"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

ஹாட் நியூஸ் - (01-03-2009)


புதுச்சேரி சிறையில் இருக்கும் டைரக்டர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது!.நெல்லை போலீசார் நடவடிக்கை



சினிமா டைரக்டர் சீமான் நேற்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சினிமா டைரக்டர் சீமான், புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் நெல்லை வக்கீல் சங்கம் சார்பில் கடந்த மாதம் 17-ந்தேதி பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் டைரக்டர் சீமான் பேசினார்.

இதன்பின்னர் டைரக்டர் சீமான் வக்கீல்கள் உதவியுடன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி புதுச்சேரி வழக்குக்காக சரண் அடைந்தார். அவரை போலீசார் புதுச்சேரி ஜெயிலில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் மீது பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை போலீசார் புதுச்சேரி ஜெயில் அதிகாரியிடம் நேரில் சென்று கொடுத்தனர்.

இந்த நிலையில் டைரக்டர் சீமான் நேற்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுபற்றி நெல்லை மாநகர போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை மாநகரம், பாளையங்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மார்க்கெட் ஜவகர் திடலில் நெல்லை வக்கீல்கள் சங்கத்தால் 17.2.2009 அன்று மாலை 7.10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை நுங்கம்பாக்கம், வெங்கடேசுவரா நகரை சேர்ந்த செவத்தி செபஸ்டியான் மகனும் 40 வயது நிரம்பியவருமாகிய தமிழ் திரைப்பட டைரக்டர் செ.சீமான், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், தமிழக மக்களிடையே இனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் பேசி அதன் மூலம் இந்திய இறையாண்மைக்கும், பொது ஒழுங்கு பராமரிப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் அவர் மீது குற்ற எண் 308/2009 சட்டப்பிரிவு 505 இந்திய தண்டனை சட்டம் மற்றும் 13(1)(பி) 13(2) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967 என்ற வழக்கு 22.2.2009 அன்று பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.

மேலும் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசியதால், நெல்லை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன், உதவி கமிஷனர் ராமச்சந்திரன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.மஞ்சுநாதா உத்தரவுப்படி 28.2.2009-ந் தேதி செ.சீமான் மீது `தேசிய பாதுகாப்பு சட்டம்' 1980-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு புதுச்சேரி மத்திய ஜெயிலில் ``தடுப்பு காவல் ஜெயில்வாசியாக'' அடைக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

நெல்லை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜா தலைமையில் போலீசார் நேற்று காலை புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைக்கு வந்தனர். அங்கு இயக்குனர் சீமானை சந்தித்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதற்கான நகலை கொடுத்தனர். அதனை இயக்குனர் சீமான் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இயக்குனர் சீமானை புதுச்சேரி போலீசார் வருகிற 6-ந் தேதி கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளனர். அன்று நெல்லை போலீசார் அவரை கைது செய்து அழைத்து செல்லலாம் என தெரிகிறது.


ஹாட் நியூஸ் - (28-02-2009)


இந்தியாவுக்கு ஆபத்து : எச்சரிக்கிறார் தாக்கரே


சிவசேனா கட்சியின் பத்திரிகையான, "சாம்னா'வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அன்னிய நாட்டு பயங்கரவாதிகள், நேபாள மாவோயிஸ்டுகள், சீன அரசு, இலங்கையில் இருந்து விடுதலைப் புலிகள் என, பல தரப்பில் இருந்தும் நாட்டிற்கு ஆபத்து உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் தென்பகுதியில் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என, இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. புலிகளை பெருமளவு வெற்றி கொண்டு விட்டதாக இலங்கை ராணுவத்தினர் அறிவித்தாலும், கொழும்பில் புலிகளின் வான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்னை அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்னை. இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் நாம் அனுதாபம் காட்டினாலும், இந்தப் பிரச்னையில் எச்சரிக்கையான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். காஷ்மீரில் பிரிவினைவாதிகளை எதிர்க்கும் நாம், புலிகளை மட்டும் ஆதரிக்க முடியாது. புலிகளுடன் போரிட இந்திய ராணுவத்தை அனுப்பியதால், ராஜிவ் காந்தி தன் இன்னுயிரை இழக்க நேரிட்டது. தற்போதைய அரசும் அதே போன்ற தவறை செய்யக்கூடாது.

இலங்கை அரசு அங்குள்ள தமிழ் மக்களை அழிக்க நினைத்தாலும், அதுவும் கண்டிக்கத்தக்கதே.இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நலனில் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அக்கறை காட்டும் போது, மற்ற நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் நலனில் நாம் ஏன் அக்கறை காட்டக்கூடாது? இலங்கை அரசுக்கு எதிராகத்தான் புலிகள் போராடி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிராக அல்ல.பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும், நம் நாட்டின் நம்பர் ஒன் எதிரியான பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய அரசு தயாராக இல்லை. அதேபோல் தான், மத்தியில் உள்ள தற்போதைய அரசு இலங்கை அரசுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்காது. இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடுகின்றனர்.

இந்தியாவுக்கு எதிராகப் போராட அவர்கள் நினைத்தால், 100 கோடி இந்தியர்களின் ஆதரவை, அனுதாபத்தை இழந்து விடுவர்.இந்தியாவில் பாக்., ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்க, தைரியமான இலங்கைத் தமிழர்களின் உதவியைப் பெறுவது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்கலாம். வங்கதேசத்தில் அங்குள்ள ரைபிள் படையினரால் பிரச்னை உருவாகியுள்ளது. இப்படி பல தரப்பிலும் நாட்டிற்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளதால், அதை தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுப்பது பற்றி மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்.

இவ்வாறு, "சாம்னா' பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹாட் நியூஸ் - (27-02-2009)


தமிழகத்தில் மீண்டும் மின் வெட்டு - ஓட்டுக்கு வேட்டு?


அணைகளில் நீர் வற்றியதாலும், காற்றாலை உற்பத்தி குறைந்ததாலும் தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படும் மின் வெட்டு அமலாக உள்ளது. தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டாக அறிவிக்கப்படும் மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் தொழிற்சாலைகளை இயக்க தடை விதிக்கப்பட்டது. பற்றாக்குறையை சமாளிக்க தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருநாள் கட்டாய விடுமுறை அளிக்கவும் வாரியம் நடவடிக்கை எடுத்தது. நகரில் 6 மணி நேரமும், புறநகரில் 12 மணி நேரமும் மின் வெட்டு இருந்தது. அணைகளில் நீர் போதுமானதாக இல்லாததாலும், காற்றாலை உற்பத்தி 70 சதவீதம் குறைந்ததாலும் மின் வெட்டு தவிர்க்க இயலாது என அரசு அறிவித்தது.

தமிழகத்தில் தற்போது நகரில் 2 மணி நேரமும், கிராமங்களில் 4 மணி நேரமும் மின் வெட்டு அமலில் உள்ளது. அதற்கு பதிலாக நகரில் 4 மணி நேரமும், கிராமங்களில் 8 மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே வாரியத்தால் அறிவிக்கப்பட்ட நேரத்தில் மின் வெட்டு அமலாகவில்லை. அதற்குபதிலாக காலையும், மாலையும் 2 முறை தலா 2 மணி நேரம் "சோதனை மின் வெட்டு' நடக்கிறது. அறிவிக்கப்படும் மின் வெட்டை எளிதாக்க இம்முறையை கையாண்டு வருவதாக வாரிய வட்டார தகவல் தெரிவிக்கிறது.


ஹாட் நியூஸ் - (24-02-2009)


"ஐகோர்ட் தாக்குதலுக்கு அ.தி.மு.க.,வும், சுப்ரமணியசாமியும் தான் காரணம்" - சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் சர்ச்சைப் பேச்சு


"ஐகோர்ட்டில் வக்கீல்களுக்கும், போலீசிற்கும் இடையே நடந்த மோதல், திட்டமிடப்பட்ட கூட்டுச் சதி. அ.தி. மு.க., தலைமையும், சுப்ரமணியசாமியும் சேர்ந்து நடத்திய ஏற்பாடு தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சந்தேகிக்கிறேன்,'


ஹாட் நியூஸ் - (23-02-2009)


"ராஜிவ் கொலைக்கு பழிவாங்குகிறார் சோனியா" காடுவெட்டி குரு சர்ச்சைப் பேச்சு


அரியலூரில் கடந்த ஆண்டு இதே பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக, ஆறுமாதம் கழித்து என் மீது வழக்கு போடப்பட்டது. ஆட்சி அதிகாரம், அமைச்சர் பதவி உள்ள காரணத்தால், கலெக்டர், எஸ்.பி., மூலம் தி.மு.க.,வினர் திட்டமிட்டு என்னை கைது செய்தனர். நம்முடன் கூட்டணியாக இருந்து, அமைச்சராகி, முதல்வராகியவர்கள், நம்மையே அழிக்க நினைத்தது ஏன் என்ற கேள்வி தான் எழுகிறது. இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுகின்றனர். ஆனால், கருணாநிதி மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டார். தனது கணவர் ராஜிவ் படுகொலைக்கு பிரபாகரன் தான் காரணம் என்ற எண்ணத்துடன், இலங்கையில் தமிழர்களை கொல்லும் செயலில் ஈடுபட்டுள்ளார் சோனியா. அதனால் தான் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழர்களை அழித்து கொண்டிருக்கிறார். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் உள்ள தமிழன்கூட அகதியாக வேண்டிய நிலை ஏற்படும். தமிழகத்தில் இனி எவனும் திராவிடம் பேசக்கூடாது; அப்படி பேசுகிற எவனும் தமிழன் அல்ல. லோக்சபா தேர்தல் வருகிறது. "நாம் யாருடன் கூட்டணி' என்று நீங்கள் கேட்கலாம். நமது தலைமையில் தான் கூட்டணி. நாம் இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெரும். ஈழத்தமிழர்களுக்கு ஜெயலலிதா எதிரி; கருணாநிதி துரோகி. எதிரியை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். வரும் 2011ல் தமிழகத்தில் தமிழனின் ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்துடன் நாம் செயல்பட வேண்டும்.


ஹாட் நியூஸ் - (21-02-2009)


விலைவாசி உயர்வு, மின் வெட்டு, அரசின் மீது அதிருப்தி என்பதெல்லாம் திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியோடு முனை மழுங்கிப் போய்விட்டன. பொதுவாக ஓர் ஆளுங்கட்சியின் மீது அதிருப்தி நிலவும். அதே நேரத்தில் 1996, 2004 ஆகிய தேர்தல்களின் போது அ.தி.மு.க. ஆட்சியின் மீதோ, 1977 தேர்தலின் போது தி.மு.க. மீதோ "இந்த ஆட்சியை வரவிடவே கூடாது' என்று மக்களுக்கு ஏற்பட்ட கோபம் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.அதாவது அரசின் மீது அதிருப்தி இருக்கிறது; ஆனால் அது எதிர்த்து வாக்களிக்கும் கோபமாக இல்லை என்பதே இன்று தி.மு.க. ஆட்சியின் மீது பரவலாக இருக்கும் நிலை! அதற்குக் காரணம் பல்வேறு தரப்பட்ட, குறிப்பாக கிராமப்புற மக்களிடம் சென்றடையும் அரசின் இலவசத் திட்டங்கள்!


ராமதாஸ் டில்லியில சோனியாவைச் சந்தித்தார் அல்லவா?.அதன் பிறகு சிதம்பரத்தோட, "இன்ஸ்ட்ரக்ஷன்' படி தான் சுதர்சனம் போய் ராமதாசை பார்த்தாரு... அதன்படி, ராமதாஸ் டில்லியில சோனியாவை சந்திச்சார்... டில்லியில, "ஸ்ட்ரிக்ட்'டா சொல்லிட்டாங்க... "கூட்டணியில இருக்கறதா இருந்தா, மத்திய அரசை விமர்சிக்காம அமைதியா இருங்க... இல்லேன்னா கூட்டணியை விட்டு வெளியேறிட்டு, விமர்சனம் பண்ணுங்க'ன்னு சொல்லிட்டாங்களாம்... அதனால, இப்பிரச்னையில இனி, ராமதாஸ் "ஸ்ருதி' குறையும்மாம்..


ஹாட் நியூஸ் - (30 - 01-2009)


திருமங்கலம் தேர்தலுக்கு முன்பு வரை தி.மு.க,அ.தி.மு.க.வை ரொம்பவுமே மிரட்டிக் கொண்டிருந்த விஜயகாந்த்...திருமங்கலம் தேர்தலுக்குப் பிறகு,தன் நிலையை மாற்றிக்கொண்டு விட்டாராம். "நான்தான் அடுத்த முதல்வர்' என்ற கோஷத்தை தாற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு, வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்க உதவும் சக்தியாக அ.தி.மு.க. அல்லது தி.மு.க. அணியில் இடம்பெறவே "கேப்டன்' விரும்புகிறார் என்பதே தே.மு.தி.க. வட்டாரத் தகவல்!


எங்கள் தலைவர் (பிரபாகரன்) எங்கும் சென்றுவிடவில்லை. போர்முனையில்தான் இருக்கிறார். அவரும் எங்கள் போராட்ட இயக்கமும் மக்களுடனேயே இருந்து போராடி வருகிறோம். சுதந்திரமான, கவுரவமான ஒரு அரசியல் தீர்வுக்காகவே போராடி வருகிறோம். அது எல்லோருக்குமே நன்கு தெரிந்த விஷயமாகும். எமது மக்களின் அந்த சுதந்திரமும், கவுரவமும் உறுதிப்படுத்தப்படும் வரை நாம் போராடியே தீருவோம்''.- விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா.நடேசன், பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில்.,



ஹாட் நியூஸ் - (15 - 01-2009)


பல தொழிலதிபர்களையும், கல்வி அதிபர்களையும், தலைவர்களையும் உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். ஆனால் அவரது வளர்ப்பு மகன் ("எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனான எம்.ஜி.சுகுமாரின் (எம்.ஜி.சக்ரபாணியின் மகன்) மறைவு,) இதய நோய்க்கு சிகிச்சை பெற பணமின்றி கஷ்டப்பட்டு மரணமடைந்தார் என்பது இதயத்தைக் கனக்க வைக்கும் கொடுமை. இது ஒருபுறமிருக்க, அ.தி.மு.க. முன்னணித் தலைவர்களோ, தொண்டர்களோ சுகுமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை.


"தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத் தலைவராக இருந்த நாகராஜன் ஓய்வு பெற்று ஆறாவது மாதமும் வந்துவிட்டது. ஆனால் இன்னும் அவரைத்தான் அந்த சங்கத்தின் தலைவராக "ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெப்சைட்' காண்பிக்கிறது. அது மட்டுமின்றி, அதன் செயலாளராக இருந்த ஸ்கந்தன், மத்திய அரசுப் பணிக்கு போய்விட்டார். அவர் இன்னமும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கச் செயலாளராக நீடிக்கிறார்.


திருமங்கலம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தரப்பில் முக்கிய மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரமும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை. அதற்குக் காரணம் அவர்களுக்கு உரிய முறையில் தி.மு.க. தரப்பிலிருந்து அழைப்பு தரவில்லை என்பதுதானாம்.


தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி ஏப்ரல் மாத வாக்கில் ஓய்வு பெறுவதால், பாராளுமன்றத் தேர்தல் நடக்கும் நேரத்தில் நரேஷ் குப்தாவிற்கு தலைவலிதான்''. அது மட்டுமின்றி,"இது போன்ற சி.ஈ.ஓ. (நரேஷ் குப்தா)வை வைத்துக்கொண்டு வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது. அதனால் இவரை மாற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளதாம் தி.மு.க. தரப்பு.



ஹாட் நியூஸ் - (08-01-2009)


"போர் நிறுத்தத்தை வலிறுத்தி பிரணாப் முகர்ஜி இதுவரை இலங்கை செல்லவில்லை. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது" - சி.பி.ஐ. கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா


"இலங்கையில் போரை நடத்துவதே இந்தியாதான். கிளிநொச்சியைக் கைப்பற்றியது இந்திய அரசின் வழிகாட்டுதலில்தான்" - தமிழ் உணர்வாளர்கள் குற்றச் சாட்டு


யாருக்கு எவ்வளவு? என்பது 12-ம்தேதி வரை சஸ்பென்ஸ் இருந்தாலும், "திருமங்கலத்து க.க. - தி.மு.க.40 %. அ.தி.மு.க.30 %, தே.மு.தி.க. 21 %. சமத்துவ மக்கள் கட்சி 6 %.


"தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை, திருமங்கலத்தில் நடுநிலைதான்" - பா.ம.க. தலைவர் ராமதாஸ் முடிவால்,தி.மு.க.வுக்கு அதிர்ச்சிதான் என்றாலும், ராமதாஸ் கோரிக்கையை ஏற்று மதுவிலக்கு தொடர்பாக அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம் மீண்டும் கூட்டணிக்கான முயற்சிகள் தொடரும் என்றுதான் தி.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன.''


"சாமியைத் தாக்கிய,கான்ஸ்டபிள் முதல் எஸ்.பி. வரை காவல்துறையினர் பட்டியலை செங்கோட்டையனிடம் கேட்டிருக்கிறாராம் ஜெ.''


"நான் கடவுள் படத்தில் முஸ்லிமான ஆர்யா, ஹீரோவாக நடிக்கலாமா என்று போராட்டம் நடத்தத் திட்டம்" - ஹிந்து மக்கள் கட்சி.


"தோழி குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக ஜெ., கூறிவிட்டாராம்.


"மக்களவைத் தேர்தலுக்கு, ஜெயலலிதா 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டாராம்.


"அடிதடிக்குள் சிக்கிய ஆளுங்கட்சித் தொலைக்காட்சியின் முக்கிய புள்ளிக்கு வெற்றிகரமான டி.வி.யில் வரவேற்புக் காத்திருக்கிறதாம்.


"தே.மு.தி.க.வைத் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும்" - என காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறதாம்.




My site is worth $876.
How much is yours worth?


©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections