"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்"- தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்


2009,டிசம்பர் மாதம் பத்தாம் நாள் செய்திப் புகைப்படங்கள் - இந்தியச் செய்திகள்


முஸ்லிம்கள் பிரதமர் ஆவது பற்றிய கருத்து: ராகுல்காந்திக்கு பால்தாக்கரே கண்டனம்


முஸ்லிம்கள் பிரதமர் பதவிக்கு வருவது தொடர்பாக ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு பால்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்தார். ராகுல்காந்தி ஒன்றும் இந்த நாட்டின் முதலாளி இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த அங்குள்ள அலிகார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது சுதந்திரம் அடைந்து இவ்வளவு காலமாகி விட்டது ஒரு முஸ்லிம் பிரதமர் ஆவதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? என்று ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல்காந்தி பதிலளிக்கையில், பிரதமர் பதவியை அடைவதற்கு மதம் ஒரு பொருட்டே அல்ல. திறமைதான் முக்கியம். திறமை இருந்தால் முஸ்லிம்கள் பிரதமர் ஆகலாம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ராகுல்காந்தியின் கருத்து பற்றி சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே, தனது கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாமனாவில் தலையங்கம் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நாட்டின் உயர்ந்த பதவியான பிரதமர் பதவிக்கு முஸ்லிம் சமுதாயம் தகுதி பெற வேண்டுமானால், முதலில் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ராகுல்காந்தி ஒன்றும் இந்த நாட்டின் முதலாளி இல்லை. முஸ்லிம்கள் பொது சிவில் சட்டம், குடும்ப கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். வந்தே மாதரம் பாடுவதை அவர்களுக்கு கட்டாயம் என்று ஆக்க வேண்டும். இவற்றையெல்லாம் ராகுல்காந்தி உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே ஒரு முஸ்லிம் பிரதமர் ஆக முடியும்.

முஸ்லிம்களை தாஜா செய்யும் போக்கு தொடர்ந்தால், இந்தியா மதச்சார்பற்ற நாடாக நீடிக்காது. மாறாக அறிவிக்கப்படாத ஒரு முஸ்லிம் நாடாகவே இருக்கும்.

இவ்வாறு பால்தாக்கரே கூறியுள்ளார்.


இருட்டில் தரை இறக்கிய விமானிகளிடம் விசாரணை


ராகுல் பயணம் செய்த ஹெலிகாப்டரை இருட்டிய பிறகு தரை இறக்கிய விமானிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் அமேதி தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தில் கடந்த திங்களன்று சுற்றுப் பயணம் செய்தார். அப்போது, மாலையில் சற்று இருட்டிய நேரத்தில் விமானிகளை வலியுறுத்தி, சித்தாப்பூர் என்ற இடத்தில் ஹெ,லிகாப்டரை ராகுல் தரை இறக்கியதாகவும், அது ஆபத்தானது என்றும் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவி ரீட்டா பகுகுணா குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், ராகுல் பயணம் செய்த ஹெலிகாப்டரை ஓட்டிய 2 விமானிகளிடமும் விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. அதற்கு வசதியாக 2 விமானிகளும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், இந்த சம்பவம் பற்றி சித்தாப்பூர் மாவட்ட கலெக்டரிடமும் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது.


இன்றைய செய்திப் புகைப்படங்கள்












சோனியா காந்தியின் 64-வது பிறந்தநாள் விழா டெல்லியில், எளிமையாக கொண்டாடினார்


காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நேற்று தனது 64-வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்.

காங்கிரஸ் கட்சி தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்திக்கு நேற்று 64-வது வயது பிறந்தது. இதையொட்டி தனது பிறந்தநாளை அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் எளிமையாக கொண்டாடினார்.v

கடந்த வருடம் மும்பையில் நடந்த தாக்குதலில் ஏராளமானவர்கள் உயிர் இழந்ததற்கு அனுதாபம் தெரிவித்து அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. இந்த ஆண்டு பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்ட தொண்டர்களை, எளிமையாக கொண்டாடுங்கள் என்று சோனியா கேட்டுக்கொண்டார்.

சோனியா பிறந்தநாளையொட்டி அதிகாலை முதலே அவரது வீட்டில் தலைவர்களும், தொண்டர்களும் குவிந்தனர். மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் முதலில் வந்து சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தி.மு.க. மத்திய மந்திரிகள் ஆ.ராசா, தயாநிதி மாறன், காந்தி செல்வன், எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், அ.அ.ஜின்னா, டி.வேணுகோபால், வசந்தி ஸ்டேன்லி, தாமரைச் செல்வன், அப்துல் ரகுமான் ஆகியோர் சோனியா வீட்டுக்கு சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னாள் மத்திய மந்திரி சு.திருநாவுக்கரசரும், சோனியா காந்தியின் வீட்டுக்கு சென்று பொன்னாடை போர்த்தி, ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பல மாநில காங்கிரஸ் முதல்-மந்திரிகளும், மந்திரிகளும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், பிரமுகர்களும், தொண்டர்களும் நீண்ட கிï வரிசையில் காத்திருந்து சோனியாவுக்கு பூச்செண்டு கொடுத்தும், பொனாடைகள் போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர்.

தொண்டர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக சோனியா காந்தியின் வீட்டு சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் போலீசார் அந்த சாலையை மூடி, வாகனங்களை வேறு வழியாக திருப்பி விட்டனர். வாகனங்களில் வாழ்த்து தெரிவிக்க வந்தவர்கள், நீண்ட தூரத்துக்கு முன்னாலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்தே சோனியா காந்தியின் வீட்டுக்கு வந்தனர்.

சோனியா காந்தியின் வீட்டு முன்பு கூடியிருந்த தொண்டர்களும், மகளிர் காங்கிரசாரும் மேள-தாளம் இசைத்து, ஆடிப்பாடினார்கள். பட்டாசுகள் கொளுத்தி, இனிப்புகள் வழங்கினர். முன்னதாக பலர் சோனியா காந்தியின் வீட்டுக்கு ஊர்வலமாக வந்தனர்.

"இந்தியா எங்களது தாய் நாடு என்பதில் பெருமை கொள்கிறோம், அன்னை சோனியா எங்களது வழிகாட்டி'' என்ற வாசகங்கள் பொரிக்கப்பட்ட டி- சர்ட்டுகளை தொண்டர்கள் அணிந்து இருந்தனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரின் சுவரொட்டிகளையும் பல தொண்டர்கள் அட்டைகளில் ஒட்டி எடுத்து வந்திருந்தனர்.

தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த கிராமியக் கலைஞர்கள் சோனியா வீட்டு முன்பு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் தொண்டர்கள் சோனியாவின் பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடினார்கள். பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.

பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி, சோனியாவுக்கு பிரசாதங்களை கொண்டு சென்று கொடுத்தனர்.












மழை நிவாரணத்துக்கு மத்திய அரசு ரூ.95 கோடி நிதி


தமிழக மழை நிவாரணத்துக்கு இந்த மாதம் 2 வது கட்டமாக ரூ.95 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாநிலங்களவையில் உள்துறை இணை அ¬மைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். இதுபற்றி மாநிலங்களையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பதில் அளித்தார். அப்போது அவர்,‘ தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக மத்திய அரசு சார்பில் ஏற்கனவே ரூ.95.3 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2வது கட்டமாக இந்த மாதம் மேலும் ரூ 95.3 கோடி வழங்கப்படும்’என்றார்.


எம்.பி. தொகுதிக்கு ரூ.25 ஆயிரம்; எம்.எல்.ஏ. தொகுதிக்கு ரூ.10 ஆயிரம்
தேர்தலில் போட்டியிட "டெபாசிட்'' தொகை உயர்வு
பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது


பாராளுமன்றத்துக்கு போட்டியிட ரூ.25 ஆயிரமும், சட்டமன்றத்துக்கு போட்டியிட ரூ.10 ஆயிரமும் டெபாசிட் செலுத்த வேண்டும். இதற்கு வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது.

தற்போது எம்.பி. தொகுதியில் போட்டியிட டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். சட்டமன்றத்துக்கு போட்டியிட ரூ.5 ஆயிரம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும். தேர்தல்களில் போட்டியிடுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், தேவையற்ற முறையில் பலர் போட்டியிடுவதை தவிர்க்கவும், டெபாசிட் தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து இதற்கு வகை செய்யும் மசோதா, டெல்லி மேல்-சபையில் ஏற்கனவே நிறைவேறியது. இந்த மசோதா நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவை, சட்டத்துறை மந்திரி வீரப்ப மொய்லி தாக்கல் செய்து பேசியதாவது:-

"தேவையற்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதை தவிர்க்க இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காகவே டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டு இருக்கிறது. வரும் ஜுன்-ஜுலை மாதங்களில் இருந்து இந்த சட்டம் அமல் படுத்தப்படும். கள்ள ஓட்டு போடுவதை தடுக்க ஓட்டு போடுவோரின் கை ரேகையை பதிவு செய்யலாமா? என்பது பரிசீலனையில் இருக்கிறது.

நாடு முழுவதும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் பணி விரைவாக முடிக்கப்படும். வாக்காளர் ஒருவர், விலாசம் மாறி குடியிருந்தாலும், அவரது போட்டோ ஒட்டிய அடையாள அட்டை செல்லுபடியாகும். ஆனால், மக்கள் ஓட்டு போடுவதை கட்டாயமாக்க முடியாது.

ஒரு மாநிலத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடக்கும்போது, கடைசி கட்ட தேர்தல் முடிந்த பின்தான், கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிட முடியும். இதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. ஊழல் புரிந்தோர் வேட்பாளராக மனு தாக்கல் செய்வதை தடை செய்ய, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கடவுளின் பெயரில், கட்சியை வைத்துக்கொள்ளலாமா? என்று சில உறுப்பினர்கள் கேட்கிறார்கள். இதுபற்றி ஆலோசிக்கப்படும். பொதுவாக மதத்தின் பெயரிலும், இனத்தின் பெயரிலும் கட்சிகளை உருவாக்க கூடாது என்பது பொதுவான கருத்து.

இந்தியாவில் 80 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஜனநாயக முறையில், இந்தியா மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக விளங்குகிறது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு, இந்தியாவில் ஓட்டளிக்கும் உரிமை வழங்குவது பற்றிய மசோதா தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு வீரப்ப மொய்லி பேசினார்.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections