"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்"- தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

இன்றைய(11-12-2009) இந்தியச் செய்திகள் -செய்திப் புகைப்படங்கள்


எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்த
ரெட்டி சகோதரர்களுக்கு புதிய சிக்கல
கனிம சுரங்கம், வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை


கர்நாடக முதல்-மந்திரி எடிïரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ரெட்டி சகோதர மந்திரிகளின் கனிம சுரங்கம் மற்றும் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

கர்நாடக பா.ஜனதா அரசில் "பலம்" வாய்ந்த மந்திரிகளாக இருப்பவர்கள் ரெட்டி சகோதரர்களான ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி. கனிம சுரங்க தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்களுக்கு சொந்தமாக கர்நாடகம் மற்றும் ஆந்திர எல்லைப்பகுதியில் பெல்லாரியில் 3 கனிம சுரங்க நிறுவனங்கள் உள்ளன.

இவர்கள் சட்டவிரோதமாக கனிம சுரங்கங்களை நடத்தி வருவதாகவும், இதன்மூலம் கோடிக்கணக்கில் கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதாகவும், எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வந்தன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது. ஆனாலும், ஆந்திர அரசு கனிம சுரங்க முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று கனிம சுரங்க ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, 11 பேர் அடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் கடந்த சில நாட்களாக பெல்லாரியில் உள்ள கனிம சுரங்க நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே முறைகேடாக நடைபெற்று வரும் சில சுரங்கங்களை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

அதன்படி, இதுவரை 5 கனிம சுரங்கங்களின் லைசென்சை நிறுத்தி வைக்க அதிகாரிகள் குழு நடவடிக்கை எடுத்து உள்ளது. மேலும் 6 சுரங்கங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. ஒரு சுரங்கத்தில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று தெரியவந்தது.

இந்த நிலையில், முக்கியமாக குற்றம் சாட்டப்பட்ட மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் சுரங்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சோதனை தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் ஹவம்பாவி பகுதியில் உள்ள மந்திரி ஜனார்த்தன ரெட்டி நடத்தி வரும் ஓபலாபுரம் கனிம நிறுவன அலுவலகத்துக்கு சென்றனர். அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு ஜனார்த்தன ரெட்டியின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான ஒரு சுரங்க நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அது தற்போது இயங்கவில்லை என்று தெரியவந்தது. அங்கிருந்து சில முக்கிய ஆவணங்கள், சி.டி.க்கள் மற்றும் 2 கம்ப்ïட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதவிர மேலும் 5 கனிம சுரங்கங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக மந்திரிகள் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, மந்திரி ஜனார்த்தன ரெட்டி இந்த சி.பி.ஐ. சோதனை காங்கிரஸ் கட்சியின் சதிச்செயல் என்று குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், `காங்கிரஸ் கட்சியினர் எங்களுக்கு தொல்லை கொடுக்க இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசில் பிரச்சினையை உருவாக்க அவர்கள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர். நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. சி.பி.ஐ. விசாரணைக்கு முழுஒத்துழைப்பு கொடுப்போம்' என்றார்.

தற்போது சி.பி.ஐ. சோதனையில் சிக்கி உள்ள மந்திரிகள் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, ஸ்ரீராமலு ஆகிய 3 பேரும் சமீபத்தில் முதல்-மந்திரி எடிïரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கனிம சுரங்க ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்போவதில்லை என்றும், 3 மந்திரிகளை பதவி நீக்கம் செய்ய போவதில்லை என்றும் திட்டவட்டமாக எடிïரப்பா அறிவித்து உள்ளார்.

கனிம சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்த மத்திய விசாரணை குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது. ரெட்டி சகோதரர்களுக்கு சொந்தமான ஓபலாபுரம் கனிம நிறுவனம் உள்பட சில சுரங்கங்களில் முறைகேடு நடைபெறுவதை அந்த குழு உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் ஓபலாபுரம் கனிம நிறுவனம் உள்பட 6 நிறுவனங்களுக்கு வனத்துறை அனுமதி ரத்து செய்து உள்ளது.


சமச்சீரற்ற நிலைக்கு பருவநிலை மாற்றமே காரணம்


நாட்டின் ஒரு பக்கம் வறட்சியும், இன்னொரு பக்கம் வெள்ளமும் ஏற்படுவதற்கு பருவநிலை மாற்றமே காரணம். பருவநிலை மாற்றத்தால் நிலத்தடி நீரின் தரம் குறைந்து உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என்று பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கை விடுத்தார்.

சர்வதேச தண்ணீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆசிய மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

பருவநிலை தடுமாற்றம் காரணமாக நிலத்தடி நீரிலும், பயிர் விளைச்சலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ஆண்டு கர்நாடகம், ஆந்திராவில் வெள்ளம் ஏற்பட்டது. அதே நேரத்தில் நாடு முழுவதும் 300 மாவட்டங்கள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த சமச்சீரற்ற நிலைக்கு காரணம் பருவநிலை மாற்றமே. மேலும் நிலத்தடி நீரின் தரம் குறைந்து பயிர் விளைச்சலும் குறையும் என்ற கவலை என்ற ஏற்பட்டுள்ளது.

நாம் கையாளும் நீர்க் கொள்கையும், விவசாயமும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும். உற்பத்தியை பெருக்குவதில் நீர்ப்பாசனத் திட்டமும், நீர் பயன்பாட்டுக்கான வியூகமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பருவநிலை மாற்றத்தால் நீர்ப் பிரதேசங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விளைவுகள் ஏற்படும். எனவே நீர்வளத்தை திறமையாக நிர்வகிக்கவும், நீர்நிலைகளின் மட்டத்தை உயர்த்தவும் செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

11வது திட்டக் காலத்தில் வேளாண் வளர்ச்சியை 4 சதவீதம் அதிகரிப்பதற்கு அரசு முன்னுரிமை கொடுத்து செயல்படும். இந்த குறிக்கோளை அடைவதற்கு, விவசாயத்தில் முதலீட்டை அதிகரித்து தண்ணீரை சிக்கனமாகவும், திறமையாகவும் பயன்படுத்தும் வழிகளை கையாள வேண்டியது அவசியமாகும். நடப்புத் திட்டக் காலத்தில் 16 மில்லியன் (1.6கோடி) ஹெக்டேர் நிலம் நீர்ப்பாசன வசதி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 2வது பசுமைப் புரட்சியில் தொழில்நுட்பம் இருக்க வேண்டும். வேளாண்மையிலும், நீர்ப்பாசனத்திலும் தனியார் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உள்ளூர்வாசிகளையும், விவசாயிகளையும் கலந்தாலோசிக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் உணவு உற்பத்தியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முடிவு எடுப்பதிலும் பெண்களை பங்கேற்கச் செய்ய முயற்சிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். மாநாட்டில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவான் குமார் பன்சால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.












தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு
ஆந்திராவில் 105 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
4 எம்.பி.க்களும் பதவி விலகல் கடிதம் கொடுத்தனர்


தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 105 எம்.எல்.ஏ.க்கள் நேற்று ராஜினாமா செய்தனர். மேலும் 4 எம்.பி.க்களும் பதவி விலகல் கடிதம் கொடுத்து உள்ளனர்.

தனி தெலுங்கானா மாநில பிரச்சினை ஆந்திர மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் மேற்கொண்டதால், தெலுங்கானா பகுதியில் அடங்கிய மாவட்டங்களில் பெரும் கலவரம் வெடித்தது.

வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நீடித்ததால் மத்திய அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.

டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் பல சுற்றுகளாக நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில், தனி தெலுங்கானா கோரிக்கையை ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த உள்துறை மந்திரி ப.சிதம்பரம், தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக ஆந்திர மாநில சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

இந்த தகவல் வெளியானதும், தங்கள் போராட்டம் வெற்றி பெற்று விட்டதாக கூறி ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்திலும், தெலுங்கானா பகுதியில் உள்ள பிற நகரங்களிலும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சந்திரசேகர ராவும் தனது போராட்டத்தை கைவிட்டார்.

இதனால், தெலுங்கானா பிரச்சினை முடிவுக்கு வந்ததாக மத்திய அரசு நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, புதிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டு உள்ளது. தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் பெரும் போராட்டம் வெடித்து உள்ளது.

ஆந்திர மாநிலம் ராயலசீமா, கடலோர ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 3 பகுதிகளை கொண்டது ஆகும். தெலுங்கானா பகுதியில்தான் தலைநகர் ஐதராபாத் உள்ளது.

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்தியில் உள்ள ஆளும் காங்கிரஸ் முடிவு செய்ததற்கு, ஆந்திராவில் தெலுங்கானா பகுதியை தவிர கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய மற்ற 2 பகுதிகளில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கட்சி பாகுபாடு இன்றி ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் குதித்தன. மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்து இருக்கிறார்கள். இதனால் தெலுங்கானா தவிர ஆந்திராவின் பிற பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 105 எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் 52 பேர் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். 42 பேர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தையும், 11 பேர் பிரஜா ராஜ்ஜியம் கட்சியையும் சேர்ந்தவர்கள்.

இவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் கிரண்குமார் ரெட்டியிடம் கொடுத்தனர்.

இதற்கிடையே கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த மேலும் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. பதவி விலகிய தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்களில் நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணாவும் ஒருவர் ஆவார்.

294 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபையில் ஆளும் காங்கிரசுக்கு 158 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 51 பேர் தெலுங்கானா பகுதியையும், மீதம் உள்ள 107 பேர் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 34 எம்.எல்.சி.க்களும், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த 120 எம்.எல்.சி.க்களும் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.

பதவி விலகிய தெலுங்கு தேச எம்.எல்.சி. என்.ராஜகுமாரி கூறுகையில், தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவு சோனியா காந்தியின் பிறந்தநாள் பரிசு என்று கூறுகிறார்கள். துண்டு துண்டாக வெட்டி கொடுப்பதற்கு ஒரு மாநிலம் "கேக்"கா? என்று ஆவேசமாக கேட்டார்.

எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மட்டும் இன்றி 4 எம்.பி.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். அவர்களில் 2 பேர் காங்கிரஸ் கட்சியையும், 2 பேர் தெலுங்கு தேசத்தையும் சேர்ந்தவர்கள்.

பதவி விலகிய காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவருடைய பெயர் ராஜகோபால். விஜயவாடா தொகுதி எம்.பி.யான இவர் நேற்று காலை தனது ராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரிடம் கொடுத்து விட்டு உடனடியாக ஐதராபாத் புறப்பட்டார். அப்போது அவர் கூறுகையில், ஆந்திராவை பிரிக்கக்கூடாது என போராடப்போவதாக தெரிவித்தார்.

மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யான அனந்த வெங்கடராம ரெட்டி சோனியா காந்தியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இவர்களைப் போல், கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த மேலும் சில காங்கிரஸ் எம்.பி.க்களும் பதவி விலகுவார்கள் என்று ஆந்திர மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பதவி விலகிய 2 தெலுங்கு தேச எம்.பி.க்களில் ஒருவருடைய பெயர் எம்.வி.மைசூரா ரெட்டி. தெலுங்கு தேசம் கட்சியின் டெல்லி மேல்-சபை உறுப்பினரான இவர் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

மற்றொரு எம்.பி.யான நாராயணராவ் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

ஆந்திராவை இரண்டாக உடைத்து தனி தெலுங்கானா அமைக்கும் பிரச்சினையில் காங்கிரஸ் மேலிடம் தன்னிச்சையாக முடிவு எடுத்து விட்டதாக எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி, ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் நம்பிக்கையை பெறாமல் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் முடிவை மத்திய அரசும், சோனியா காந்தியும் தன்னிச்சையாக எடுத்து விட்டதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐதராபாத்தில் குடியேறி வசிக்கும் மக்களின் கதி என்ன ஆகும் என தெரியவில்லை என்று கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.வெங்கட ராமையா வருத்தத்துடன் கூறினார்.

பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவி நேற்று இரவு ஐதராபாத்தில் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களில் கணிசமான பேர் ராஜினாமா செய்து இருப்பதாகவும், என்றாலும் ராஜினாமாவை வாபஸ் பெறும்படி அவர்களை தான் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

(பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 11 பேர் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.)

தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்து இருப்பதாலும், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ராஜினாமா செய்து இருப்பதாலும், ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.












நாடாளுமன்ற கூட்டம் ஆண்டுக்கு எத்தனை நாள்?


நாடாளுமன்ற கூட்டம் ஆண்டுக்கு குறிப்பிட்ட அமர்வுகள் இருக்க வேண்டும் என்பதை சட்டமாக்க முடியாது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பவன்குமார் பன்சால் கூறியதாவது: 1958ம் ஆண்டில் மக்களவையில் 125 அமர்வுகள் இருந்தன. மாநிலங்களவையில் 91 அமர்வுகள் இருந்தன. இது படிப்படியாக குறைந்துவிட்டது. 2008ம் ஆண்டில் இரு அவைகளிலும் 46 அமர்வுகளே இருந்தன.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 அமர்வுகளாவது இருக்க வேண்டும் என்று சில உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், இதை கட்டாயமாக்க சட்டமாக்க முடியாது. கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் புதிய மசோதாக்கள் குறித்தும் அலுவல் ஆய்வுக் குழுவும் நாடாளுமன்ற நிலைக்குழுவும் அனுமதித்த அம்சங்கள் குறித்து மட்டுமே அவையில் விவாதிக்க முடியும். விவாதங்களின் முக்கியத்துவம் கருதி தேவை ஏற்பட்டால் அமர்வுகளின் எண்ணிக்கையை அலுவல் ஆய்வுக் குழு அதிகரிக்கும். இவ்வாறு பவன்குமார் பன்சால் கூறினார்.


குஜராத்திலிருந்து கேரளாவுக்கு வருகிறது மணல்


கேரளாவில் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மணல், இப்போது குஜராத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.கேரள மாநிலத்தின் கட்டுமானத் தொழில், பெரும்பான்மையும் தமிழகத்தை நம்பியே நடத்தப்பட்டு வந்தது. அத்தொழிலில் பயனாகும் மணலில் 50 சதவீதம் தமிழகத்திலிருந்து செல்வதுதான். இந்த ஆண்டு ஜூன் வரை இதுதான் நடந்தது.

அதற்கடுத்து, தமிழகத்தில் சட்டவிரோதமாக நடந்த மணல் குவாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. இங்கிருந்து சட்டவிரோதமாக அள்ளப்படும் மணல், கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரத்துக்குக் கடத்தப்படும். இப்போது அதற்கும் தமிழக அரசு ஆப்பு வைத்து விட்டது.

தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திராவிலும் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் மணல் அள்ளக் கூடாது என்று கோர்ட் உத்தரவிட் டுள்ளது. இதனால் கேரளாவில் கட்டுமானத் தொழிலில் பெருத்த பாதிப்பு ஏற்பட்டது.இதை சரி செய்வதற்காக இப் போது குஜராத்திலிருந்து பெருமளவில் மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போல குஜராத் அதிகக் கெடுபிடி பண்ணாதது இதற்கு ஒரு காரணம்.

சந்தை விலையை விட பாதி விலைக்கு குஜராத் மணல் விற்கப் படுகிறது.கடந்த வாரம் முதல் முறையாக ஐயாயிரத்து 500 டன் மணல் கொச்சியில் வந்து இறங்கியிருக்கிறது. கேரள மணல் டீலர்கள் இது குறித்துக் கூறுகையில்,"எங்களுக்கு வேறு வழியில்லை. இப்போது நிலவரம் மிகவும் கவலை தருகிறது. மணல் தட்டுப்பாட்டால் நாங்கள் வேலைகளை நிறுத்தி விட்டோம்.

அரசு ஒப்பந்ததாரர்கள் கெடுபிடி மற்றும் தட்டுப்பாடு இவற்றால் மணல் விலை தாறு மாறாகி விட்டது.அண்டை மாநிலங்களிலிருந்து மணல் எடுக்க வழியில்லாததால், குஜராத்திலிருந்து இறக்குமதி செய்கிறோம். அரசும் அதற்கு வரவேற்பளித்துள்ளது. கட்டுமானத் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்கம் சரியாகிவிடும் என்று நம்புகிறோம்' என்று தெரிவித்தனர்.


ஜெய்ப்பூர் தீ விபத்தை விசாரிக்க கமிட்டி


மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியதாவது:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. நாசவேலை காரணமா என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரிக்கிறது. அதேநேரம், விபத்துக்கு கவனக்குறைவும் காரணமாக அமைந்துள்ளது. தீ ஏற்பட காரணம் மற்றும் கவனக்குறைவு குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்கள் குறித்தும் இக்கமிட்டி ஆராயும்.

இவ்வாறு ஜிதின் பிரசாதா கூறினார்.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections