"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

சம்பவங்கள்


நடிகை அசின் மீது பெண் புகார்!.மகனை மீட்டு தர கமிஷனரிடம் கதறல்


கோயம்பேட்டில் பயங்கரம்; பூட்டிய வீட்டுக்குள் தாய்-மகன் படுகொலை!. தடயங்களை அழிக்க மிளகாய்ப்பொடி தூவி சென்ற கொலையாளிகள்


சென்னை, மார்ச் 1-

சென்னை கோயம்பேட்டில் பூட்டிய வீட்டுக்குள் தாய்-மகன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். சொத்துக்காக கொலை நடந்ததா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை கோயம்பேடு ஸ்ரீஅய்யப்பா நகர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜகோபால். ஓய்வு பெற்ற ஐ.சி.எப். ஊழியரான இவர் கடந்த 2005-ம் ஆண்டு இறந்து விட்டார். இவருடைய மனைவி காமாட்சி (வயது 68). இவர்களுடைய மகள் லட்சுமி (45). மகன் ராதாகிருஷ்ணன் (38). எம்.காம் பட்டதாரியான ராதாகிருஷ்ணனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. வேலை எதுவும் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

லட்சுமி திருமணமாகி திருமங்கலம் வசந்தம் காலனியில் வசித்து வருகிறார். வழக்கமாக, காமாட்சியும், ராதாகிருஷ்ணனும் தினமும் லட்சுமிக்கு போன் செய்து நலம் விசாரிப்பார்கள். ஆனால் கடந்த 2 நாட்களாக அவர்களிடம் இருந்து போன் எதுவும் வரவில்லை.

இதற்கிடையே, வீட்டு வேலை செய்து வரும் கவிதா, நேற்று முன்தினம் காலை காமாட்சி வீட்டுக்கு வழக்கம்போல் சென்றார். ஏ.சி. மற்றும் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது. நீண்ட நேரம் `காலிங்பெல்'லை அவர் அழுத்தியும், யாரும் கதவை திறக்கவில்லை. பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில், அவர் 2-வது நாளாக நேற்று காலை வந்தார். நேற்றும் காலிங்பெல்லை நீண்ட நேரம் அழுத்தியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த கவிதா, வீட்டிற்கு சென்று தனது தாயிடம் தெரிவித்தார்.

இருவரும் நேற்று மதியம் 11/2 மணியளவில் காமாட்சி வீட்டிற்கு வந்துபார்த்தனர். வீட்டிற்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் இருவரும் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார்கள். மேலும், கோயம்பேடு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காமாட்சியின் மகள் லட்சுமிக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. "வீட்டில் இருந்து 2 நாள் போன் வராத போதே நான் சந்தேகப்பட்டேன்'' என்று பதறியபடி அவரும் அங்கே வந்தார். போலீஸ் இணை கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் காமாட்சியும், கை மணிக்கட்டு அறுபட்ட நிலையில் ராதாகிருஷ்ணனும் பிணமாக கிடந்தனர். தாயும், தம்பியும் பிணமாக கிடப்பதை பார்த்து லட்சுமி கதறி அழுதார். உடனே கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

கொலையாளிகள் புத்திசாலித்தனமாக வீட்டு வாசலில் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். இதனால், மோப்பநாய் `ஸ்பியர்`, வீட்டு காம்பவுண்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்தது. சற்று நேரம் கழித்து தெருவுக்கு வந்த மோப்ப நாய் கொஞ்சம் தூரம் மட்டும் ஓடிவிட்டு பின்னர் வீட்டின் உள்ளேயே திரும்பி வந்தது.

காமாட்சி-ராதாகிருஷ்ணன் வசித்து வந்த வீடு இரண்டுமாடி கொண்டதாகும். வீட்டில் இருந்த நகைகள் அனைத்தும் அப்படியே இருந்தது. இதனால், கொள்ளையடிக்கும் எண்ணத்தில் இந்த கொலை நடந்திருக்காது என்று போலீசார் கருதுகின்றனர். சொத்துக்கு ஆசைப்பட்டு உறவினர்கள் யாராவது இவர்களை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்தது குறித்து போலீசார் கூறுகையில், "பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே கொலை குறித்த விவரம் தெரியும்'' என்றனர்.

கொலையாளிகளை பிடிக்க உதவி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

தாய்-மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவங்கள்


15 வயது பள்ளிக்கூட சிறுமி விபசாரத்தில் வாரம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறாள்


இங்கிலாந்து.பிப்ரவரி 28,2009

இங்கிலாந்தில் 15 வயது சிறுமி ஒருத்தி விபசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறாள். அவள் ஒருவாரத்தில் மட்டும் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தாள். அவள் நியுகேசில் அருகே உள்ள சவுத் ஷீல்ட்ஸ் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தாள்.

அவளது பள்ளிக்கூட ஆசிரியை அவளது பையை சோதனையிட்டபோது, அதில் ஆணுறைகள் இருந்ததை கண்டு அதிர்ந்து போய்விட்டார். அதோடு ஆண்களை ஏற்பாடு செய்து தரும் ஏஜென்சிகளின் போன் நம்பர்கள் ஆகியவையும் இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியை இதுபற்றி போலீசுக்கு புகார் செய்தார்.

போலீசார் அவள் வீட்டை சோதனையிட்டபோது, அதில் 6 லட்சம் ரூபாய் பணம் இருந்து கைப்பற்றப்பட்டது. அவள் வார விடுமுறைகளில் மட்டும் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தாள். வார இறுதி நாளை தன்னுடன் செலவிட விரும்புபவர்கள் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்று கூறி அதை வசூலித்து வந்தாள். அவள் கைது செய்யப்பட்டாள்.


சம்பவங்கள்


இலங்கையில் தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் கைது உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்றபோது போலீசார் இழுத்து சென்றனர்


கொழும்பு.பிப்ரவரி 27,2009

இலங்கையில் பிரபல தமிழ் பத்திரிகையின் ஆசிரியரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது உறவினரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அங்கிருந்தே போலீசார் இழுத்துச் சென்றனர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து "சுடர் ஒளி" என்ற தமிழ் பத்திரிகை வெளியாகிறது. அந்த பத்திரிகையின் ஆசிரியராக வித்யாதரன் (வயது 40) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே, கடந்த 20-ந் தேதி அன்று கொழும்பில் உள்ள தேசிய வருவாய்துறை கட்டிடம் மீது விடுதலைப்புலிகள் விமான தாக்குதல் நடத்தினர். அந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து `சுடர் ஒளி' பத்திரிகையில் செய்திகள் வெளியாகின.

இந்த சூழ்நிலையில், கொழும்பில் ஒரு உறவினர் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அங்கிருந்தே வித்யாதரனை போலீசார் கைது செய்து இழுத்துச் சென்றனர். சுடுகாட்டில் இருந்த வித்யாதரனை, போலீஸ் சீருடை அணிந்த மர்ம மனிதர்கள் சிலர் கடத்திச் சென்று விட்டதாக முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.

சிறிது நேரத்தில், இலங்கை தேசிய பாதுகாப்பு தகவல் மையத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில், `அரசு கட்டிடத்தில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரிப்பதற்காகவே வித்யாதரன் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.


சம்பவங்கள்


இலங்கையில் புலிகள் வான் தாக்குதல்: 50 பேர் காயம்


கொழும்ப.பிப்ரவரி 21,2009

இலங்கை ராணுவ தலைமையகத்தை குறிவைத்து, புலிகள் விமான தாக்குதல் நடத்தினர்.இலங்கை, கொழும்பு நகரில் நேற்று இரவு 10 மணியளவில், ராணுவ தலைமையகத்தை குறிவைத்து, புலிகள் இரு குண்டுகளை வீசினர். இதனால், கொழும்பு முழுவதும், மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. கப்பல் தள பகுதியி<லும் புலிகள் குண்டு வீசியதாகத் தெரிகிறது.இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தோர் கூறுகையில்,"புலிகளின் இரு விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில், இராணுவ தலைமையகம் மீது இரு குண்டுகள் வீசப்பட்டன.

