![]() 2010, ஜனவரி மாதம் இருபதாம் நாள் தமிழகச் செய்திகள் பாமகவை கூட்டு சேர்க்க எந்த கட்சியும் தயாரில்லை தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமகவை சேர்ந்த 5018 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று ஸ்டாலின் பேசியதாவது: பாமக தலைமையில் சில கட்சிகளின் கூட்டுசதியால் பென்னாகரம் தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இப்போது எந்த கட்சியும் பாமகவை கூட்டணியில் சேர்த்து கொள்ள தயாராக இல்லை. எல்லா கட்சிகளுமே பாமகவை புறக்கணிக்கின்றன. அதனால், விரைவில், அனாதையாகி விடுவோம் என்ற அச்சம் பாமகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், இனப்பிரச்னையை எழுப்புகிறார். ‘வன்னியர் சமுதாயம் வாழவேண்டுமானால் எங்களை ஆதரியுங்கள்’ என அவர் பிரசாரம் செய்கிறார். அவர் வன்னியர் சமுதாயத்திற்காக 87ல் அதிமுக ஆட்சியில் 7 நாட்கள் சாலை மறியல் நடத்தினார். அப்போது கலவரம் வெடித்து துப்பாக்கி சூடு நடந்தது. 27 பேர் பலியானார்கள். அந்த குடும்பங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ராமதாஸ் நினைத்தது உண்டா? ஆனால், 89ம் ஆண்டில் திமுக அரசு அமைந்ததும், பாமகவினர் மீது போடப்பட்டிருந்த வழக்குகளை ஒரே கையெழுத்தில் முதல்வர் கருணாநிதி ரத்து செய்தார். துப்பாக்கி சூட்டில் பலியான 27 பேரின் குடும்பத்திற்கும் ரூ.3 லட்சம் நிதி வழங்கினார். அரசு உயர் பதவியில் வன்னியர்கள் இல்லை என ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார். 1969ம் ஆண்டு முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றபோது, முதல் தலைமை செயலாளராக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ராயப்பா என்பவரைத்தான் நியமித்தார். திமுக ஆட்சியில் டிஜிபியாக ராஜ்மோகன் என்ற வன்னியரை நியமித்தார். 2006ல் தமிழ்நாடு தேர்வாணைய தலைவராக காசி விஸ்வநாதனை நியமித்தார். அதேபோல், காவல் துறை கூடுதல் டிஜிபி சேகர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தார் பொற்கோ, நெடுஞ்சாலைத்துறை செயலாளர் சந்தானம், வருவாய்த்துறை செயலாளர் கனகவேல், வேளாண்துறை இயக்குனர் கோசலராமன், அறநிலையத்துறை இயக்குனர் சம்பத், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராஜ், மாநில தேர்தல் அதிகாரி சந்திரசேகரன், கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதி, கட்டிட தொழிலாளர் நலவாரியத்தலைவர் பொன்குமார் ஆகிய அனைவருமே வன்னியர்கள்தான். இதை ராமதாஸ் எண்ணி பார்த்தது உண்டா? இவ்வளவு தெரிந்திருந்தும் இனப்பிரச்னையை உருவாக்குகிறார். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். மின் கட்டணம் உயருமா? தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக இன்று காலை செய்தி வெளிவந்துள்ளது. அது பற்றிய முழு விளக்கத்தை மக்களுக்கு அளிக்க விரும்புகின்றோம். மின் வாரியம் தானாக மின் கட்டணத்தை உயர்த்திவிட முடியாது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்று உள்ளது. அந்த ஆணையத்திடம் மின் வாரியம் கோரிக்கையைத் தயாரித்து சமர்ப்பிக்கும். ஆணையம் அந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து, பொது மக்களிடம் அதைப் பற்றிய கருத்துக்களைக் கேட்கும். அவ்வாறு கருத்துக் கேட்பு நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு, ஆணையம் அதிலே மன நிறைவு பெற்றால், அதன் பின்னர் மின் வாரியத்துக்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கும். அதன் பின்னர்தான் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும். இன்றைய செய்திப் புகைப்படங்கள் ![]() ![]() ![]() ![]() ![]() கற்பு பற்றிய கருத்து நடிகை குஷ்புவுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் கற்பு பற்றி நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது. கற்பு குறித்து, நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஜே.எம்.பாஞ்சால், பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகை குஷ்பு சார்பில் வக்கீல் பிங்கி ஆனந்த் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியா டுடே பத்திரிகையில் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு குஷ்பு, தமிழக பெண்கள் பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அதில், திருமணத்திற்கு முன்பு உடல் உறவு குறித்தும், எய்ட்ஸ் நோய் பற்றியும் கருத்துகளை தெரிவித்து இருந்தார். இந்த தகவல்கள், பின்னர் தமிழ் பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில்தான் வழக்கு தொடரப்பட்டது. பத்திரிகையின் கேள்விக்குத்தான் குஷ்பு பதில் அளித்தாரே தவிர, தானாகவே இந்த கருத்தை அவர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு எதிராக இது போன்ற வழக்கு தொடர்ந்திருப்பது அவரது பேச்சுரிமையை பாதிப்பதாக உள்ளது. மேற்கண்டவாறு பிங்கி ஆனந்த் வாதாடினார். அப்போது, இடை மறித்த நீதிபதிகள், குஷ்பு தெரிவித்த கருத்தின் விவரங்களைக் கேட்டனர். இதனால், தமிழ் பத்திரிகையில் வெளியான தகவலின் ஆங்கில மொழியாக்கத்தை வக்கீல் பிங்கி படித்து காட்டினார். அதைக் கேட்ட நீதிபதிகள், கற்பு பற்றி நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் ஜீரணிக்க முடியாத ஒன்று என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்தியா டுடேயில் கேட்கப்பட்ட கேள்விகளின் விவரங்கள் குறித்து நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அதற்கு குஷ்புவின் வக்கீல், `அந்த விவரங்கள் தற்போது தன்வசம் இல்லை' என்று பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து, இரண்டு வாரத்துக்குள் அந்த விவரங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர். ![]() ![]() ![]() ![]() ![]() டாஸ்மாக் கடைகளுக்கு ஆள் எடுக்க முடிவு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் ஆள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் நிறுவனம், கடந்த 2003ம் ஆண்டில் மதுபான சில்லரை விற்பனை கடைகளை ஏற்று நடத்த தொடங்கியது. அப்போது, இந்த கடைகளுக்கு விற்பனையாளர், மேற்பார்வையாளர், பார் உதவியாளர் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 34 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனமே மதுக்கடைகளை நடத்துவதால், தற்போது அரசுக்கு ஆண்டுக்கு ரூ.13500 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இதனால், கடை ஊழியர்களுக்கு பயணப்படி, 8 மணி நேர வேலை, மருத்துவக் காப்பீடு திட்டம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இது பற்றி, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட பார்களில் வேலை செய்து வந்த உதவியாளர்கள், கடைகளில் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கடைகளில் பணியாற்றிய பட்டதாரி இளைஞர்கள் பலர் அரசு மற்றும் தனியார் வேலை கிடைத்து சென்று விட்டனர். இதனால், காலியிடங்கள் அதிகரித்துள்ளன. மேலும், தினமும் ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் கடைகளில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக காலியிடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. காலியிடங்கள் கணக்கெடுப்பு முடிந்ததும், அரசு உத்தரவு பெற்று வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும். கடத்தல் நாடகம் ஆடிய பெண் பரபரப்பு வாக்குமூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பெண், தற்கொலைக்கு பயந்து போலீசை அலைக்கழித்தது விசாரணையில் தெரியவந்தது. ஒரே மகள் என்பதால் பெற்றோர் என் மீது அதிக அன்பு வைத்திருந்தனர். அதனால் கண்காணாத இடத்தில் போய் தற்கொலை செய்யலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி சென்ட்ரல் ரயில்நிலையம் சென்றேன். அப்போது புறப்பட்ட ரயிலில் ஏறினேன். அது எங்கு செல்கிறது என்பதைக் கூட பார்க்கவில்லை. ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் எனக்கு வீட்டு ஞாபகமும், அழுகையும் வந்தது. அண்ணன் என்னை தேடக் கூடாது என்று நினைத்து கடத்தப்படுவதாக எஸ்எம்எஸ் கொடுத்தேன். குடும்பத்தைவிட்டு பிரிய முடியாததால் தற்கொலை முடிவை கைவிட்டு கடத்தல் நாடகமாடினேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி கதறி அழுதார். இரவு முழுவதும் அலைக்கழித்த சோனாலை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அரவாணிகளுக்கான இந்திய அழகு போட்டி இந்தியன் சூப்பர் குயின்’ என்ற பெயரில் அரவாணிகளுக்கான அகில இந்திய அழகு போட்டியின் முதல் சுற்று, சென்னையில் நாளை நடக்கிறது.‘டுவல்வ் நூன் எண்டர்டெய்ன்மென்ட்’ மற்றும் விகேர் இண்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து, அரவாணிகளுக்கான அழகு போட்டியை ‘இந்தியன் சூப்பர் குயின்’ என்ற பெயரில் நடத்துகிறது. இந்த போட்டியின் முதல் சுற்று சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, ஐதராபாத், போபால், புவனேஸ்வர், அகமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் நடக்கிறது. போட்டியாளரின் படைப்புத்திறன், சிறப்பு திறன்கள், தன்னம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, அரையிறுதி சுற்றுக்கு அனுப்பப்படுவார்கள்.சென்னையில் இந்த போட்டி, கோயம்பேடு ரவுண்டானா அருகில் உள்ள ‘கேட் வே’ ஓட்டலில் நாளை நடக்கிறது. பிப்ரவரி 6ம் தேதி, மும்பையில் அரையிறுதி போட்டி நடக்கிறது. இதில் தேர்வு செய்யப்படும் 12 பேருக்கு அழகு தொழில் துறை நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படும். இவர்களில் மிகச்சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தும் திருநங்கைக்கு, பிப்ரவரி 21ம் தேதி டெல்லியில் நடக்கும் இறுதி போட்டியில் ‘இந்தியன் சூப்பர் இளவரசி’ என்ற பட்டம் அளிக்கப்படும். ‘டுவல்வ் நூன் எண்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி லஷ்மிநாராயணன் திரிபாதி கூறுகையில், ‘‘அரவாணிகளுக்கான அழகு போட்டியில், யார் மிகச்சிறந்தவர் அல்லது மிக அழகானவர் யார்? என்பது முக்கியமில்லை. அதைவிட, எல்லோரையும் போல அவர்களும் மனிதர்களே என்று உலகுக்கு காட்டவே இந்த போட்டியை நடத்துகிறோம்’’ என்றார். மார்ச் 13ல் சோனியா சென்னை வருகிறார் அரசினர் தோட்டத்தில் கட்டப்படும் புதிய சட்டப் பேரவை வளாகத் திறப்புவிழா மார்ச் 13ம் தேதி நடக்கிறது. புதிய கட்டிடத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்கிறார். தமிழ்நாடு சட்டப் பேரவை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. போதிய இடவசதி இல்லாததால் புதிய சட்டப் பேரவை வளாகம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டப் பேரவை வளாகம் மற்றும் தலைமை செயலகம் அமைக்க முதல்வர் கருணாநிதி இடம் தேர்வு செய்தார். ரூ.200 கோடியில் திராவிட கட்டிடக் கலை முறையில் இது வடிவமைக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டப் பேரவை வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2008 ஜூன் 11ம் தேதி நடந்தது. முதல்வர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். புதிய கட்டிடத்தை ஜெர்மன் நிறுவனம் வடிவமைத்தது. 7 தளங்களுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சென்னையின் பெருமையை உயர்த்தும் வகையிலும் சர்வதேச அளவில் பேசப்படும் வகையிலும் இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதம் 13ம் தேதி இந்த வளாகத்தின் திறப்பு விழா நடக்கிறது. இதை பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைக்கிறார். முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் கலந்து கொள்கிறார். இது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு நேற்று முன்தினம் சோனியா அனுப்பிய கடிதத்தில், ‘தமிழக சட்டப் பேரவை வளாக திறப்பு விழாவுக்கு என்னை அழைத்திருந்தீர்கள். உங்கள் அழைப்பை ஏற்று மார்ச் 13ம் தேதி நடக்கும் விழாவில் பிரதமருடன் கலந்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் கொள்ளை ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி குமாரி பானுமதி. இவர், தஞ்சை அடுத்த கணபதி அக்ரகாரத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்று ரூ.1 லட்சம் ரொக்கத்தை வாங்கிக்கொண்டு கரூருக்கு பஸ்சில் புறப்பட்டார். பணத்தை பர்ஸில் வைத்து, அதை ஒரு கூடையில் போட்டு கால் அருகே வைத்திருந்தார். தஞ்சை மேம்பாலம் அருகே வந்தபோது பர்ஸை பார்த்தார். அதில் பணம் இல்லை. அதிர்ச்சியடைந்த பானுமதி, கதறினார். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து ஓடும் பஸ்சில் ரூ.1 லட்சம் அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகிறார். தமிழகம் முழுவதும் 29 ஆயிரம் பேருக்கு ரூ.91 கோடியில் இலவச சிகிச்சை கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 29,355 பேருக்கு, ரூ.91 கோடியே 35 லட்சத்து 8 ஆயிரம் செலவில், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும், 52 சதவீத அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விட்டன. எஞ்சிய அடையாள அட்டைகளையும் உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |