ஹாட் நியூஸ் - (18-03-2009) "புலித் தலைவர் பிரபாகரன் போர்க்களத்தில்தான் இருக்கிறார்" - இலங்கை ராணுவம் அறிவிப்பு ![]() ![]() புலித் தலைவர் பிரபாகரன் போர்க்களத்தில்தான் இருக்கிறார். அவர்தான் போரை பின்னணியில் இருந்து நடத்துகிறார் என, இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் குறைந்து விட்டன. அவர்களை விரைவில் வீழ்த்தி விடுவோம் என, ராணுவம் கூறிவருகிறது. மேலும், புலித் தலைவர் பிரபாகரன் எங்கிருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட செய்திகளும் வெளியாகின. அவர் வெளிநாட்டிற்கு தப்பி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புலித் தலைவர் பிரபாகரன் போர்க்களத்தில்தான் உள்ளார் என, இலங்கை ராணுவ தகவல் தொடர்பாளர் உதயநானயக்கரா கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ராணுவத்தை எதிர்த்து புலிகளின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் தற்போது போரிட்டு வருகின்றனர். அதனால், அவர்களுக்கு அடுத்த கட்டத்தில் புலித் தலைவர் பிரபாகரன் இருக்கலாம். போர் நடக்கும் பகுதியில்தான் பிரபாகரன் உள்ளார். அவர் நாட்டை விட்டு ஓடவில்லை. இலங்கையின் வடபகுதியில் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் சுருங்கியுள்ளதால், புலிகள் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர். மேலும், ராணுவத்துடன் நடக்கும் சண்டையில் ஏராளமான புலிகள் கொல்லப்படுவதால், அவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. புலிப்படையினரை அவர்களின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் மற்றும் கடல்புலிகள் தலைவர் சூசை ஆகியோர் வழிநடத்துகின்றனர். சமீபத்திய வாரங்களில் ராணுவம் பெரிய அளவிலான வெற்றியை பெற்றுள்ளது. புலிகளை மேலும் தோற்கடிக்கவும் தயாராகி வருகிறது. இவ்வாறு ராணுவ தகவல் தொடர்பாளர் கூறினார்.இதற்கு முன் ஆஸ்திரேலிய ரேடியோ ஒன்றுக்கு பேட்டி அளித்த புலிகள் அமைப்பின் தலைவர் திலீபனும், "புலித் தலைவர் பிரபாகரன் போர்களத்தில்தான் உள்ளார்' எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புலித் தலைவர் பிரபாகரனுக்கு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் ஆனந்தசங்கரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் கூறியுள்ளதாவது: புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டதால், புலித் தலைவர் பிரபாகரன், தன் படையினருடன் சரண் அடைய வேண்டும். இதுபோன்ற ஒரு முடிவை எடுத்தால், போர் நடக்கும் பகுதியில் உள்ள மக்கள் நிவாரணம் பெறுவர். நிம்மதி அடைவர். எங்களைப் பொறுத்தமட்டில் போர் முடிந்து விட்டது என்றே நம்புகிறோம். தற்போதைய நிலையில், புலிகளை முற்றிலும் தோற்கடிக்க, போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வரும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. போர் நடக்கும் பகுதியில் தற்போது 81 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர்களை பிடித்து வைப்பது புலிகளுக்கு எந்த வகையிலும் பலன் தராது. இவ்வாறு ஆனந்தசங்கரி கூறியுள்ளார். இதனிடையே, போர் தீவிரமாக நடக்கிறது என்றும், புதுமாந்தளம் பகுதியில், பைபர் கிளாஸ் படகு நான்கில் தப்பிய அப்பாவித் தமிழர்களை இலங்கை கப்பற்படை பிடித்தது என்று கூறப்பட்டது. சுண்டிக்குளம் அருகே 66 தமிழர்கள் மீட்கப்பட்டு, அரசு பொறுப்பில் வைக்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டது. மேலும் நேற்றைய மோதலில் 14 புலிகள் இறந்தனர் என்று ராணுவம் அறிவித்தது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |