"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

புலனாய்வு

அடுத்தப் பக்கம்....


தமிழக வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் பள்ளிக்கூடம் கட்டும்
"உடன்பிறப்பு" - ஒரு திகில் ரிப்போர்ட்


சென்னை முகப்பேர், நொளம்பூர்ல தமிழக வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான பல ஏக்கர்கள் நிலங்கள் இருக்கிறது. ஒரு கிரவுண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை யாரும் ஆக்கிரமிக்காம இருக்க, எச்சரிக்கை பலகையும் வாரியம் சார்பா வைக்கப்பட்டிருந்தது. அதையெல்லாம் எடுத்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமா சிலர், நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு வருகிறார்கள். அம்பத்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் - வாரிய அதிகாரிகள் சிலர் துணையோடு, சத்தமே இல்லாமல் இந்தக் காரியம் நடந்து கொண்டு இருக்கிறது. முகப்பேர்ல மக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா, மருத்துவமனை, சமுதாயக் கூடம் கட்ட, 10 ஏக்கர் வீட்டு வசதி வாரிய நிலத்தை ஒதுக்கிய இடத்தை மூத்த அமைச்சரோட உடன்பிறப்பு ஒருத்தர் வாங்கி, ஸ்கூல் கட்டிக்கொண்டு இருப்பதுதான் ""தைரியமா ஆக்கிரமிப்பு நடப்பதற்க்கு காரணம்.


போலீஸ் சங்கம் அமைக்கும் முயற்சி
ஒரு திகில் ரிப்போர்ட்


""ஐகோர்ட் சம்பவத்தை அடுத்து, "போலீஸ் அதிகாரிகளுக்கு ஆஜராக மாட்டோம்'னு வக்கீல்கள் சங்கம் தீர்மானம் போட்டுருச்சுங்க... அதைப் பார்த்ததும் நீண்டகாலமா அடங்கிக் கிடந்த போலீஸ் சங்கம் அமைக்கும் முயற்சி திரும்பவும் கிளம்பிருச்சுங்க... "நமக்குன்னு சங்கம் இருந்தா நாமும் ஒற்றுமையா போராடலாமே'ங்கற குரல் வர ஆரம்பிச்சிருக்கு... "இந்த கருத்துல தீவிரமா இருக்கும் சிலர், ரகசிய நோட்டீஸ் அடிச்சு எல்லா போலீஸ் நிலையத்துக்கும் வினியோகம் பண்ணிருக்காங்க... "வக்கீல்களுக்கு எதிரா மனித வெடிகுண்டா மாறுவோம்'னு அதுல வாசகங்கள் இருக்காம்... அதைப் பார்த்த உயர் அதிகாரிகள் உடனே அந்த நோட்டீஸ்களை கைப்பற்றி வெளியில வராம முடக்கிட்டாங்க...''


பொதுமக்களின் கருத்துக்களம்
ஒரு திகில் ரிப்போர்ட்



,

பொதுமக்களின் கருத்துக்களம், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும் எப்படி முரண்பாடுகளும் எப்படி முரண்பட்டிருக்கின்றன என்பதைத் துல்லியமாக உணர்த்தியிருக்கிறது. சமீபத்தில் வெளியான லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு. அண்மைக் காலத்தில் தமிழகத்தில் நடந்த பல்வேறு போராட்டங்களும் கவனப்படுத்தியிருக்கிற முக்கியமான விஷயம். அரசியல் கட்சிகளின் செயல்பாட்டின் மீது மக்களிடம் பரவி வரும் நம்பிக்கையற்ற நிலை. குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் இந்த அதிருப்தி அதிகரித்து வருவது ஏன்? விவசாய நிலங்கள் "ரியல் எஸ்டேட்' களாக உருமாறிக் கொண்டிருக்கின்றன பெரு வணிக நிறுவனங்கள் கால்பதிக்க, அங்கே ஏற்கெனவே வேரூன்றியிருக்கிற சிறு தொழில்கள் நசிவடைகின்றன. ஐ.டி. நிறுவனங்கள் மீதிருந்த நம்பிக்கைகள் கூட சத்தியமாய்ச் சரிகின்றன. பிழைப்பதற்காகக் கிராமங்களை விட்டு வெளியேறுகிறவர்களின் சதவிகிதம் கூடியிருக்கிறது. வேலை தேடுகிறவர்களின் எண்ணிக்கையும் விரிவடைந்து கொண்டே போகிறது. அரசியல் கட்சிகளோ பண பலம், படை பலம், அதிகார பலத்தை நம்பிச் செயல்படுகின்றன. பிணாமிகள் மீதும் சுவிஸ் வங்கிக் கணக்குகள் மீதும் இருக்கிற அக்கறை தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் மீது இல்லை. நாளைக்கான திட்டங்கள் எதுவுமில்லாமல், மக்களின் மனநிலையை மாற்றிவிட முடியாது. தங்களுடைய சொந்தத் தொகுதியில் ஒரு முறை தோற்றாலும் கூட எளிமையின் உதாரணங்களாகத் திகழ்ந்த காமராஜரம், அண்ணாவும் மக்களின் நம்பிக்கைகளின் சரியாமல் வெற்றிபெற்றிருந்தார்கள். அந்த வெற்றி தொடராததற்கு யார் காரணம்?. மக்களிடம் பெருகி வரும் நம்பிக்கை வறட்சி எங்கே கொண்டு போய்விடும்?. ஜனநாயகத்தை உண்மையில் காப்பவர்கள் பொதுமக்களா? அரசியல் கட்சிகளா?.


புலனாய்வு


"இந்திய ராணுவ பீரங்கி" இலங்கைக்கு தமிழகம் வழியாக அனுப்பப்பட்டதா?-
ஒரு திகில் ரிப்போர்ட்


இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்காக இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திடீரென நேற்று (செவ்வாய்கிழமை) இலங்கை சென்றுள்ளார். இந்நிலையில் இலங்கை ராணுவத்திற்கு தமிழகம் வழியாக கொச்சி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இந்தியா ராணுவ தளவாடங்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மை என்ன? ஊடக துறையில் அனுபவம் வாய்ந்தவர்களை விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்

இலங்கையில் தமிழர்கள் பகுதியில் சிங்கள ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. திங்கள்கிழமை முல்லைத்தீவில் சிங்கள ராணுவம் நடத்திய சரமாரியான குண்டு வீச்சுத் தாக்குதலில் பெண்கள், கைக்குழந்தைகள், சிறுவர், சிறுமியர் உள்பட 300 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, தற்போது நவீன ரக பீரங்கிகளையும், ராணுவ தளவாடங்களையும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வழியாக கொச்சி கொண்டு செல்லப்பட்ட இந்த ராணுவ தளவாடங்கள் அங்கிருந்து திங்கள்கிழமை கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீரங்கியை ஏற்றிச் சென்ற ரெயிலை ஈரோட்டில் பார்த்த பொதுமக்கள் கூறியதாவது, ரெயில் ஏறுவதற்காக நின்றுக் கொண்டிருந்தபோது, பீரங்கி வண்டி நின்றது. விசாரித்ததில் இந்த பீரங்கி இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர், ராணுவத் தடவாளங்களும், பீரங்கிகளும் ஈரோட்டில் இருந்து கொச்சி வழியாக இலங்கைக்கு அனுப்பப்படுவதாக கூறியதோடு, செய்தித்தாள்களில் வந்த புகைப்படங்களையும் காண்பித்தனர்.

இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்திய அரசின் இச்செயலை பல்வேறு தமிழ் அமைப்புகளும் கண்டித்துள்ளதோடு, இதுகுறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் ராணுவ தளவாடக்ஙளை அனுப்பியதை கண்டித்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன.


"நெல்லையில் தலைவிரித்தாடும் கந்துவட்டி கொடுமை " -
ஒரு திகில் ரிப்போர்ட்


திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதன் உச்சகட்டமாக கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையை உலுக்கியுள்ளது.

கந்து வட்டிச் சட்டம் இருந்தும் காவல்துறை கந்துவட்டி பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கிறது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை சிவன்கோயில் அருகே வசிக்கும் அறுபது வயது கோபால் ஆசாரிக்கு இரு மனைவிகள்.

இவர்கள் மூலமாக ஏழு குழந்தைகள். ஏழு பேரில் மூவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட, மூன்று மகன்களுடனும் ஒரு மகளுடனும் தனி வீட்டில் வசித்து வந்தார் கோபால். நகைத் தொழில் செய்து வந்த கோபாலின் தொழிலில் நசிவு ஏற்பட, தனது மகன்கள் பழனி, வெங்கடேஷ், சிவா மூவருக்கும் பாலபாக்யா நகரில் கோல்டு கவரிங் செய்யும் பட்டறை ஒன்றை சிலரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி வைத்துக் கொடுத்திருக்கிறார்.

நகைத் தொழில் போலவே கோல்டு கவரிங் தொழிலிலும் நஷ்டம் ஏற்படத் திணறியது கோபால் ஆசாரியின் குடும்பம். எனவே இந்த கடனைச் செலுத்த முடியாமல் ஆறு பேரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த மாவட்டத்தில் இப்படி நெஞ்சைப் பதற வைக்கும் தற்கொலைகள் சர்வசாதாரணம்... ஏன்? நெல்லையில் மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, மின்னல் வட்டி, கந்துவட்டி ஆகிய நான்கு செல்லப் பெயர்களில் வட்டி உலா வருகிறது.

மீட்டர் வட்டி என்பது வட்டியையும், அசலையும் தினசரி வசூல் செய்யும் முறை. அதாவது ஒருவர் ஆயிரம் ரூபாய் வட்டிக்குக் கடன் வாங்கினால், தினசரி ஆயிரம் ரூபாய்க்கு வட்டியாக 100 ரூபாயும் அசலில் கழியும் படியாக 100 ரூபாயும் கடன் கொடுத்தவருக்குத் தரவேண்டும். அப்படிப் பார்த்தால் ஆயிரம் ரூபாயை வட்டிக்கு விடுபவருக்கு பத்தே நாட்களில் இரண்டாயிரம் ரூபாய் சுளையாகக் கிடைத்துவிடும்.

இந்த வகை வட்டியைவிட கொடுமையானது ஸ்பீடு வட்டி. காலை 8 மணிக்கு ரூ.10 ஆயிரத்தை வட்டிக்கு வாங்கினால், அன்று இரவுக்குள் ரூ. 15 ஆயிரத்தைக் கொடுத்துவிட வேண்டும். இதுவாவது பரவாயில்லை. தற்போது நெல்லையில் உலாவரும் வட்டியில் மிகப் பிரபலமானது மின்னல் வட்டிதான். காலை 10மணிக்கு ரூ. 10 ஆயிரம் வாங்கினால், 12 மணிக்குள்ளாக ரூ.15 ஆயிரம் தந்தாக வேண்டும்.

இவை தவிர இறுதியில் வருவதுதான் கந்துவட்டி. ஒரு லட்சம் ரூபாய் வாங்கினால் மாதத்திற்கு குறைந்த பட்ச வட்டி 10 சதவீதம் என்ற வகையில், முதலில் ரூ.10 ஆயிரத்தைக் கழித்துவிட்டு ரூ.90 ஆயிரம் தருவார்கள்.

அதன்பிறகு பிரதிமாதம் 1-ஆம் தேதி சரியாக ரூ.10 ஆயிரத்தை வட்டியாக செலுத்தத் தவறினால், வட்டிக்கு வட்டி என்ற வகையில் 10 சதவீத வட்டி 20 சதவீத வட்டியாகிவிடும். இச்சிக்கலில் மாட்டிக் கொண்டு 20 சதவீத வட்டி கட்டமுடியாமல்தான் கோபால் ஆசாரி குடும்பத்தினர் போன்று பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சரி, இப்படி "கொடூர வட்டி" வசூல் செய்யும் கந்து வட்டிக்காரர்கள் யார்? சில வருடங்களுக்கு முன்பு வரை தனது பெயருக்கு முன்பு "பத்துவட்டி" என்ற அடைமொழியைத் தாங்கிய வங்கி அதிகாரி ஒருவர்தான் நெல்லை கந்துவட்டித் தொழிலில் நம்பர் ஒன்னாக இருந்து வந்தார்.

இவரிடம் ரைஸ்மில், தியேட்டர், வீடு என்று அனைத்துச் சொத்துக்களையும் தொலைத்தவர்கள் ஏராளம். அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிக் காலத்தில் இவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. இதனால் வட்டித் தொழிலுக்கு இவர் மூடு விழா நடத்தினார்.

இவருக்கு அடுத்து, தி.மு.க. ஆட்சியில் ஆளுங்கட்சிக்கு எப்போதுமே அனுதாபிகளாக இருக்கும் தியேட்டர் அதிபர் ஒருவர், தமிழின் முதல் மாதத்தைத் தாங்கிய நிறுவன அதிபர், ஆங்கிலேயரோடு மோத ஒரு ஆர்மியையே உருவாக்கிய தேசபக்தரின் பெயரில் உலாவரும் தொழிலதிபர் ஒருவர், அரசியல் விஐ.பி. ஒருவர் என்று எண்ணிலடங்கா கந்துவட்டி பிரமுகர்கள் நெல்லையில் மொய்க்கிறார்கள்.

நூறு ரூபாயில் இருந்து 10 கோடி ரூபாய் வரையில் கடன் கொடுக்கும் தகுதி படைத்த இவர்களின் முக்கியக் கேந்திரம் டவுன், மேலப்பாளையம், பாளை ஆகிய பகுதிகளின் மார்க்கெட்தான்.

காலையில் கடை விரித்து மதியத்துக்குள் கடை மூடும் அடித்தட்டு ஏழை வியாபாரிகள்தான் இந்த வட்டிப் பிரமுகர்களின் முதல் குறி!

அடியாட்கள் மூலம் வியாபாரிகளுக்குப் பணம் சப்ளை செய்யும் இவர்கள் அன்றன்றே மாலைக்குள் கணக்கு முடித்து, மறுநாள் போணிக்குத் தயாராகிவிடுவர். இவர்களின் அடுத்த குறி, மார்க்கெட்டில் ஏல அடிப்படையில் கடை எடுத்து வியாபாரம் செய்பவர்கள்.

இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் மீட்டர் வட்டிக்குப் பணம் தரும் இவ்வட்டி மன்னன்கள், தினமும் வசூல் மழையில் குளிப்பார்கள். குறித்த நாளில் பணம் தர முடியாமல் தடுமாறும் வியாபாரிகளின் கடைகள் விரைவில் "ஸ்வாகா' செய்யப்படும்.

லட்சங்களில் பணம் தேவைப்படும் வியாபாரிகள் "10 வட்டி'க்கு கடனாகவும், பத்து லட்சத்துக்கும் மேல் பணம் தேவைப்படுபவர்கள் "கந்து ஒத்தி' என்ற முறையில் தமது வீடு மற்றும் கடை, சொத்துப் பத்திரங்களைக் கொடுத்தும் பெரிய அளவில் பணம் வாங்குவார்கள். வட்டியை ஒழுங்காகக் கட்ட முடியாதவர்களின் பத்திரங்களைப் பயன்படுத்தி மிரட்டும் கந்துவட்டி தாதாக்கள், சில வருடங்களிலேயே சொத்தை அபகரித்துக் கொள்வது வழக்கம்.

இதே பாணியில்தான் அவர்கள், கோபால் ஆசாரியின் மகன்கள் பாலபாக்யா நகரில் நடத்தி வந்த பட்டறைச் சாவியைக் கைப்பற்றினார்கள். அதுமட்டுமல்லாமல், தற்போது கைதாகியிருக்கும் வக்கீல் ரவி மூலமாக மிரட்டலும் விடுத்தனர்.

இதனால், "மானத்தையும் இழந்து, ஒரே சொத்தான கடையையும் இழந்து விட்டோமே?" என்ற ஏக்கத்தில்தான் கோபால் ஆசாரி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார் என்கின்றனர் காவல்துறையினர்.

திருநெல்வேலியில் கந்துவட்டித் தொழிலை ஒழிக்கவே முடியாதா?


உங்கள் கருத்துக்களை crimepoint@live.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள்


"ஆதினதிற்கு சொந்தமான சொத்துக்கள்" - போலி பத்திரம் தயாரித்து விற்க முயற்சி.
ஒரு உஷார் ரிப்போர்ட்


திருநெல்வேலியில் "ஆதினதிற்கு சொந்தமான சொத்துக்கள்" - போலி பத்திரம் தயாரித்து விற்று பல கம்பெனிகள் இன்றும் செயல்படுவதாக புகார் வந்ததின் பேரில் விசாரணையில் இறங்கினோம்.
பல திடுக்கிடும் விஷயங்கள் அம்பலம் ஆகின.

அவை வருமாறு.

(1).திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் கிராமம் பகுதியில் உள்ள சர்வே எண் 3/7,5/12,6/5,6/6,6/8,8/1,15/1,23/3, போன்ற நிலங்கள் திருவாடுதுறை ஆதினம் மடத்திற்கு சொந்தமானது.

போலி ஆவணங்கள் தயாரித்து "இனாம் உடமை ஒழிப்பு" சட்டத்தின் கீழ் (26,1963) இந்த சொத்து தனியார் ஒருவர் வசமிருந்து வாங்கப்பட்டது என்று எவரேனும் உங்களிடம் சொல்லி திருநெல்வேலி மாநகராட்சி "லே-அவுட்" அப்ருவல் உள்ளது. என்று எவர் சொன்னலும் நம்பாதீர்கள்.

எங்கள் புலனாய்வு நிருபர் குழு தகுந்த ஆதாரங்களை சேகரித்த வண்ணம் உள்ளனர். அனைத்து ஆதாரங்களையும் இந்த இணைய இதழிலும்,"செளத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்" - புலனாய்வு வாரஇதழிலும் விரைவில் வெளியாகும்.

வாகை குளம்,மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் எவரிடமிருந்தாவது இடம் வாங்கும் எண்ணம் இருப்பின் நில அளவை பட எண்.131,ஜப் பார்க்கவும்.

போலி ரியல் எஸ்டேட் கும்பல் வாகைகுளம் கிராமம் பகுதியில் உள்ள நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து விற்க முயற்சி செய்து வருகிறது.

திருநெல்வேலியில் இடம் வாங்கப் போகிறீர்களா?. உஷார்!.



"வீடு வீடாக ரகசிய வினியோகம்" - திருமங்கலம் தொகுதியில் பண மழை


தமிழகத்தையே தலை நிமிர்ந்து பார்க்க வைத்த திருமங்கலம் இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. நாளை (ஜன.9) ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், "பணப்பட்டுவாடா எப்போது கிடைக்கும்?' என்று வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தலிலேயே வித்தியாசமான தேர்தலாக திருமங்கலம் அமைந்துள்ளது. பொதுவாக, இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி, அரசு இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதும், வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறப்படுவதும், அதிகபட்சம் 50 அல்லது 100 தரப்படுவதும் தான் நடைமுறை. இவற்றையெல்லாம் "தூக்கி சாப்பிட்டு விட்டது' திருமங்கலம். இங்கு அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - ச.ம.க., போட்டியிட்டாலும் இத்தேர்தலில் வெற்றி பெறுவதை பெரிய கவுரவப் பிரச்னையாக தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் நினைக்கின்றன.

இந்த "ஈகோ' தான், திருமங்கலம் மக்களுக்கு யோகத்தை ஏற்படுத்தியது. கடந்த டிச., 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கி ஒரு வாரத்தில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மக்களுக்கு மாறி மாறி பணத்தைப் பட்டுவாடா செய்து, முதல் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஒரு ஓட்டுக்கு 1,000 ரூபாய் தரப்பட்டது. அடுத்த சில நாட்களில் ஒரு ஓட்டுக்கு மீண்டும் 1,000 ரூபாய் தரப்பட்டதும் மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது. தொகுதிக்குள் 1,000, 500 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் சாதாரணமாக இருந்தது. ஓட்டல்கள், லாட்ஜ்கள், ஒயின் ஷாப்களில் விற்பனை அமோகமாக இருந்தது.

ஓட்டுப்பதிவு அன்று வன்முறை ஏற்படாமல் இருக்க, மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொகுதியில் மொத்தம் உள்ள 190 ஓட்டுச்சாவடிகளில் 110 சாவடிகள் பதட்டம் நிறைந்தவை எனக் கண்டறியப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருமங்கலம் தொகுதியை 19 மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் 19 தாசில்தார்கள் தலைமையில் வருவாய்த் துறையினர் கண்காணிக்கின்றனர். பூத்திற்கு ஒரு வீடியோ காமிராக்கள் வீதம் மொத்தம் 190 காமிராக்களும், கூடுதலாக பார்வையாளர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், ஆர்.டி.ஓ.,க்களுடன் வீடியோ கிராபர்களும் செல்ல உள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது. ஸ்டாலின், மு.க.அழகிரி, வைகோ, விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் திருமங்கலம் நகரில் பிரசாரத்தை முடித்தனர். நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில் இன்றும், நாளை காலையும் மூன்றாவது ரவுண்ட் பட்டுவாடா இருக்கும் என்று மக்கள் மத்தியில் தகவல் பரவியுள்ளது. ஓட்டுக்கு 5,000 ரூபாய் அல்லது அரை சவரன் தங்கக் காசு, மொபைல் போன், மிக்சி ஆகியவற்றில் ஒன்றை தரப்போகின்றனர் என்றும் தொகுதி முழுக்க பேசப்படுகிறது.

தொகுதியில் பதற்றம் நிறைந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தொகுதியில் தங்கியிருந்த வெளியூர்க்காரர்கள் நேற்று மாலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections