"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

சம்பவங்கள்


நடிகை அசின் மீது பெண் புகார்!.மகனை மீட்டு தர கமிஷனரிடம் கதறல்






உதவியாளர் வேலைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற எனது மகன் காணவில்லை. கேட்டால், தாதா கும்பலுடன் சேர்ந்து விட்டதாக மழுப்புகின்றனர். எனவே, எனது மகனை மீட்டுத் தரவேண்டும்,'' என்று பிரபல நடிகை அசின் மற்றும் அவரின் தந்தை மீது முன்னாள் போலீஸ்காரரின் மனைவி ஒருவர், கமிஷனர் ஜாங்கிட்டிடம் கண்ணீர் மல்க புகார் செய்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறக்கும் பிரபல நடிகை அசின். கஜினி, போக்கிரி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரெட்ஹில்ஸ், காந்திநகர், கருமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலைவடிவு என்பவர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் முத்துக்கருப்பன் இறந்துவிட்டார். அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசில் வேலை பார்த்தார். எங்களின் மகன் நல்லமுத்துக்குமார் (23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் விஜயிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்தான். "போக்கிரி' திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது, நடிகை அசினுடன் எனது மகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதிக சம்பளம் கொடுப்பதாகக் கூறி, எனது மகனை உதவியாளர் வேலைக்கு அசின் வைத்துக் கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக நடிகை அசினிடம் எனது மகன் உதவியாளராக வேலை பார்த்து வந்தான்.

கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன், அசினுடன் படப்பிடிப்பு ஒன்றுக்கு சென்றான். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் எனது மகனின் இடதுகால் உடைந்தது. எனது மகனுக்கு மும்பையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த தகவலறிந்து, மும்பை சென்ற நான், அங்கு ஒன்றரை மாதம் தங்கியிருந்து, சிகிச்சை பெற்ற பின் அவனை சென்னைக்கு அழைத்து வந்தேன். இங்கு வந்த பின், அடிக்கடி எனது மகனை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நடிகை அசின், வேலைக்கு வரும்படி அழைத்தார்.

ஒரு கட்டத்தில் அந்த நடிகை அழைத்ததின்பேரில் எனது மகனும் மும்பை சென்றான். அங்கிருந்து என் மகன் தினமும் போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். ஒரு நாள் அப்படி பேசிய போது, "இங்கு எனக்கு வேலை பிடிக்கவில்லை. நடிகை அசின் கடுமையாக நடந்து கொள்கிறார். நொண்டி என்று அடிக்கடி திட்டுகிறார்' என்று புலம்பி னான்."வேலை பிடிக்காவிட்டால் உடனடியாக சென்னைக்கு திரும்பி வந்து விடு' என்று மகனிடம் கூறினேன்.

அதன் பின், எனது மகனிடம் இருந்து போன் வரவில்லை. நான் அவனை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. வேதனையடைந்த நான், எனது சகோதரியுடன் மும்பைக்கு சென்றேன்.அங்கு எனது மகன் தங்கியிருந்த அறையில் விசாரித்தபோது, "முத்துவை பார்த்து 10 நாட்களுக்கு மேலாகிறது' என்றனர்.பின், நடிகை அசினின் கார் டிரைவர் முருகன் என்பவருடன் தொடர்பு கொண்டு, அசின் வீட்டிற்கு சென்றேன். படப்பிடிப்பிற்கு சென்றதால், அவரை தொடர்ந்து பல நாட்கள் பார்க்க முடியவில்லை.

அதன் பிறகு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டேன்.அசினின் தந்தை ஜோசப் எடுத்து பேசியபோது, "உனது மகன் வேலையில் இருந்து நின்று விட்டான். அவனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பி விட்டோம்' என்றார். இதே பதிலை நடிகை அசினும் கூறினார். இருப்பினும் நான் மும்பையில் தங்கி எனது மகனை தேடினேன்.இது தெரிந்ததும் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்த ஜோசப், ஒரு கடிதத்தை கொடுத்தார். பிறகு, எனது மகன் தாதா கும்பலில் சேர்ந்து விட்டான் என்று கூறினார்.

இதை மறுத்த நான், மும்பை போலீசாரிடம் புகார் கொடுக்கலாம் என்று கூறியதற்கு, "நீங்கள் சென்னை செல்லுங்கள்; உங்கள் மகனை தேடி பிடித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்' என்று ஜோசப் கூறினார்.அவர் கூறியபடி இன்றுவரை எனது மகனை பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. நடிகை அசின் மற்றும் அவரின் தந்தை ஜோசப்பை பல முறை தொடர்பு கொண்டும் மொபைல் போனை எடுப்பதில்லை.

எனவே, நடிகை அசின், அவரது தந்தை ஜோசப் மீது நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு சுடலைவடிவு கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள் ளது.இது குறித்து விசாரிக்கும்படி ரெட்ஹில்ஸ் போலீசாருக்கு கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections