் 31 துணை மின் நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. காற்றின் வேகம் 3 மீ/செகன்ட் என்ற அளவில்இருந்தால் காற்றாலைகள் இயங்கி மின் உற்பத்தி செய்யும். 15 மீ/ செகன்ட் வேகத்தில் காற்று வீசினால் காற்றாலைகள் வேகம் அதிகரித்து மின் உற்பத்தி முழுமையான அளவு இருக்கும்.

    கடந்தாண்டு காற்று சீசன் காலம் நன்கு ஒத்துழைத்ததால், உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் உச்ச அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டது. காற்று சீசன் முடிந்து, கடந்த ஏழு மாதமாக, இரவு நேரங்களில் ஒரு சில நேரங்களில் மட்டும் வீசிய காற்றின் மூலம், சராசரியாக 60 மெகாவாட் மின் உற்பத்தியாகிறது. இந்நிலையில், சில நாட்களாக இப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து, நிலையாக நீடித்து வருகிறது. எனவே, காற்றாலை மின் உற்பத்தியும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. தினமும் சராசரியாக 60 மெகாவாட் மின் உற்பத்தி இருந்த நிலையில், சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் 250 மெகாவாட் வரை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

    உடுமலை மின் திட்ட காற்றாலைகள் மூலம், ஜன.,31ல், 8.22 லட்சம் யூனிட் மின்சாரமும்; பிப்.,1ல், 8.64 லட்சம் யூனிட் ; பிப்.,2ல், 11.93 லட்சம் யூனிட் மின்சாரமும், நேற்று முன்தினம் 12.40 லட்சம் யூனிட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதம் துவங்கும் காற்று சீசன், இந்தாண்டு இரண்டு மாதத்திற்கு முன்பே துவங்கி, காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதால் கோடை கால மின் வெட்டு இயற்கையால் குறையும் வாய்ப்புள்ளது.



  • கருணாநிதிக்கு பிரமாண்ட பாராட்டு விழா: அமிதாப்பச்சன் தலைமையில் ரஜினி, கமல் கலந்துகொண்டனர்


    தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி இருக்கிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், இன்று மாலை பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, முதல்-அமைச்சர் கருணாநிதி 5.10 மணிக்கு விழா அரங்கிற்கு வந்தார். அவருடன், நடிகர்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் வந்தனர். முதல்-அமைச்சர் கருணாநிதியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் ரஜினிகாந்த், சத்யராஜ், அஜீத்குமார், விக்ரம், விஜய் உள்பட பல நடிகர்களும், தமன்னா, நயன்தாரா, சினேகா உள்பட பல நடிகைகளும், மேலும் கவிஞர் வைரமுத்து, டைரக்டர் பாரதிராஜா உள்பட திரையுலகத்தினர் அனைவரும் விழாவில் பங்கேற்றனர்.


    சீன பொருட்களை புறக்கணிக்க அருணாச்சல் மாணவர்கள் அழைப்பு


    அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருவதால், கோபமடைந்த அம்மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், வரும் 8ம் தேதி முதல், சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர். இந்தியாவுடன் இணைந்த மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தின் மீது, அருகில் உள்ள நாடான, சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது.

    இது தொடர்பாக, இந்தியா மற்றும் சீனா இடையே அவ்வப்போது சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், வரும் 8ம் தேதி முதல் சீன தயாரிப்பு பொருட்களை, புறக்கணிக்குமாறு, அனைத்து அருணாச்சல் பிரதேச மாணவர்கள் சங்கம் (ஏ.ஏ.பி.எஸ்.யு.,) அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, அனைத்து அருணாச்சல் பிரதேச மாணவர்கள் சங்கத் தலைவர் தக்கம் டாட்டங் கூறியதாவது: அருணாச்சல் பிரதேசத்தின் மீது சீனா மீண்டும், மீண்டும் உரிமை கொண்டாடுவதை தொடர்ந்து, அந்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை புறக்கணிப்பது அவசியமாகிறது. இங்குள்ள கடைகளில், சீன தயாரிப்பு பொருட்கள் உள்ளனவா என்பதை கண்டறிய, எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஒவ்வொரு கடைக்கும் சென்று பார்வையிடுவர். அருணாச்சல் பிரதேச வர்த்தகர்கள் சங்கம், கடந்த மாதம் கோரிக்கை விடுத்ததையடுத்து, மாநிலத்தில் இருந்து சீன தயாரிப்பு பொருட்களை அகற்ற போதிய கால அவகாசம் ஏற்கனவே, கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தக்கம் டாட்டங் கூறினார்.



  • மத்திய மந்திரியிடம் பி..டி. கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு


    பி.டி. கத்தரிக்காய் பற்றி கருத்து கேட்கும் கூட்டம் பெங்களூரில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய சுற்றுக்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பி.டி.கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள், பி.டி.கத்தரிக்காய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசும் பொறுமை இழந்து சத்தமிட்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் தேவே கவுடாவும் இந்த வகை கத்தரிக்காய்க்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய மந்திரியிடம் மனு கொடுத்தார்.


    நெல்லை எஸ்.ஐ., கொலை வழக்கு : மேலும் 2 பேர் கைது


    நெல்லை அருகே எஸ்.ஐ.,வெற்றிவேல் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், கடந்த மாதம் 7ம் தேதி அம்பாசமுத்திரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தபோது ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஆள்மாறாட்டத்தில் நடந்த இந்த கொலையில், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள வெள்ளூரை சேர்ந்த கந்தசாமி, அவரது சகோதரி சிவகாமி, ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், ஆழ்வார்குறிச்சி கள்ளபிரான், ஐயப்பன், ராதாகிருஷ்ணன், முருகேசன், அம்மமுத்து ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். சுரேஷ், சுப்பிரமணியன், முருகன், கண்ணன், கருத்தப்பாண்டி, முத்துராமலிங்கம் ஆகிய ஆறு பேர் வெவ்வேறு கோர்ட்களில் சரண் அடைந்தனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் முத்துக்குமார்(23), வெள்ளூர் சொர்ணபாண்டி(27) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.மேலும் நான்கு பேர் தேடப்படுகின்றனர்.



  • நைஜீரியா நாட்டில் துப்பாக்கி முனையில் இந்திய அதிகாரி கடத்தல்


    நைஜீரியா நாட்டில் எண்ணை நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் ஒரு நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்த இந்தியர் ஒருவரை துப்பாக்கிகளுடன் வந்த சில மர்ம ஆசாமிகள் துப்பாக்கி முனையில் மிரட்டி, கடத்தி சென்று விட்டனர். இந்த தகவலை தெரிவித்த போலீஸ் செய்தி தொடர்பாளர் ரீட்டா அப்பெய், அவரையும், வியாழக்கிழமை கடத்தப்பட்ட ஒரு குழந்தையையும் மீட்க துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். ஆனால் கடத்தப்பட்ட இந்திய அதிகாரியின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.


    கன்னியாகுமரியில் வரும் 28ம் தேதி வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம்


    திருப்பதி தேவஸ்தானம் சார்பில், தமிழகத்தின் தென்கோடி நகரமான கன்னியாகுமரியில் வரும் 28ம் தேதி வெங்கடேச பெருமாளின் திருக் கல்யாண உற்சவம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவ் திருமலையில் தெரிவித்தார். கன்னியாகுமரியில் இம்மாதம் 28ம் தேதி சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும்.

    இந்து மதப்பிரச்சாரத்தை விரிவுபடுத்தும் வகையில் இதர மதத்தினரின் பிரச்சாரம் அதிகளவில் உள்ள முக்கிய நகரங்களில் கன்னியாகுமரியும் அடங்கும். இந்துமத மக்களிடையே ஆன்மிக எண்ணங்களை ஆழமாக வேரூன்றும் வகையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான வெங்கடேச பெருமாளின் சிறப்பு கல்யாண உற்சவங்கள் நடத்தப்படும். இதற்கான செலவுகளை தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளும்.இதற்கு ஆன்மிக தொண்டு செய்து வரும் தர்ம ஸ்தாபனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். திருமலையில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் அடுத்த மாதம் 5ம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு கோரி டிராப்ட் அனுப்புபவர்களுக்கு தரிசன வசதி செய்யப்படுகிறது.இன்டெர்நெட் மூலம் இம்மாதம் 20ம் தேதி முதல் இ-தரிசன சேவா டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஆந்திர மாநிலத்தில் பின்தங்கியுள்ள மலைவாழ் பகுதிகளில் சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



  • பீகாரில் ரெயில் தண்டவாளத்தில் பெண் உள்பட 6 பிணங்கள் கிடந்தன


    பீகார் மாநிலம் அருகே உள்ள மாசாகி ரெயில் தண்டவாளத்தில் 6 பேரின் உடல்கள் சிதறி கிடந்தன. இதுபற்றி போலீசார் கூறுகையில், `ரெயில் தண்டவாளத்தில் பிணங்கள் கிடப்பது பற்றி கிராம மக்கள் இன்று காலை தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரெயில் தண்டவாளத்தில் கிடந்த ஒரு பெண் உள்பட 6 பேரின் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். பிணமாக கிடந்தவர்கள் யார்? அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.


    குறைந்தது பெரியாறு அணை நீர்மட்டம்


    பெரியாறு அணை நீர்மட்டம் 113 அடிக்கும் குறைவானதால், இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. பெரியாறு அணை நீரை நம்பி, கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் சாகுபடி உள்ளது. தற்போதுள்ள இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு வரும் மார்ச் முதல் வாரம் வரை தண்ணீர் தேவைப்படும். கூடலூரில் சில இடங்களில் இன்னும் நெற்பயிரில் கதிர்விடாத நிலையில் உள்ளது. இந்த நெற்பயிருக்கு 50 நாட்கள் வரை தண்ணீர் தேவைப்படும். அணையின் நீர்மட்டம் 112.90 அடியாக உள்ளது.

    104 அடிக்கு மேல் உள்ள நீரை மட்டுமே தமிழகத்திற்கு பயன்படுத்த முடியும், என்ற நிலை இருந்த போதிலும், ஷட்டரில் குப்பைகள் காரணமாக 108 அடிக்கு மேல் தேங்கியிருக்கும் நீர், மட்டமே தமிழகப்பகுதிக்கு வெளியேறும். அதனால், நான்கு அடி நீர் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு மாதம் வரை தண்ணீர் தேவை உள்ளதால், இந்த நீர் போதுமானதாக இல்லை. அதிஷ்டவசமாக மழை பெய்து, நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நீர் பற்றாக்குறையின்றி சப்ளை செய்ய முடியும். இல்லாவிட்டால், இரண்டாம் போக நெல் சாகுபடி கேள்விக்குறியாகி, விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



  • டெல்லியில் சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


    காங்கிரஸ் தலைவர் சோனியாவை தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று சந்தித்தார். அப்போது, தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.


    திருப்பரங்குன்றம் கோயிலில் மார்ச் 13ல் மகா சிவராத்திரி விழா


    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 13ல் மகா சிவராத்திரி விழா நடக்கிறது. விரோதி ஆண்டான இந்த ஆண்டு வழக்கத்துக்குமாறாக ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை, இரண்டு கிரகணங்கள் என பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதுபோன்று மகா சிவராத்திரி கொண்டாடுவதிலும் இரு கருத்துக்கள் நிலவுகிறது.

    பிப். 12ம் தேதியா அல்லது மார்ச் 13ம் தேதியா என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது. திருப்பரங்குன்றம் கோயில் சிவாச்சார்யார்கள் கூறுகையில்: மகா சிவராத்திரி வழிபாடு என்பது மாசி மாதத்தில்தான் செய்ய வேண்டும். தை மாதம் 30 அன்று (பிப். 12) இரவு 12.30 மணிக்குத்தான் மாசி மாதம் பிறக்கிறது. இரவு 12 மணியை தாண்டி மாசிமாதம் பிறப்பதால் அன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடுவது உத்தமம் இல்லை.

    மாசி மாதம் 29 (மார்ச் 13) அன்று தேய்பிறையில் திரயோதசி திதியும், சதுர்த்தசியும் வருவதால், அன்றைய தினம் மகா சிவராத்திரி கொண்டாடுவது உத்தமம். தவிர மாசி 30 அன்று இரவு 9.30 மணிக்கு பங்குனி மாதம் பிறப்பதால், மாசி 29 அன்று மகா சிவராத்திரி கொண்டாடுவதே சிறப்பு. வழிபாடு என்பது ஆகம விதிகளுக்கு உட்பட்டதே. கோயில்களில் திருவிழாக்கள், வழிபாடுகள் அனைத்தும் ஆகம விதிகளின்படியே செய்ய வேண்டும். ஜோதிடத்திற்கும், ஆகமத்திற்கும் சிறு சந்தேகங்கள் (வேறுபாடு) ஏற்பட்டால், ஆகம விதிகளின்படியே திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் மாசி 29 (மார்ச் 13) அன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது என்றனர்.


    Bookmark and Share

    2010, பிப்ரவரி மாதம் ஆறாம் நாள் அண்மை செய்திகள்







  • ©2008

    All Rights Reserved

    News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
    +91-9176186119
    +91-9043023578
    No part of this website may be reproduced or used in any form without permission
    DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
    send your comments and corrections