தமிழகச் செய்திகள் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ![]() ![]() ![]() ![]() ![]() ![]() காரைக்கால்:, செப்டம்பர் 26-2009 திருநள்ளாறில் நேற்று நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சனி பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு நேற்று பிற்பகல் 3.27 மணிக்கு இடம் பெயர்ந்தார். அதையொட்டி, இக்கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, நேற்று விடியற்காலை 3 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு உஷகால பூஜை, 9 மணிக்கு காலசந்தி பூஜை, 11.30 மணிக்கு உச்சி கால பூஜை நடந்தது. பிற்பகல் 3.27 மணியளவில் சிறப்பு ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டன. அபிஷேகங்கள், அலங்காரங்கள் முடிந்து, தங்கக் கவசத்தில் சனி பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சனிப்பெயர்ச்சியை யொட்டி, பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், திருநள்ளாறில் குவிந்து நள தீர்த்தத்தில் நீராடி, சனி பகவானை தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் 1,400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே கோவிலின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்காக, புதுச்சேரி அரசு சார்பில் சிறப்பு பஸ்களும், திருச்சி- மயிலாடுதுறை மார்க்கத்தில் சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டது. நள தீர்த்த குளம் மற்றும் கோவில் பகுதியைச் சுற்றி சுழற் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. பக்தர்களுக்காக தனியார் நிறுவனங்கள் சார்பில் குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவில், புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |