"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

தமிழ்ப்புத்தாண்டு தினக் கொண்டாட்டம்


"இங்கிலாந்து, அமெரிக்க சுதந்திர தினம் போல தமிழ்ப்புத்தாண்டு தினத்தை வாண வேடிக்கையுடன் கோலாகலமாக கொண்டாட வேண்டும்" - முதல்-அமைச்சர் கருணாநிதி



சென்னை,

தமிழ்ப்புத்தாண்டு தினத்தை வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் அரசின் சார்பில் திருவள்ளுவர், தந்தை பெரியார், அம்பேத்கார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், தமிழ்த்தென்றல் திரு.வி.க., முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் பெயர்களில் அமைந்த சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு முனைவர் பொற்கோ, பெரியார் விருதுக்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஞான.ராஜசேகரன், அம்பேத்கார் விருதுக்கு எழுத்தாளர் சோலை என்ற கா.சோமசுந்தரம், அண்ணா விருதுக்கு சு.மறைமலையான், பெருந்தலைவர் காமராசர் விருதுக்கு ஆ.கோபண்ணா, பாரதியார் விருதுக்கு இரா.மணியன், பாரதிதாசன் விருதுக்கு கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், திரு.வி.க.விருதுக்குச.பா.அருளானந்தம், கி.ஆ.பெ.விசுவநாதம் விருதுக்கு பேராசிரியர் த.பழமலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார்.

விழாவில், தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தந்தைபெரியார் விருது உள்பட 9 விருதுகளை வழங்கியும், விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி மற்றும் தங்கப்பதக்கம் வழங்கியும், சிறந்த நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தாருக்கும் பரிசுகள் வழங்கியும், வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு நிதி உதவி ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசியதாவது:-

கடந்த சில நாட்களாக ஓய்வின்றி பல நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டதால், உடல் நலம் கெட்டிருக்கிறது, அதை விட கைகளிலே ஒன்று - சரியாக பணியாற்ற முடியாமல்-தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

"லெப்ட்'' சரியாக இல்லை நான் இடது கையைத் தான் சொல்லுகிறேன் சரியாக இருந்தாலும் என்னால் பயன்படுத்த முடியவில்லை. அதற்காகத்தான் நான்கைந்து நாட்கள் அதற்கு குழந்தைக்கு கட்டுவது போல ஒரு தொட்டில் கட்டி, அதற்கு ஆராரோ பாடிக்கொண்டிருந்தேன். மருத்துவர்கள் ஒரு சிறிய அளவு அறுவை சிகிச்சை போல நேற்றைய தினம் அப்பல்லோ மருத்துவ மனையிலே செய்து - ஒரு நாள் ஓய்வெடுக்க வேண்டும், உங்களால் முடியுமென்று கேட்டார்கள். எந்தப் பத்தியம் வேண்டுமென்றாலும் எடுக்க முடியும், ஓய்வு என்பது முடியாது என்று அவர்களுக்கு சொல்லிவிட்டு, கலைவாணர் அரங்கத்திற்கு வந்து உங்களுடைய திருமுகங்களையெல்லாம் பார்த்தாலே அந்த பலன் ஏற்பட்டு விடும், அந்த வலிமை ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கையோடு உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பை இப்போது நான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.


பேரறிவாளர்களுக்கு நல்லறிவாளர்களுக்குக் கிடைத்திருக்கின்ற இந்த விருதுகளை தமிழ்ப்புத்தாண்டு தொடங்குகின்ற இந்த நாளில் -நேற்றையதினம் புத்தாண்டு-ஏழையெளியவர்களுக்கெல்லாம் -எல்லோருக்கும் சமத்துவப் பொங்கல் சாப்பிட இந்த அரசின் சார்பாக அவர்களுக்கெல்லாம் தேவையான பொருட்களை வழங்கிய அரசு -இந்த அரசு -இந்தப் புத்தாண்டை இதற்கு முன்பு நாம் கொண்டாடினோம். வருடப்பிறப்பு என்ற பெயரால் கொண்டாடினோம்.

தமிழனுக்கு ஒரு ஆண்டு வேண்டும், அந்தத் தமிழ் ஆண்டு, புத்தாண்டு தை முதல் நாளாக தான் இருக்க முடியும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று அந்தச்சொல் வந்ததற்கு காரணமே, தை பிறந்தால் தான் தமிழனுக்கு, ஏழைக்கு, விவசாயிக்கு, உழவனுக்கு, பாட்டாளிக்கு வாழ்வு பிறக்கின்றது. ஆகவே அந்த நாளை நாம் புத்தாண்டு என்று வைப்போம் என்று வைத்தார்கள். அதற்கு முன்பு இருந்த புத்தாண்டு, வருடப்பிறப்பு-அது வேறு, இது வேறு.

500-க்கு மேற்பட்ட புலவர்கள் கூடி, 1921-ம் ஆண்டு எடுத்த முடிவு தான் நேற்றையதினம் நாம் கொண்டாடிய நாள், தமிழர் புத்தாண்டு நாள் - இந்த ஆண்டு நாம் இதை ஓரளவு மகிழ்ச்சியோடு தான் கொண்டாடியிருக்கிறோம். ஏனென்றால் தமிழர்கள் வேறு ஒரு பக்கத்திலே சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் நம்மால் அவ்வளவு தான் கொண்டாட முடிந்தது. அந்த தமிழர்களுக்காக நாம் இங்கே அந்த விழாவினை ஓரளவு தான் கொண்டாடினோம்.

அடுத்த ஆண்டிலேயிருந்து அமெரிக்க சுதந்திர தினம் எப்படிக் கொண்டாடப்படுகிறதோ - இங்கிலாந்திலே எப்படி சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறதோ அதைப் போலவே தமிழர்களுடைய ஆண்டு தினம் -முதல்நாளை கொண்டாட வேண்டும்.

கடற்கரையிலே வாண வேடிக்கைகள் - ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரத்திலும் - குளக்கரையிலே, தெருக்களிலே, மைதானங்களிலே வாண வேடிக்கைகள் நடைபெறவேண்டும்.

அப்படி கோலாகலமாக இந்த விழாவை நாம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.


முதல்-அமைச்சர் கலைஞர் கட்டளையினை ஏற்று அம்பத்தூர் தி.மு.க.,வினர் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை கொண்டடிய காட்சிப் புகைபடங்கள்.



























































































©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections