![]() COMMUNICATION(S) POINT as your Homepage
"அண்மை செய்திகள்,30/07/2010,காலை,IST- 09.30 மணி,நிலவரப்படி, பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்வதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார். பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா, டெல்லி மேல்-சபையில் நிறைவேறி விட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல், நிலுவையில் இருந்து வரும் இந்த மசோதாவை பாராளுமன்றத்திலும் நிறைவேற்றி விட்டால், விரைவில் சட்டமாகி விடும். எனவே, தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரிலேயே பாராளுமன்றத்தில் அந்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் கூட்டமைப்பு சார்பாக, டெல்லியில் நேற்று பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கிச் சென்ற அந்த பேரணியில், நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். வண்ண வண்ணக் குடைகளை ஏந்திய வண்ணம் சென்றனர். பாராளுமன்றத் தெரு காவல் நிலையம் அருகே பேரணி சென்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு, பெண்கள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி., மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா கரத், திரைப்பட நடிகைகள் ஷர்மிளா தாகூர், ஷபானா ஆஸ்மி, விமல் தொராத், ஆனி ராஜா, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் ஜாவித் அக்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஜெயந்தி நடராஜன் எம்.பி. பேசும்போது கூறியதாவது:- பெண்கள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடந்த இந்த பேரணியில் பங்கேற்றவர்களுடன் நேரடியாக எனது கருத்தை தெரிவிக்க விரும்புவதால் இந்தியில் பேசுகிறேன். தமிழகத்தைச் சேர்ந்த எனது இந்தி பேச்சில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கடந்த 12 ஆண்டுகளாக போராடி வருகிறோம். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்வதில் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் உறுதியாக உள்ளனர். அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே, டெல்லி மேல்-சபையில் இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது, அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. தற்போது, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை சில அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. எனினும், நடப்பு மழைக்கால கூட்டத் தொடரின்போது, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அடுத்த பாராளுமன்றத்துக்கு 33 சதவீதம் பெண் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் சோனியா உறுதியாக இருக்கிறார் என்பதை காங்கிரஸ் கட்சி சார்பாக மீண்டும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இட ஒதுக்கீடு வழங்குவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்கிறேன். இவ்வாறு ஜெயந்தி நடராஜன் எம்.பி. பேசினார். ![]() மாணவர்களிடம் இன்ஜினியரிங் கல்லூரிகள் கெடுபிடி: முழு கட்டணத்தையும் உடனே கட்ட நிர்ப்பந்தம் பொறியியல் படிப்பில் சேரும் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், கல்லூரியில் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை; அக்கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப் பட்டிருந்தாலும், பல கல்லூரிகள் மாணவர்களிடம் கல்விக்கட்டணத்தையும் செலுத்துமாறு வற்புறுத்தி வருகின்றன. இந்த ஆண்டு முதல் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பில் சேரமாணவர்கள் அதிக ஆர்வம் செலுத்தினர். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்காக இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து 133 பேர் விண்ணப்பங்களை பெற்றனர். அதில், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 406 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். இவர்களில் 49 ஆயிரத்து 143 பேர் ஆண்கள், 28 ஆயிரத்து 943 பேர் பெண்கள் என, 78 ஆயிரத்து 86 பேர் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் பொறியியல் கவுன்சிலிங்கில், இதுவரை 75 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதில் 42 ஆயிரம் மாணவர்கள் (56 சதவீதம்) குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டதால், கவுன்சிலிங் கிற்கு வராதவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது. தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் கணேசன், கடந்த ஏப்ரல் 16ம் தேதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மட்டும் அரசே ஏற்கும். அரசு நடத்தும் ஒற்றைச்சாளர கவுன்சிலிங்கில் கலந்துகொண்டு அரசு, அரசு உதவிபெறும், பல்கலைக் கழக கல்லூரிகள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி முதல்வர்கள், பல்கலைக் கழக