![]() 2009,டிசம்பர் முதல் நாள் உலகச் செய்திப் புகைப்படங்கள் ஆஸ்திரேலியாவில் கடந்த ஜுன் மாதம் முதல் 30 இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது மேலும் ஒருவர் தாக்கப்பட்டு உள்ளார். 23 வயதான அந்த மாணவர் மெல்போர்ன் நகரில் படித்துக்கொண்டே பகுதி வேலையாக கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது காதலியை விருந்துக்கு அழைக்க, புருன்ஸ்விக் மேற்கு தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு போனார். காரை நிறுத்தி விட்டு, காதலியின் வீட்டு அழைப்பு மணியை அடித்தார். ஆனால் காதலி வருவதற்குள் அடையாளம் தெரியா ஒருவர் அங்கு வந்து அந்த மாணவரை நெஞ்சில் கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டார். அவர் போட்ட அலறலைக் கேட்டு ஓடி வந்த அவரது காதலி இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அந்த மாணவர் இன்வெறி காரணமாக தாக்கப்படவில்லை என்றும், அவரிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடிக்க தாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். புகை பிடித்தால் கவர்ச்சி போகும் : ஆய்வில் புது யோசனை சிகரெட் பாக்கெட் மீது, புகைப்பழக்கத்தால், உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விளைவுகள் குறித்த தகவல் மற்றும் படத்தை அச்சடித்திருப்பதால், புகைப்பழக்கம் உடையவர்களின் எண்ணிக்கை குறையவில்லை; மாறாக அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.அமெரிக்காவை சேர்ந்த மனநல நிபுணர்கள், ஆய்வு ஒன்றை நடத்தினர்.
இதில், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில், சிகரெட் பாக்கெட்கள் மீது, "புகைப்பழக்கம் உங்களை கவர்ச்சியற்றவராக மாற்றும்' அல்லது "புகைப்பழக்கம் உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும்' போன்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த வாசகங்களால், புகைப்பழக்கம் உடையவர்களின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதாக கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வு, 17 வயது முதல் 41 வயது வரையிலான 30 உளவியல் மாணவர்களிடம் நடத்தப்பட்டது. இதில், அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த ஆய்வின் முடிவு, "எக்ஸ்பிரிமென்டல் சோஷியல் சைக்காலஜி' என்ற இதழில் வெளியானது.இதுகுறித்து வெளியிடப்பட்ட ஆய்வு தகவல்:புகைப்பழக்கம் உடையவர்கள், குறிப்பாக இளைஞர்கள், புகைப்பிடிப்பதால் மற்றவர்களின் கவனத்தை கவர முடியும் என்றும், இந்த பழக்கத்தால், சமுதாயத்தில் தங்கள் மதிப்பு அதிகரிக்கும் என்றே கருதுகின்றனர். இதனால் புகைப் பழக்கத்தை மேற்கொள்கின்றனர். சிகரெட் பாக்கெட் மீது, இந்த பழக்கத்தால் ஏற்படும் இறப்பு தொடர்பான தகவல்களை அச்சிடுவது, அல்லது மண்டையோடு மட்டும் போட்டால், அப்பழக்கம் உடையவர்கள் மத்தியில் அந்த எச்சரிக்கை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.சிகரெட் பாக்கெட் மீது இடம்பெறும், இறப்புடன் சாராத எச்சரிக்கை வாசகங்ளால், புகைப்பிடிக்கும் பழக்கம் கணிசமாக குறைகிறது. புகை பிடித்தால், கவர்ச்சியை இழப்பீர்கள் என்பது போன்ற சுயகவுரவத்தைப் பாதிக்கும் வாசகங்கள் இருந்தால், அது கவனத்தை அதிகம் கவரும், புகை பிடிப்பது தடுக்கப்படும்.இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இன்றைய செய்திப் புகைப்படங்கள் பெனாசிர் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானில் பெனாசிர் பிரதமராக இருந்தபோது அவர் கணவரான சர்தாரி லஞ்சம் வாங்கி குவித்தார் என்றும், அதன் மூலம் ரூ.7500 கோடிக்கு சொத்து சேர்த்தார் என்று லஞ்ச ஒழிப்பு அமைப்பு புகார் கூறி உள்ளது. பெனாசிர் பிரதமராக இருந்தபோது, ஊழலில் ஈடுபட்டதாக அடுத்து ஆட்சிக்கு வந்த நவாஸ்ஷெரீப் புகார் கூறினார். பெனாசிர் மற்றும் அவரது கணவர் சர்தாரி ஆகியோர் மீது ஊழல் வழக்கு தொடர்ந்தார். முஷரப் ஆட்சிக்காலத்தில் அவருக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது அதில் இருந்து தப்பிப்பதற்காக பெனாசிருக்கும், அவரது கணவர் சர்தாரிக்கும் பொதுமன்னிப்பு வழங்கினார். இதற்காக அவர் தேசிய சமரச அவசர சட்டம் என்ற பெயரில் ஒரு அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார். அவசர சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டால் தான் அது சட்டமாகும். அதற்குள் முஷரப் பதவி விலக வேண்டியதாகி விட்டது. புதிய அரசாங்கத்தில் சர்தாரியே ஜனாதிபதியாகி விட்டார். பாராளுமன்றத்தில் இதற்கு அனுமதி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதை தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனால் அவசர சட்டம் காலாவதியானது. இதைத்தொடர்ந்து இந்த அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இந்த அவசர சட்டம் மூலம் சர்தாரி உள்ளிட்ட 8 ஆயிரம் பேர் பயன் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. சர்தாரி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகளின் விவரங்களும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டன. லஞ்சஒழிப்பு அமைப்பு, பெனாசிர் பிரதமராக இருந்தபோது, சர்தாரி லஞ்சம் வாங்கியதன் மூலம் ரூ.7,500 கோடிக்கு சொத்து குவித்தது ஆவணங்கள் மூலம் தெரியவந்ததாக தெரிவித்தது. இந்த அவசர சட்டத்தால் சர்தாரிக்கு நெருக்கமான உள்துறை மந்திரி ரகிமான் மாலிக், ராணுவ மந்திரி சவுத்ரி அகமது முக்தார் ஆகியோர் பயன் அடைந்து இருப்பதும் தெரியவந்தது. அரசாங்க வக்கீல் ஷா கவார் நிருபர்களிடம் கூறுகையில், சர்தாரிக்கு அரசியல் சட்ட பாதுகாப்பு இருக்கிறது. இந்த வழக்கு காரணமாக அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார். நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்ற பெண் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், கர்ப்பிணிப் பெண் குழந்தை பெற்ற சம்பவம் அமெரிக்காவில் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. "சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்' விமானத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். விமானம், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் மீது ஒன்பதாயிரத்து 100 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, அந்தப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. எதேச்சையாக, அந்த விமானத்தில் இருந்த இரண்டு டாக்டர்கள், நிலைமையைப் புரிந்து கொண்டு காரியத்தில் இறங்கினர். விமானப் பணியாளர்களின் உதவியுடன், அந்தப் பெண் விமானத்தின் பின்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டாள். மருத்துவர்களின் உதவியுடன் அங்கேயே குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்தவுடன், விமானப் பயணிகள் அனைவரும் கைதட்டி குழந்தையை வரவேற்று மகிழ்ந்தனர். விமானம் டென்வாரில் இறங்கிய பிறகு, தாயும் சேயும் ஏர்போர்ட்டிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுபோன்று பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் குழந்தை பிறப்பது என்பது மிக அரிது என்கின்றனர். ஈரான் நாட்டு அணு விஞ்ஞானியை அமெரிக்கா கடத்தியதாக புகார் ஈரான் நாட்டு விஞ்ஞானி ஷக்ராம் அமிரி சவுதி அரேபியாவில் காணாமல் போய்விட்டார். இந்த ஆண்டு தொடக்கம் முதல் அவரை காணவில்லை. அவரை அமெரிக்கா தான் கடத்தி வைத்து இருக்கிறது என்று ஈரான் வெளிநாட்டு மந்திரி மனோச்சர் மொட்டகி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், எங்களுக்கு கிடைத்த தகவல்கள் இந்த கடத்தலில் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்துகின்றன. எனவே அமெரிக்கா அரசாங்கம் அவரை விடுதலை செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார். நோபல் பரிசு பெற்றவர்களுக்கு இன்று பிரம்மாண்ட விருந்து:விதவித உணவு குறித்து ரகசியம் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு, சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இன்று பிரம்மாண்ட விருந்து அளிக்கப்படுகிறது. மருத்துவம், விஞ்ஞானம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்போருக்கு, ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. ஆல்பிரெட் நோபல் உருவாக்கிய இந்த அமைதி பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாகக் கருதப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், வேதியியல் துறையில் அரிய கண்டுபிடிப்பு சாதனையை செய்ததற்காக அவருக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. இவருடன் சேர்த்து மொத்தம் 13 பேருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப் படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், நோபல் பரிசு பெற்றவர்களுக்கு இன்று பிரம்மாண்ட விருந்து அளிக்கப்படுகிறது.இந்த விருந்தை தயாரிக்கும் பணியில் 40 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த உணவுகளை 200 பேர் பரிமாற உள்ளனர்.சுற்றுச்சூழலுக்கு பாடுபட்ட அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆர்.கே.பச்சோரி குறிப்பிடுகையில், "கடந்த ஆண்டு ஆஸ்லோ நகரில் நடந்த விருந்து, என் வாழ்வில் மறக்க முடியாதது' என்றார். இன்றைய விருந்தில் பரிமாறப்பட உள்ள உணவு வகைகள் கடந்த செப்டம்பர் மாதமே இறுதி செய்யப்பட்டு விட்டது. எனினும் என்னென்ன உணவு வகைகள் பரிமாறப்படும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விருந்தினருக்கும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவுகள் பரிமாறப்படும். கடந்த ஆண்டு ஒவ்வொருவருக்கும் பரிமாற ஒன்பது நிமிடங்கள் ஆனது' என, சமையல் கலைஞர்களில் ஒருவரான மார்க் பீனிக்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார். இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக நோபல் பரிசு விருந்துக்காக சமைத்து வருகிறார். ஏராளமான அசைவ வகைகள் தான் இந்த விருந்தை ஆக்கிரமிக்க உள்ளன. மிகப்பெரிய 60 மேஜைகளில் ஏழாயிரம் பீங்கான் பாத்திரங்களும், ஐந்தாயிரம் கண்ணாடி பாத்திரங்களும், 10 ஆயிரம் கரண்டிகளும் இடம் பெறுகின்றன.கடந்த 1901ம் ஆண்டில் நோபல் பரிசு கொடுக்க ஆரம்பித்த காலத்தில் ஆறு வேளை விருந்தளிக்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக இந்த விருந்து மூன்று வேளையாகக் குறைக்கப்பட்டு விட்டது. விருந்து நடைபெறும் இடத்தில் அலங்காரத்துக்காக 23 ஆயிரம் மலர்கள் பயன்படுத்தப் படுகின்றன.சுவீடன் நாட்டு அரச குடும்பத்தினரும், பிரதமரும், நோபல் பரிசு வழங்குவோர் குடும்பத்தினரும் இந்த விருந்தில் பங்கேற்கின்றனர். |