இந்த சம்பவத்தில் 40 பேர் வரை காயமடந்திருப்பதாக கூறப்படுகிறது. இறந்தவர்கள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை" என்றனர்.புலிகளின் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக, ராணுவம் தெரிவித்தது.இரவு முழுவதும் தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

புலிகளின் கொழும்புத் தாக்குதலை தொடர்ந்து, சென்னை மற்றும் டில்லியில் இருந்து அங்கு சென்ற விமானங்கள் தரை இறங்க முடியாமல் திரும்பிவிட்டன.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 9.14 மணிக்கு 257 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு கொழும்பு சென்றது. இதேபோல, 93 பயணிகளுடன் டில்லியில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் விமானமும் அங்கு சென்றது. இந்த இரு விமானங்களும் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்க, அனுமதி கிடைக்கவில்லை.

இதனால், பயணிகளுடன் திரும்பிய அந்த விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.சென்னையில் இருந்து இரவு 11.45 மணிக்கு கொழும்பு புறப்பட வேண்டிய ஜெட்லைட் விமானமும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


சம்பவங்கள்


இன்று இந்தியாவின் மிகப் பெரிய தலைவலி!- என்ன தெரியுமா?


"மாவோயிஸ்ட்" தீவிரவாதிகளை இந்தியாவில் "நக்ஸலைட்டுகள்' என்று அழைப்பது குறித்து அறிந்திருப்பீர்கள்.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 13-ல் மாவோயிஸ்டுகள் ஆக்டிவ்வாக செயல்படுகிறார்கள். "வறுமையில் வாழும் நிலமற்ற ஏழைகளுக்காகவும், மலைவாழ் மக்களுக்காகவும் போர் நடத்துகிறோம்' என்று இவர்கள் "தந்திரமாக'ச் சொல்கிறார்கள். ஆனால் அந்தப் போருக்கு குழந்தைகளைத் தேர்வு செய்கிறார்கள் என்பதுதான் "பிரச்சனை".

சமீபத்தில் மத்திய உளவுத்துறை நடத்திய ரகசிய விசாரணையில், ""கடந்த 10 வருடங்களாக இவர்கள் குழந்தைகளைத் தேர்வு செய்கிறார்கள். அக்குழந்தைகளை தீவிரவாதத் தாக்குதலுக்கு தகவல் திரட்டவும், சென்ட்ரி டூட்டிக்கும், தாக்குதலுக்கான கண்ணிவெடிகள் தயாரிக்கவும், அதைத் தக்க இடத்தில் வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்'' என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளதாம். 1960-ம் ஆண்டிலிருந்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும், அதிகாரிகளையும் கொன்ற இந்த மாவோயிஸ்ட் தீவிரவாதம்,


சம்பவங்கள்


பிரதமரின் மாநாட்டுக்கு மீண்டும் மிரட்டல்


சென்னையில் பிரதமர் கலந்து கொள்ள இருக்கும் மாநாட்டுக்கு மீண்டும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மனித குண்டுடன் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அந்த கடிதத்தில் திடுக்கிடும் தகவல் கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் மன்மோகன்சிங்கின் சென்னை சுற்றுப்பயணத்தையொட்டி ஏற்கனவே இ.மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்து இருந்தது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. பிரதமர் மன்மோகன்சிங் தங்கியுள்ள கிண்டி கவர்னர் மாளிகையிலும் 3 துணை கமிஷனர்கள் தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் வழியில் எல்லாம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அந்த பகுதிகளில் வழி நெடுக 10 அடிக்கு ஒரு போலீஸ்காரர் வீதம் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள்.

2 முறை பாதுகாப்பு ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது. ஜனாதிபதியும், பிரதமரும் பயன்படுத்துவதற்காக டெல்லியிலிருந்து 3 குண்டு துளைக்காத கார்கள் விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து, கொரியர் தபாலில் சென்னை எழும்பூரில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு மிரட்டல் கடிதம் ஒன்று மீண்டும் வந்தது. லஸ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் பேரில் அந்த கடிதம் தமிழில் எழுதி அனுப்பப்பட்டிருந்தது. கடிதத்தில் திடுக்கிடும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. கடித விபரம் வருமாறு:-

சென்னையில் பிரதமர் கலந்து கொள்ளும் மாநாடு, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டு வெடிக்க போகிறது. மனித வெடிகுண்டோடு, தீவிரவாதிகள் சிலரும் சென்னை நகருக்குள் ஊடுருவி உள்ளனர்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம் புரொபஷனல் கொரியர் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. புதுவை மாநிலத்துக்கும் இது போன்ற கடிதங்கள் சில வந்துள்ளன. இந்த கடிதத்தை ஏர் இந்தியா நிறுவன மானேஜர் ராமதாஸ் நேற்று முன்தினம் இரவு போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார்.

உடனடியாக போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். புரொபஷனல் கொரியர் நிறுவனத்தில் விசாரணை நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் தனிப்படை போலீசார் காரைக்கால் விரைந்துள்ளனர்.கடிதம் அனுப்பிய மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன .பிரதமர் செல்லும் இடங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு விடிய, விடிய இந்த பகுதிகளில் போலீசார் வாகன சோதனையும் நடத்தினார்கள். சந்தேக நபர்கள் வேட்டையாடி பிடிக்கப்பட்டனர்.


தி.மு.க. ஆட்சியில் வன்முறை நடப்பதாக குற்றம் சுமத்துவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்


சென்னை, ஜன.8-

தி.மு.க. ஆட்சி காலத்தில் வன்முறைகள் நடப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- திருமங்கலம் தொகுதி நிலவரம் பற்றி கருத்து கூறிய தலைமை தேர்தல் கமிஷனர் கோபால் சாமி "முன்பு பீகார்- இப்போது தமிழ்நாடு'' என்ற அளவிற்கு கூறி வருத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளதே?

பதில்:- அவர் கூறியிருப்பது- பீகார் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் நடைபெற்றபோது அதிக அளவில் வன்முறை, அதற்கு தேர்தல் கமிஷன் துணை என்பதைப் போல சிலர் பிரசாரம் செய்ததை நினைவிலே கொண்டு, தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேண்டுமென்றே கோளாறு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஜெயலலிதா, கோபால்சாமி, தா.பாண்டியன் போன்றவர்கள் கற்பனை செய்து சொல்லியிருப்பதால் "முன்பு பீகார்- இப்போது தமிழ்நாடு'' என்று ஒப்பிட்டுச் சொல்லியிருப்பாரென்று கருதுகிறேன். ஏனென்றால் இவ்வளவு பெரிய குற்றசாட்டினை தேர்தல் நேரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் அந்தஸ்தில் இருப்பவர் யாரும் சாட்டியதில்லை. ஜெயலலிதா சொன்னது போல் அப்படி வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடக்குமானால் தேர்தல் கமிஷன் ஒன்றே தேவையில்லை அல்லவா?

கேள்வி:- சில காவல் துறை அதிகாரிகளின் பெயர்களை சொல்லி அவர்களை பதவி நீக்கம் செய்யும் வரையில் ஓய மாட்டேன் என்று முன்னாள் முதல்-அமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்:- அவர் பதவியிலே இருந்த போது அதிகாரிகளையெல்லாம் சவுக்கால் அடித்து வேலை வாங்குவதாகச் சொன்னவர் ஆயிற்றே! அவர் ஆட்சியிலே இருந்த போது தேர்தல் ஆணையம் காவல்துறை அதிகாரி ஒருவரை மாற்றம் செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பித்தபோது, அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கே சென்றவர்தான் ஜெயலலிதா.

கேள்வி:- திருமங்கலம் வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியாது என்று வைகோ பேசியிருக்கிறாரே?

பதில்:- முயற்சி செய்து கண்ட அனுபவத்தினை கூறியிருக்கிறார் போலும்.

கேள்வி:- திருமங்கலத்தில் தா.பாண்டியன் பேசும் போது, உங்கள் பக்கம் வெற்றுக்காற்று தான் வீசுவதாகவும், அவர்கள் பக்கம் வீசுவது தான் வெற்றி காற்று என்றும் பேசியிருக்கிறாரே?

பதில்:- அவர் பக்கம் கரன்சி காற்று வீசுவதாகத்தான் அந்த கட்சியிலே உள்ள அடி மட்டத் தொண்டர்களே கூறிக்கொள்கிறார்கள்.

கேள்வி:- திருமங்கலத்தில் பேசிய ஜெயலலிதா ஒவ்வொரு கூட்டத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறாரே?

பதில்:- தேர்தலை நடத்துவது தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்திய தேர்தல் கமிஷன். ஜெயலலிதாவும், வைகோவும், தா.பாண்டியனும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து குற்றஞ்சாட்டுவதற்கு தேர்தல் ஆணையம் தான் பதிலளிக்க வேண்டும். அவர்களும் பதிலளித்து விட்டார்கள். இருப்பினும் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டைக் கூறி வருகிறார்கள்.

கேள்வி:- "இரண்டு ஏக்கர் இலவச நிலம் தருவதாக கூறிவிட்டு, பொருளாதார மண்டலம், தகவல் தொழில் நுட்ப பூங்கா என்று விளைநிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. ஏழைகளின் நிலங்களை பறித்து வருகிறார்கள். அந்த நிலங்களையெல்லாம் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பதுதான் அ.தி.மு.க. ஆட்சி செய்யப்போகும் முதல் வேலை'' என்று ஜெயலலிதா திருமங்கலத்தில் சொல்லியிருக்கிறாரே?

பதில்:- அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களைப் பயன்படுத்தி நிலமற்ற ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டத்தை தி.மு.கழக அரசு கொண்டு வந்தது உண்மை தான். அந்த திட்டத்தின் கீழ் 15-12-2008 வரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 39 ஏக்கர் நிலம், 1 லட்சத்து 74 ஆயிரத்து 853 பேருக்கு வழங்கப்பட்டது.

அவர்கள் எல்லாம் அந்த நிலத்தில் உழுது பயிரிட்டு பயன் பெற்று வருகிறார்கள் என்று பேட்டியும் கொடுத்துள்ளார்கள். அவர்களிடம் உள்ள நிலத்தைத் தான் மீட்கப் போவதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே மீட்கப்பட வேண்டியது ஜெயலலிதா கும்பலால் ஆக்கிரமிக்கப்பட்டு கைவசப்படுத்தப்பட்டுள்ள தலித்களுக்கு சொந்தமான சிறுதாவூர் பகுதிகளிலே உள்ள நிலங்களைத் தான்! அதைத்தான் தற்போது அவர்களுடன் கூட்டணியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜனும் கூறி வருகிறார்.

கேள்வி:- நடுநிலையோடு இருந்து பணியாற்ற வேண்டிய இடத்தில் இருக்கும் சில அதிகாரிகள் இப்போதெல்லாம் ஒரு தரப்பாகப் பேசுவது சரியா?

பதில்:- ரத்தம் தண்ணீரை விட வலிமை வாய்ந்தது என்பது பழமொழி.

கேள்வி:- ஜெயலலிதா இடைத்தேர்தல் பிரசாரத்தில் இன்றைய ஆட்சியில் வன்முறை நடைபெறுவதாக கூறியிருக்கிறார். அவருடைய ஆட்சியிலே என்ன நிலை?

பதில்:- 15-8-1981-ல் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது திருச்சியில் காரை மறித்து தாக்குதல்.

29-10-1991 அன்று ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் காரில் சென்ற போது தாக்குதல்.

13-3-1992 அன்று மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் பி.சொக்கலிங்கம் காரில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார்.

19.5.1992 அன்று ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி சந்திரலேகா மீது எழும்பூர் ரெயில் நிலையம் அருகே ஆசிட் பாட்டில் வீசப்பட்டு தாக்கப்பட்டார்.

10.12.92 அன்று சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ராஜாராம் வீட்டிற்குள் 15 பேர் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

14.12.92 அன்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே 100 பேர் கொண்ட ஆளுங்கட்சியினரால் தாக்கப்பட்டார்.

11.5.93 அன்று எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் தலைவராக இருந்த எம்.ஜி.சுகுமார் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்ச்சி முடிந்து வந்து கொண்டிருந்து போது தாக்கப்பட்டார்.

19.6.94 அன்று திருச்சியில் எஸ்.ஆர்.ராதா அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்டார்.

12.7.94 அன்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அனந்தகிருஷ்ணனை வீட்டிலேயே சென்று பத்து பேர் தாக்கினர்.

21.7.94 அன்று வழக்கறிஞர் விஜயன் சென்னையில் அவரது வீட்டிலே தாக்கப்பட்டார்.

10.11.94 அன்று உப்பிலியாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் சென்னையில் தாக்கப்பட்டார்.

2.12.94 அன்று மத்திய தேர்தல் கமிஷனர் சேஷன் விமான நிலையத்தில் கேரோ செய்யப்பட்டு, பின் அவர் தங்கியிருந்த ஓட்டலிலும் தாக்கப்பட்டார்.

8.2.95 அன்று ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மோகன் என்பவர் அரிவாளால் தாக்கப்பட்டார்.

30.5.95 அன்று கூடுதல் அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டார்.

18.6.2001 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாண்டி என்பவர் மதுரையில் கொலை செய்யப்பட்டார்.

9.8.2001 அன்று தமிழக முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் கணேசபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

31.12.2001 அன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.பாலன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

12.3.2002 அன்று கோவை ரத்தினசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டார்.

28.3.2003 அன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

1.5.2002 அன்று தி.மு.க.வை சேர்ந்த வெங்கடேசன் தர்மபுரி மாவட்டத்தில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

3.6.2002 அன்று சென்னையில் தீனதயாளன் என்ற சிவசேனா நிர்வாகி கொலை செய்யப்பட்டார்.

26.7.2004 அன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லை மாவட்டத்தில் தாக்கப்பட்டார்.

3.9.2004 அன்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார்.

31.12.2004 அன்று நெல்லையில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

4.2.92 அன்று எம்.ஜி.ஆர். நினைவில்ல பொறுப்பாளர் முத்து மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு.

13.6.2001 அன்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு.

10.7.2003 அன்று மதுரையில் செரினா மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு.

14.8.91 அன்று தராசு அலுவலகம் மீது தாக்குதல்.

12.9.2002 அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாளமுத்து நடராஜன் என்பவர் கொலை.

24.3.2004 அன்று திருவேற்காட்டில் தி.மு.க.வைச் சேர்ந்த கஜேந்திரன் கொலை.

9.10.2005 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை.

23.1.2004 அன்று திருவரங்கத்தில் திருமண மண்டபம் தீ விபத்தில் 61 பேர் உயிரிழப்பு.

16.7.2004 அன்று கும்பகோணத்தில் பள்ளியில் தீ விபத்து-19 குழந்தைகள் உயிரிழப்பு.

6.11.2005 அன்று சென்னையில் நிவாரண நிதி வழங்கப்பட்டபோது நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உயிரிழப்பு.

18.12.2005 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நிவாரண நிதி வழங்கப்பட்ட பொது நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு. 37 பேர் காயம்.

11.12.2004 அன்று தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வல்லம் இரா.அறிவழகன் கொலை செய்யப்பட்டார். கவர்னர் சென்னாரெட்டி காரை வழிமறித்து தாக்கப்பட்டது; சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் தாக்கப்பட்டது; நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உறவினர் மீதே கஞ்சா வழக்கு என்று எழுதிக்கொண்டே போகலாம். இவ்வளவு ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றவை. அவர்தான் தி.மு.க. ஆட்சியில் வன்முறை என்கிறார்.

கேள்வி:- லாரிகள் வேலை நிறுத்தம் 3-வது நாளாக நீடிக்கிறதே?

பதில்:- லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும், தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் நலன், நாட்டின் பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் மீண்டும் அமர்ந்து பேசி லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு சுமுகமான முடிவினை உடனடியாகக் காண வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections