பாட்டு டீச்சர் கொலை வழக்கு புதுவையில் தங்கி இருந்த 2 பேர் கைது ![]() ![]() ![]() சென்னை, அசோக் நகர் வீட்டில் தனியாக இருந்த கர்நாடக சங்கீத பாடகியும், அவரது மகனும் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். நகை, பணத்திற்காக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடக்கிறது. பட்டப்பகலில் அதிகரித்து வரும் இரட்டை கொலைகளால், சென்னை வாசிகள் பீதியில் உறைந்துள்ளனர். சென்னை அசோக் நகர், போஸ்டல் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விஜயா (39) என்பவர் வசித்து வந்தார். சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனியில் உள்ள கலா பிளாட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பிர மணி. பெங்களூரில் உள்ள மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அனந்தலட்சுமி (வயது39). இவர்களது மகன் சுரஜித்குமார் (13). அனந்தலட்சுமியையும், சுரஜித் குமாரையும் மர்ம ஆசாமிகள் கொலை செய்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் தென்சென்னை இணை கமிஷனர் சக்திவேல் மேற்பார்வையில் துணை கமிஷனர் சம்பத் தலைமையில், உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர்கள் சங்கரலிங்கம், சார்லஸ், சாம்ராஜதுரை, ராஜேந்திரன், சிவராம்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில் கொலையாளி, அந்தலட்சுமிக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராமசுப்பிரமணியன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நண்பர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில் ராமசுப்பிரமணிக்கு கிறிஸ்டோபர் என்ற நெருங்கிய நண்பர் இருந்ததும், அவர் அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து செல்வதும் தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது அவர் கொடுத்த தகவலின் பேரில் வேல்முருகன் என்பவர் ராமசுப்பிரமணி வீட்டுக்கு நட்பு அடிப்படையில் வந்து செல்வது தெரியவந்தது. ராமசுப்பிரமணி பெங்களூரில் தங்கி வேலை பார்ப்பதால் பிள்ளைகளின் படிப்பு மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக மாதம் 1 முறை அல்லது 2 முறை மட்டுமே அசோக்நகர் வீட்டுக்கு வந்து செல்வார். இது வேல்முருகனுக்கு ஏற்கனவே தெரியும். மேலும் கொலை நடந்த நாளில் இருந்து வேல்முருகன் தலைமறைவாகிவிட்டார். எனவே வேல்முருகன்தான் இந்த கொலையை செய்து இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டனர். சுமார் 500 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே கடந்த 1-ந்தேதி வேல்முருகன் மேட்டுப்பாளையம் நீதி மன்றத்தில் சரண் அடைந்தார். அவர் தலைமறைவாவதற்கு முன்பு எங்கு வேலை பார்த்தார். அவர் யாரிடம் எல்லாம் தொடர்பு வைத்திருந்தார் என்று போலீசார் விசாரித்தனர். இதில் புதுவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேல்முருகன் வேலை பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வேல்முருகனுக்கு பல கெட்ட பழக்கவழக்கங்கள் இருந்ததும், இதன் காரணமாக அவருக்கு அதிக பணத்தேவை ஏற்பட்டதும் தெரிய வந்தது. எனவே ராமசுப்பிரமணி வீட்டில் கொள்ளையடிக்க அவர் முடிவு செய்துள்ளார். தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் பாலா, விஜயராஜ் ஆகிய 2 பேருடன் சேர்ந்து ராமசுப்பிரமணியின் மனைவி அனந்தலட்சுமி, மகன் சுரஜித்குமார் ஆகிய இருவரையும் கொலை செய்து கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து பாலா (22), விஜயராஜ் (22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பாலா தூத்துக்குடி மாவட்டம் வடக்கூர் முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்தவர். விஜயராஜ் தேவகோட்டை உச்சாணி கிராமத்தைச் சேர்ந்தவர். பாலாவிடம் இருந்து அனந்தலட்சுமி அணிந்திருந்த 3 கிராம் தங்க மோதிரம், 1 லேப்- டாப் கம்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. விஜயராஜிடம் இருந்து 2 கிராம் தங்க மோதிரம், ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. கொலையாளிகள் பாலா, விஜயராஜ் இருவரும் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:- வேல்முருகன் எங்களுடன் ஒன்றாக ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அவனுக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு உண்டு. மது, மாது பழக்கத்தால் அதிகமாக பணம் தேவைப்பட்டது. இதனால் அவனுக்கு ஏற்கனவே அறிமுகமான ராமசுப்பிரமணி வீட்டில் கொள்ளையடிக்கலாம் என கூறினான். அதன்படி கடந்த 24-ந்தேதி புதுவையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தோம். ஏற்கனவே அறிமுகமான நபர் என்பதால் வேல்முருகன், ராமசுப்பிரமணியன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான். அனந்தலட்சுமி கதவை திறந்து உள்ளே அழைத்தார். நாங்கள் 3 பேரும் உள்ளே சென்றோம். வேல்முருகன் அனந்தலட்சுமியிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வேல்முருகன் திடீரென அங்கு கிடந்த துணியால் அனந்தலட்சுமியின் கழுத்தை இறுக்கி கீழே தள்ளினார். நாங்கள் உடனடியாக தலையணையால் முகத்தை அழுத்தினோம். தலைமுடியை பிடித்து தரையில் வேகமாக பலமுறை ஓங்கி அடித்தோம். அதோடு விடாமல் அவரை சமையல் அறைக்கு இழுத்து சென்றோம். அங்கிருந்த காய்கறி நறுக்கும் சிறிய கத்தியால் அவரது கழுத்தில் குத்தினோம். அப்போது பக்கத்து அறையில் இருந்த சிறுவன் சுரஜித்குமார் சமையல் அறைக்கு வந்துவிட்டான். அவன் எங்களை காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக அவனையும் கத்தியால் குத்தி கொலை செய்தோம். பின்னர் அனந்தலட்சுமி அணிந்திருந்த தாலி செயின், முருகுமணி மாலை, 2 மோதிரம், 2 வளையல், 1 ஜோடி கம்மல் ஆகியவற்றையும், பீரோவில் இருந்து ரூ. 40 ஆயிரம் பணத்தையும், லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றையும் கொள்ளையடித்து தப்பி வந்துவிட்டோம். மீண்டும் புதுவை சென்று கொள்ளையடித்த பொருட்களை பிரித்து எடுத்துக் கொண்டோம். மோசமான நண்பனின் சகவாசத்தால் கொலையாளி ஆனோம். இவ்வாறு அவர்கள் வாக்கு மூலம் கொடுத்தனர். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:- அசோக்நகர் தாய்- மகன் கொலையில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக துப்பு துலங்கி உள்ளது. கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர் கோர்ட்டில் சரண் அடைந்துவிட்டார். அவரது கூட்டாளிகள் பாலா, விஜயராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கொலையாளிகள் 3 பேருமே புதுவையில் உள்ள ஓட்டலில் ஒன்றாக வேலை பார்த்து வந்தவர்கள். பணம்- நகையை கொள்ளையடிக்கும் நோக்கத்திலேயே 3 பேரும் அந்தலட்சுமியையும், அவரது மகனையும் கொன்று உள்ளனர். வேல்முருகன், அனந்தலட்சுமியின் குடும்ப நண்பர். மற்றபடி அவர்களுக்குள் என்ன உறவு என்பது தெரியாது. வேல்முருகனை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. தென்சென்னையில் வசிப்பவர்களிடம் அதிகமாக பணம் உள்ளதால் அந்த பகுதியில் குற்ற நிகழ்வுகள் நடக்கிறது. இதை தடுப்பதற்கும் கட்டுப்படுத்தவதற்கும் விசேஷ போலீஸ் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சில முக்கியமான கொலை வழக்களில் துப்பு துலக்குவதற்கு இந்த சிறப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். வேளச்சேரி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்ற வாளிகள் விரைவில் சிக்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, இணை கமிஷனர் சக்திவேல், துணை கமிஷனர் சம்பத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய உதவி கமிஷனர் பரந்தாமன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் பரிசு வழங்கி பாராட்டினார்.
|