"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்"- தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

தமிழகச் செய்திகள்


நக்ஸல்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை: ப.சிதம்பரம் கவலை




நக்ஸல்களின் சவாலால் இந்தியாவுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வேதனையுடன் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளம் சார்பில் நடைபெற்ற 6 நாட்கள் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி கோவை போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பயிற்சி பெற்ற தொண்டர்களுக்கு சான்றிதழை வழங்கி சிதம்பரம் பேசியது:

காங்கிரஸ் கட்சியில் புதிய கொள்கைகள் புகுத்தப்பட்டாலும், அடிப்படை லட்சியம் மாறவில்லை. எழுத்துரிமை, பேச்சுரிமை, மொழி உரிமை, மதசார்பின்மை உள்ளிட்ட அடிப்படை லட்சியங்களில் இருந்து காங்கிரஸ் ஒரு போதும் விலகியது இல்லை. நாட்டில் வறுமையை ஒழிப்பது மிகவும் அவசியம்.

தொழில்துறையை முதலிடத்துக்கு கொண்டுவர வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஒரு காலத்தில் கட்டுப்பாடு இருந்தது. அதேபோல அன்னியச் செலாவணியை கையில் வைத்திருப்பதிலும் கட்டுப்பாடு இருந்தது. ஆனால், காலப்போக்கில் சில கொள்கைகளை காங்கிரஸ் கட்சி மாற்றிக்கொண்டது. இதனால், ஏற்றுமதி, இறக்குமதி, அன்னியச் செலாவணிக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

இதன் விளைவாக ரூ.100 கோடி டாலராக இருந்த அன்னியச் செலாவணி கையிருப்பு, ரூ.28 ஆயிரம் கோடி டாலராக உயர்ந்தது.

6 மாநிலங்களில் இருக்கும் நக்ஸல்களின் சவால்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது. இந்த சவால்களையும் முறியடிப்போம். அச்சுறுத்தல்களுக்கு இடம் கொடுக்காமல், மன உறுதியுடன் செயல்படுவது அவசியம் என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு, சேவாதள மாநில தலைமை அமைப்பாளர் கோவை கே.செல்வராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு தலைவர் ஏ.வி.முகம்மது ஹம்சா உள்பட பலர் பங்கேற்றனர்.

வேலை உரிமை, உணவு உரிமை சட்டங்கள் இயற்றாதது ஏன்?: முன்னதாக சேவாதள தொண்டர்கள் பயிற்சி முகாமில் பேசிய அவர், வேலை உரிமை, உணவு உரிமை சட்டங்கள் பற்றி குறைகூறும் இடதுசாரிகள் மேற்கு வங்கம், கேரளத்தில் அந்த சட்டங்களை இயற்றாதது ஏன்? என கேள்வியெழுப்பினார்.

மேலும் அவர் பேசியது: சோனியா காந்தி தலைமையில் 2004-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் புரட்சிகரமான பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

தகவல் உரிமை சட்டம், வேலை உரிமை சட்டம் உள்ளிட்டவை மிக முக்கியமான சட்டங்கள். விரைவில் உணவு உரிமை சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதுபோன்ற சட்டங்களை பிற கட்சிகளால் ஏன் கொண்டுவர முடியவில்லை?. இது போன்ற புரட்சிகரமான சட்டங்களை கொண்டு வரும் போது ஆலோசனை கூறுவது போல இடதுசாரிகள் குறை கூறுகின்றனர்.

மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் தொடர்ந்து இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கின்றனர். கேரளத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றனர். வேலை உரிமை, உணவு உரிமை சட்டங்களை அம்மாநிலங்களில் இதுவரை ஏன் இயற்றவில்லை?.

இந்திய அரசியல் சாசனத்தின்படி ஏற்கெனவே கல்வி உரிமை இருந்தாலும் இப்போது கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவில் 8.7 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது காங்கிரஸ் ஆட்சியில் தான். அடுத்த 5 ஆண்டு காலங்களில் நாட்டின் வளர்ச்சி முக்கியம். அதே நேரத்தில் அந்த வளர்ச்சியின் பயன் யாருக்குப் போகிறது என்பது அதைவிட முக்கியம் என்றார் சிதம்பரம்.







  • Bookmark and Share

    ©2008

    All Rights Reserved

    News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
    +91-9176186119
    +91-9043023578
    No part of this website may be reproduced or used in any form without permission
    DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
    send your comments and corrections