"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

இந்தியச் செய்திகள்


"அத்வானி ஒரு சந்தர்ப்பவாதி" மன்மோகன் சிங் கடும் தாக்கு




புதுடெல்லி, மார்ச்.25-

`பாகிஸ்தான் பயணத்தின் போது மதசார்பற்றவர் என்று காண்பிப்பதற்காக ஜின்னாவை புகழ்ந்து பேசிய அத்வானி ஒரு சந்தர்ப்பவாதி' என்று பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில், கட்சியின் தலைவர் சோனியா அதை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு மன்மோகன் சிங் கூறியதாவது:-

என்னை பலவீனமான பிரதமர் என்று அத்வானி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். நான் பலவீனமான பிரதமரா அல்லது பலம் வாய்ந்தவனா என்பதை என்னுடைய அரசின் சாதனைகள் கூறும். ஆனால், நாட்டின் நலனுக்காக அத்வானி செய்தது என்ன?

முந்தைய பா.ஜனதா கூட்டணி அரசில் அத்வானி உள்துறை மந்திரியாக இருந்தபோது தான் பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். டெல்லி செங்கோட்டை தாக்கப்பட்டது. காந்தகாருக்கு விமானம் கடத்தப்பட்டது. அதை கடத்திய தீவிரவா

திகளுக்கு பரிசு அளிக்கப்பட்டது. காரணமே இல்லாமல் எல்லையில் ஒரு வருடத்துக்கு ராணுவத்தை குவித்ததால் ஏராளமான கோடி பணம் வீணானது. உள்துறை மந்திரியாக இருந்து இவற்றை தடுக்க தவறினார்.

அது மட்டுமல்ல, பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்காற்றியவர் அத்வானி. குஜராத்தில் நடந்த பெரிய கலவரத்தையும் தடுக்க தவறியவர். ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் சென்றபோது, தான் ஒரு மதசார்பற்றவர் என்று காண்பிப்பதற்காக பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான ஜின்னாவை புகழ்ந்து பேசினார். அதன் மூலமாக தான் ஒரு சந்தர்ப்பவாதி என்பதை நிரூபித்தார்.

ஆனால், அவர் இந்தியா திரும்பியதும் ஆர்.எஸ்.எஸ். நெருக்கடி காரணமாக தலைவர் பதவியை இழந்தார். இப்போது கூறுங்கள், அத்வானி பலமானவரா? பலவீனமானவரா? அதை பழைய ஆவணங்கள் வெளிப்படுத்தும். எனவே, இப்படிப்பட்ட ஒருவர், இந்தியாவின் பிரதமராக வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

டெல்லி மேல்-சபையில் உறுப்பினராக இருப்பவரை பிரதமராக தேர்வு செய்யக்கூடாது என்றும் மக்களவைக்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாகிறவரையே பிரதமராக்க வேண்டும் என்று என்னை இலக்காக வைத்து அத்வானி கூறுகிறார்.

இந்திரா காந்தி பிரதமரான போது மேல்-சபை எம்.பி.யாகத்தான் இருந்தார். தேவேகவுடா, குஜ்ரால் ஆகியோரும் பிரதமராகும்போது மேல்-சபை எம்.பி.க்களாகத்தான் இருந்தனர். இந்த விஷயத்தில் அரசியல் சட்டம் தெளிவாக இருக்கிறது. நீண்டகாலமாக அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, அதுபோன்ற குற்றச்சாட்டுகளை அத்வானி கூறக்கூடாது.

வகுப்பு வாதத்தின் மூலமாக மக்களை பிரிக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. வருண்காந்தி போன்றவர்களின் பேச்சுகளை இதற்கு உதாரணமாக கூறலாம். தேர்தல் கமிஷன் அறிவுரையை ஏற்று அவரை போட்டியிட அனுமதிக்க கூடாது.

இந்தியாவின் முன்னேற்றத்துக்காக அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அதை மார்க்சிஸ்ட் மற்றும் பா.ஜனதா கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளுமே எதிர்மறையான சிந்தனையுடன் உள்ளன. நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்லுவதிலேயே முனைப்பு காட்டுகின்றன.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டை வேகமான வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளேன். சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி தொடருவதற்கு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தில் 80 சதவீதத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

இந்தியாவை சுற்றியுள்ள பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் தீவிரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது. அந்த நாடுகளில் நடைபெறும் சம்பவங்களால் தெற்கு ஆசியாவின் எதிர்காலம் கவலைக்குரியதாக இருக்கிறது. எனவே, நாட்டை எதிர்கொண்டுள்ள சவால்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.

இந்த நாடு எத்தகைய பாதையில் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு நாட்டு மக்களிடம் இருக்கிறது. எனவே, காங்கிரசுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections