உன்னைப்போல் ஒருவன் - திரைவிமர்சனம் ![]() ![]() ![]() ![]() ![]() பயங்கரவாதத்தை எதிர்க்கும் துணிவும், தெளிவும் இருந்துவிட்டால் சாமானியர்கள் கூடதீவிரவாதிகளை நடுங்கச்செய்துவிட முடியும் என்று உணர்த்தியிருக்கும் புதிய சிந்தனைப்படம்.
இந்தியில் நீரஜ் பாண்டே எழுதிய கதையை தமிழில் சக்ரி டோலேடி இயக்கியிருக்கிறார்.ஒரே நாளில் நடக்கும் இந்தக்கதை, பணியிலிருந்து விடுவித்துக்கொண்ட போலீஸ் கமிஷனர் மோகன்லாலின் நினைவுகளில் கடந்த காலத்துக்குப் போகிறது.
வெடிகுண்டுகள் தயார் செய்து கொண்டு போய் சென்னையின் முக்கிய பகுதிகளில் கமல் வைத்து விட்டு வரும் ஆரம்பக்காட்சி அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்தது.
அதன் தொடர்ச்சியாக குண்டுவெடிப்புகளில் கைதான தீவிரவாதிகளை விடுவிக்கச்சொல்லி அவர் பேரம் பேசுவது அதைவிட அதிர்ச்சி.
சாமானிய மனிதனாக வரும் கமலுக்கு ஒரே காஸ்ட்யூம்தான்.
எடுத்துக்கொண்ட பாத்திரத்தில் இருந்த இடத்தைவிட்டு நகராமல் அடக்கி வாசித்திருக்கும் கமலின் நேர்மை பாராட்டத் தகுந்தது. ஒரு தீவிரவாதி போல் ஆரம்பித்து, நம்மில் ஒருவனாக நிலைபெறும்வரை மிகையில்லாமல் நடித்திருக்கிறார்.
தன் செயலுக்கான நியாயத்தை அவர் விளக்கும் காட்சியில், பெண்ணுறுப்பு வழியே கைவிட்டுக் குழந்தையை எடுத்துக் கர்ப்பிணிப் பெண்ணை சமூகவிரோதிகள் கொன்ற கொடுமையைச் சொல்லி, "அது என் மகள், இல்லைன்னா என் சகோதரன், நண்பனின் மகளா இருந்தாதான் அதை உணரமுடியுமா..?" என்று கேட்டு உடையுமிடம் உருகவைக்கிறது.
மோகன்லாலின் முதிர்ச்சியும், கண்டிப்பான பார்வையுமே அவரை ஒரு போலீஸ் கமிஷனராக ஒத்துக்கொள்ளவைக்கிறது. ஒரு மலையாளியாகவே நடித்திருப்பதால் அவரது தமிழும் உறுத்தாத இயல்புடன் ஒட்டிக்கொள்கிறது.
அச்சுறுத்தல் ஒருபக்கமும், அதிகார எல்லைகள் ஒருபக்கமுமாக அழுத்தும் சுமையில் கமலுடன் அவர் நடத்தும் கிளைபதிவு. அதிகாரியாகக் கையாலாகாத கண்ணாலாவது பார்த்துவிட முடிவு செய்து கமலை அவர் சந்திக்கும் கடைசிக்கட்டம் அற்புதம்.
தலைமைச் செயலாளரான வரும் லட்சுமியும் இருக்கும் எல்லைக்குள் தன் ஆற்றலைப் பதிவு செய்திருக்கிறார். கணேஷ் வெங்கட்ராம், பரத்ªட்டி, எஸ்.பிரேம்குமார் இளம் போலீஸ் அதிகாரிகளுக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள்.
கணேஷ் வெங்கட்ராமுக்கு ஆக்ஷனிலும் கலக்க அருமையான வாய்ப்பு.ஆளுக்கேற்ற வேடத்தில் அடக்கமாகப் பொருந்தியிருக்கிறார் சேனல் நிருபராக வரும் அனுஜா.
ஆங்கிலம், புத்திசாலித்தனம் கலந்த வசனங்களில் அங்கங்கே எள்ளலும் கலந்த எழுதியிருக்கிறார்இரா.முருகன். தனக்குப் பாதுகாப்பு கேட்டு வரும் நடிகர் ஸ்ரீமன், "நான் தான் தமிழ்ல நம்பர் ஒன் ஸ்டார்..."
எனும்போது, "அதுதான் உங்க கம்ப்ளைண்டா..?" என்று மோகன்லால் கேட்குமிடம் உதாரணம். ரெட் மனோஜ் சோனியின் ஒளிப்பதிவில் குறிப்பிடத் தகுந்த ஆச்சரியம் எதுவும் இல்லை.
பின்னணி இசையோடு முடிந்துபோகும் ஷ்ருதிகமலின் இசை படத்தோடு ஒன்றியிருக்கிறது.யதார்த்தமான கதையாக உணரச்செய்ய இந்திய நிகழ்வுகளையே படத்தின் பின்னணிச் செய்தியாக்கியிருப்பது நல்ல பலனைத் தந்திருக்கிறது.
அந்த வகையில் முதல்வரின் கோபால புரம் இல்லமும் படத்துக்குள் இடம்பெற்றிருப்பது 'அட' .முக்கியப்பாத்திரங்கள் கவனத்கைக் கவர்ந்தாலும் துணைப்பாத்திரங்களிடம் தெரியும் நாடகத்தனமான நடிப்பு ஒரு குறை.
அதேபோல் கமலின் நியாயம் தெரிய வந்ததும், அவரது போன் நம்பரை டிரேஸ் செய்யும் இளைஞரும், புகைப்படத்தை வைத்து அடையாளம் சொன்ன போலீஸீம் பின்வாங்குவது வழக்கமான கமர்ஷியல் டிராமா.
சீரியஸான கட்டத்தில் கமிஷமருக்கு வரும் 'பெர்சனல்லோன்' கால் காமெடி பல படங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய சரக்கு. நு£ற்றுக்கணக்கான மீடியாக்கள் குவிந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஒரு சேனலில் இப்படி செய்தி வந்தால் மற்றவர்கள் கமிஷனர்
அலுவலகத்தை முற்று கையிட்டிருக்க மாட்டார்களா?
தீவிரவாதத்தை வேரறுக்க தீவிரவாதம்தான் சரியான வழி என்பதை எதிர்வினையாகும் நீதிதான்.ஒன்பது வருடங்களுக்கு முன் தீவிரவாதம் தவிர்த்து அஹிம்சையை வலியுறுத்திய கமலை காலம் இப்படி மாற்றியிருப்பது விந்தைதான்.ஹே...ராம்..! |