பதிவாளர்கள் மற்றும் தனியார் தொழிற்கல்வி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அம்மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அக்கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்த துறையின் கீழ்வருகிறதோ, அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் இவ்வாறு அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில் சேர்க்கை ஆணை கிடைத்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் கல்லூரிக்கு சென்றால், அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. பல கல்லூரிகள் மாணவர்களிடம் கல்விக்கட்டணத்தையும் கட்ட வேண்டும் என கூறுகின்றன. தற்போது பணத்தை கட்டி விடுமாறும், அரசாங்கத்திடமிருந்து பணம் கிடைத்த பிறகு, அப்பணத்தை மாணவர்களுக்கு திருப்பித்தருவதாகவும் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள் அண்ணா பல்கலையில் 5,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்கள் கல்லூரியில் கட்டணத்தை செலுத்தும்போது, 5,000 ரூபாயை கழித்துக் கொண்டு மீதமுள்ள தொகையை செலுத்தினால் போதும். ஆனால், பல கல்லூரிகள் அண்ணா பல்கலையில் கட்டிய 5,000 ரூபாயையும் செலுத்த வேண்டும் என வற்புறுத்துகின்றன. ![]() விலைவாசி பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி எதிரொலி விலைவாசி பிரச்சினையால் பாராளுமன்றம் நேற்று 3-வது நாளாக முடக்கப்பட்டது. இதையடுத்து பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதற்கு சபாநாயகர் மீராகுமார் பதில் அளித்தார். நாடு முழுவதும் சர்க்கரை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விஷம் போல ஏறி வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் கியாஸ் போன்றவற்றின் விலையை கடந்த மாதம் மத்திய அரசு உயர்த்தியது. இதனால், உணவுப் பொருட்களின் பணவீக்கம் 16 சதவீதத்தை தாண்டி விட்டது. ஒட்டு மொத்த பணவீக்கமும் இரட்டை இலக்கத்தில் உள்ளது. எனவே, விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த பிரச்சினையைப் பொறுத்தவரை, பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், இடதுசாரி, சமாஜ்வாடி, பிஜூ ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம், தெலுங்கு தேசம், அ.தி.மு.க. லோக் ஜனசக்தி என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் பகுஜன் சமாஜ் கட்சியும் கடுமையாக எதிர்க்கிறது. எனவே, விலைவாசி உயர்வு பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தும் விதத்தில் ஒத்திவைப்பு தீர்மானங்களை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. `அரசமைப்பு கடமைகளில் இருந்து அரசு விலகினால் மட்டுமே இது போன்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியும்' என கூறி அவற்றை சபாநாயகர் மீரா குமார் நேற்று முன்தினம் நிராகரித்து விட்டார். மேலும், விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து வேறு வகைகளில் விவாதம் நடத்தலாம் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பாராளுமன்ற விதி எண்.184-ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஏனெனில், 184-வது விதியின் கீழ் விவாதம் நடைபெற்றால் விவாதத்தின் இறுதியில் ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ஓட்டெடுப்பு நடத்தினால் மத்திய அரசுக்கு கடுமையான சிக்கல் ஏற்படும். ஏனெனில், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே விலைவாசி உயர்வை எதிர்க்கின்றன. எனவே, ஓட்டெடுப்பு நடைபெறுவதை தடுக்க தீவிர முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. இதற்காகவே, தனது கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மூலம், தனியாக நோட்டீசு அளித்துள்ளது. அந்த நோட்டீசில், `பாராளுமன்ற விதி எண்.193-ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 193-வது விதிப்படி விவாதம் நடந்தால் ஓட்டெடுப்பு தேவையில்லை. ஆளும் கூட்டணியும், எதிர்க் கட்சிகளும் பாராளுமன்றத்தில் வெறுமனே விவாதம் நடத்தினால் மட்டும் போதும். எனவே, இதுபோன்ற விவாதத்தை நடத்துமாறு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன் குமார் பன்சால் வலியுறுத்தி இருக்கிறார். அதனால், எதிர்க்கட்சிகள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளன. தொடர் அமளி காரணமாக, மூன்றாவது நாளாக நேற்றும் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த அனுமதித்தால் மட்டுமே பாராளுமன்றத்தை செயல்பட விடுவோம் என எதிர்க்கட்சி தலைவர்கள் எச்சரித்துள்ளனர். மத்திய அரசுக்கும், ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளுக்கும் இடையே எழுந்துள்ள இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், சபாநாயகர் மீரா குமார் நேற்று மாலையில் பேட்டி அளித்தார். அப்போது, பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்து மீரா குமார் கூறியதாவது:- பாராளுமன்ற அலுவல்களை சுமூகமாக நடத்துவதற்கான ஒரு வழியை கண்டு பிடிக்க முயற்சித்து வருகிறோம். விலைவாசி உயர்வு என்பது மிகவும் கடுமையான பிரச்சினை. இது தொடர்பாக, ஏதாவது செய்யப்படுமா என மக்களிடமும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒவ்வொரு கட்சிகளையும் ஒருங்கிணைத்து செல்வதற்கான வழியை எவ்வாறு கண்டு பிடிப்பது என கவனித்து வருகிறோம். விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து விதி எண்.184-ன் கீழ் விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து எனக்கு நோட்டீசுகள் வந்துள்ளன. அந்த நோட்டீசுகளை எனது மனதில் நிறுத்தி வைத்திருக்கிறேன். மூன்று நாட்களாக பாராளுமன்றத்தின் அலுவல்கள் முடக்கப்பட்டுள்ளதால் மழைக்கால கூட்டத் தொடரை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை. இவ்வாறு மீரா குமார் தெரிவித்தார். இன்றைய செய்திப் புகைப்படங்கள் (30/07/2010) ![]() கள்ளநோட்டு கும்பல் முக்கிய நபர் பல கோடி ரூபாயுடன் தப்பி ஓட்டம் ராமநாதபுரத்தில் கள்ளநோட்டு கும்பலின் முக்கிய நபர், பல கோடி ரூபாய் கள்ளநோட்டுடன் தப்பினார். தமிழகத்தில் சுற்றுலா தலங்களை குறிவைத்து கள்ள நோட்டுகளை வெளி மாநில கும்பல் புழக்கத்தில் விட்டு வருகின்றன. இது தொடர்பாக கன்னியாகுமரியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்து, ஆறு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட கியூ பிரிவு போலீசார், ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதி லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களை கண்காணித்து வந்தனர். ஏர்வாடியைச் சேர்ந்த தர்பார் லாட்ஜ் உரிமையாளரின் மகன் செய்யது முகமது அல்டாப்(25) உள்ளிட்ட சிலர், கள்ள நோட்டுகளை மாற்றுவது கியூ பிரிவு போலீசாருக்கு தெரிந்தது. அதன்படி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவில் சென்ற செய்யது முகமது அல்டாப், கீழக்கரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(29) டிரைவர் செய்யது அபுதாகிர்(30) ஹீரோ ஹோண்டா பேசன் மோட்டார் சைக்கிளில் சென்ற ராமநாதபுரம் கோட்டைமேடு தெருவைச் சேர்ந்த சிவகுமார்(40) ஆகியோரை பிடித்து விசாரித்ததில், கள்ள நோட்டு மாற்றியதும், மாற்ற முயற்சி செய்ததும் தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு, கள்ளநோட்டை மாற்றி கிடைத்த 55 ஆயிரம் மற்றும் ஆட்டோ, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கள்ளநோட்டு கும்பலின் முக்கிய நபர், பல கோடி ரூபாய் கள்ள நோட்டுடன் தங்களை பார்க்க வந்து கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசாரும் கைதானவர்களை கொண்டு, முக்கிய நபரிடம் மொபைல் போனில் பேசி சீக்கிரம் வரும்படி, கூறினர். அந்த நபரோ, "நீங்கள் போலீசிடம் மாட்டி கொண்டது தெரியும்' எனக்கூறி, போனை ஆப் செய்து தப்பிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ![]() உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் தான் ஒவ்வொரு சாதிக்கும் தனி ஒதுக்கீடு வழங்க முடியும் என்று டாக்டர் ராமதாசுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமூகநீதிக் களத்தில் 90 ஆண்டுப் பின்னணி வரலாற்றைப் பெற்றுள்ள இயக்கம் நமது தி.மு.க. திராவிட இயக்கத்தின் ஆணிவேர்க் கட்சியாம் நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில், 1921-ம் ஆண்டில் முதல் கம்ïனல் ஜி.ஓ. எனப்படும் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாள்முதல்; வாழையடிவாழையென வளர்ந்து கழகம் இமயமென உயர்ந்து நிற்கும் இன்றுவரை சமூகநீதி என்பதை நமது உயிர்மூச்சுக் கொள்கையாகப் போற்றிப் பேணி வருகிறோம். தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறுஆய்வு செய்யும் பிரச்சினை பல்வேறு கட்டங்களில் எழுப்பப்பட்டு வந்தாலும், முதல்முறையாக நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், 1969-ம் ஆண்டில் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் 13.11.1969 அன்று பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனுக்காகவும், அவர்களுடைய நிலையை மேம்படுத்த மாநில அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று பரிந்துரை செய்யவும், தமிழகத்தின் வரலாற்றில் முதன்முதலில் அமைக்கப்பட்ட குழு இதுதான். இந்தச் சட்டநாதன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேதான் அதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 16 சதவீதம்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவீதம்; என்றிருந்த இடஒதுக்கீட்டு அளவை மாற்றியமைத்து, 7.6.1971 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 சதவீதம்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31 சதவீதம்; என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல்வேறு வகுப்புகள், கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் தங்களுக்கு உரிய பங்கினைப் பெறமுடியவில்லை என்கிற உணர்வு மேலோங்கி, மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு தனிஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வந்ததையொட்டி; பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை கலந்தாலோசித்து; பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவீத இடஒதுக்கீட்டில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீதம் ஒதுக்கியும், மீதமுள்ள 30 சதவீதத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கியும்; நான் மூன்றாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னர் 28.3.1989 அன்று ஆணையிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் மக்கள் தொகையைக் கருத்தில்கொண்டு, 1990ம் ஆண்டில் பொதுத் தொகுப்புக்கான ஒதுக்கீட்டிலிருந்து தனியே 1 விழுக்காடு பழங்குடியினருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்டோருக்கும் என 22.6.1990 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. நான் ஐந்தாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, தற்போது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜனார்த்தனம் பரிந்துரையினைப் பெற்று, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து 3.5 சதவீத இடஒதுக்கீட்டினை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என தனியே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதைப்போலவே, தாழ்த்தப்பட்டோருள் கடைக்கோடிப் பிரிவினராய் இருந்துவரும் அருந்ததியர்க்கு தனி இடஒதுக்கீடு தரப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை ஏற்று, தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுவரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நான் இவ்வளவு விவரங்களையும் தொகுத்துச் சொல்வதற்குக் காரணம் இடஒதுக்கீட்டின் பரிணாம மாற்றங்களை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். பிற்படுத்தப்பட்டோருக்கென வழங்கப்பட்டு வந்த 30 சதவீத மொத்த இடஒதுக்கீட்டில், மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு தனியே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதும்; பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இஸ்லாமியர்க்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கியதும்; அருந்ததியர்களுக்கு 3 சதவீத தனி உள்ஒதுக்கீடு வழங்கியதும்; பழங்குடியினர்க்கு ஒரு சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்கியதும் கழக ஆட்சியிலேதான். எப்போதுமே கோரிக்கைகளிலே நியாயம் இருக்குமேயானால்; சட்டமும் காலமும் ஒத்துவருமானால்; அந்த கோரிக்கை களை ஒத்திப்போடாமல் உடனடியாக ஏற்று, நிறைவேற்றி வருவது கழக ஆட்சி என்பதனை நடுநிலையாளர்கள் நன்கு அறிவார்கள். அந்த அடிப்படையிலே தான் மிகப் பிற்படுத்தப்பட்டோர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும், பழங்குடியினர்க்கும் தனித்தனியே இடஒதுக்கீடுகள் கழக ஆட்சியிலே வழங்கப்பட்டுள்ளன. தற்போது டாக்டர் ராமதாஸ், அருந்ததியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கி வருவதை முன்னுதாரணமாகக் காட்டி, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். அவர் வைத்துள்ள கோரிக்கையிலே இருக்கும் அடிப்படை நியாயங்களைப் பற்றியெல்லாம் இந்தத் தருணத்தில் நான் விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி இடஒதுக்கீட்டையும் - வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கென நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றத்திலே 1994-ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டு, ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கியிருக்கிறது. அந்த இடைக்காலத் தீர்ப்பில், ``ஒரு மாநிலம் 50 சதவீத இடஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டுமென்றால், அதனை நியாயப்படுத்துவதற்குத் தேவையான புள்ளி விவரங்களின் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும்'' என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நாம் தேவையான புள்ளிவிவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளித்து, அந்த ஆணையம் நாம் அளித்திடும் புள்ளி விவரங்களை ஆராய்ந்து, இடஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கு நமக்கு சாதிவாரியான மக்கள்தொகை விவரங்கள் வேண்டும். அதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மாநிலத்தில் மட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென்றால், அதற்கு ரூ.400 கோடி நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறலாமென்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆலோசனை வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி, தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், வன்னியர்களுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம்; மற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட சாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதையெல்லாம் முடிவு செய்திட இயலும். அப்படிச் செய்தால்தான், சட்டப்படி அந்த முடிவுகள் எல்லாம் செல்லுபடியாகும். அப்படியில்லை என்றால் நாம் எடுக்கும் முடிவு சட்டத்திற்குப் புறம்பானதாக ஆகிவிடக்கூடும். எனவே, வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு என்ற பிரச்சினையில் நாம் உடனடியாக அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு இடம்தரவில்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொண்டு, நமது மாநிலத்திற்கான இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்து, அதற்குப்பிறகு தனி ஒதுக்கீடு பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதுதான் சட்டப்படியான அணுகுமுறையாக அமைந்திடும். இதில் அவசரம் காட்டினால், பிரச்சினை திசைதிரும்பிவிடக்கூடும் என்பதாலும், இருப்பதையும் இழந்துவிடக்கூடாது என்பதாலும் தொடர்புடைய அனைவரும் இந்த இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இணக்கமான ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன். எனவே இருப்பதை இழக்காமல் இடஒதுக்கீடு அமைய இணைந்து செயல்படுவோம்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். அதே இடத்தில் பொதுக்கூட்டம்; அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க., பதிலடி அ.தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கோவையில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்த தி.மு.க., முடிவு செய்துள்ளது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதற்குப் போட்டியாக, கடந்த 13ம் தேதி ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க.,வினர் பிரமாண்டமாக நடத்திக் காட்டினர். கடந்த பத்தாண்டுகளில், தமிழகத்தில் எந்த ஒரு பொதுக்கூட்டத்துக்கும் வராத அளவுக்கு மிகப்பெரிய கூட்டத்தைத் திரட்டினர். இதனால், செம்மொழி மாநாட்டினால் மக்களுக்கு ஏற்பட்ட பிரமிப்பு, திசைமாறியது. இந்த சூழலில், கோவையில், "டைடல் பார்க்' பணி முடிந்து, திறப்பு விழா நடத்த ஏற்பாடு நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, இதை திறக்கவிருப்பதாக அறிவிக்கப் பட்டது. அதற்கு முந்தைய நாளில், திருப்பூரில் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி நடத்தும் பாராட்டு விழாவிலும் அவர் பங்கேற்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, முதல்வர் கருணாநிதியே, கோவை, "டைடல் பார்க்'கை திறந்து வைப்பதாக, நிகழ்ச்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திடீரென முதல்வர் வருவதாக நிகழ்ச்சி மாற்றம் செய்யப்பட்டிருப்பது, அரசு மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திறப்புவிழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதுடன், அதே நாளில் கோவையில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தவும் தி.மு.க., அதிரடியாக ஏற்பாடு செய்துள்ளது. முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்றால், கோவை சிவானந்தா காலனியில் நடத்தப்படுவதே வழக்கம். ஆனால், இந்த முறை கோவை வ.உ.சி., பூங்காவில் பொதுக் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர். எந்த பட்டியல் ஜெயிக்கும்?: கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, விலைவாசி உயர்வையும், பிரச்னைகளையும் பட்டியலிட்டு ஜெயலலிதா பேசியது, மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு, கருணாநிதி எப்படி பதிலடி கொடுக்கப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கோவையில் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு நடந்த வளர்ச்சிப் பணிகள், செம்மொழிப் பூங்கா, 100 கோடி ரூபாய் பாலம் போன்றவற்றைப் பட்டியலிடலாம். பிரம்மாண்ட வரவேற்பு: 4 மாவட்ட தி.மு.க., முடிவு: முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட தி.மு.க., செயலர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். இதில், கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆக., 1ல் துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், ஆக., 2ல் முதல்வர் கருணாநிதிக்கும் கோவை விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டது. இருவரும் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாகக் கலந்து கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும், லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்களைத் திரட்ட வேண்டுமென்று வலியுறுத்தினர். எந்தெந்த மாவட்டத்திலிருந்து எவ்வளவு தொண்டர்களை அழைத்து வர வேண்டுமென்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது. வாகன ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. 2010, ஜூலை மாதம் இருபத்தி ஒன்பதாம் நாள் அண்மை செய்திகள் ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan,044-64541144 +91-7299140319 +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly NewsPaper send your comments and corrections |