![]() COMMUNICATION(S) POINT as your Homepage "அண்மை செய்திகள்,09/03/2010,காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி, ![]() பெண்கள் மசோதாவை நிறைவேற்ற இன்று அனைத்துக் கட்சி கூட்டம் பெண்கள் மசோதாவை சுமுகமாக நிறைவேற்றுவது தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக, பிரதமர் மன்மோகன் சிங், இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்தபோது பெரும் அமளி ஏற்பட்டது. இதனால், மசோதா மீதான ஓட்டெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மசோதாவை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர், அரசியல் கட்சி தலைவர்களுடன் நேற்று தனித் தனியாக ஆலோசனை நடத்தினர். லாலு பிரசாத், முலாயம், சுஷ்மா சுவராஜ், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களுடன் தனித் தனியாக ஆலோசனை நடந்தது. இதில், பங்கேற்ற பெரும்பாலான தலைவர்கள், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன், அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை கூட்டி, ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என, வலியுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, மசோதாவை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். டபிள்யூ.ஆர்.வரதராஜன் மரணத்தில் மர்மம் விலகியது; தற்கொலை செய்துகொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டபிள்யூ.ஆர்.வரதராஜன் கடந்த மாதம் 11-ந் தேதி சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து திடீரென காணாமல் போய்விட்டார். பின்னர் அவரது பிணம் சென்னை போரூர் ரெட்டை ஏரியில் மீட்கப்பட்டது. பிணத்தை அவரது மனைவி சரஸ்வதி அடையாளம் காட்டினார். இந்த நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் இதுபற்றி உறுதியாக சொல்ல முடியும் என்று இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலையில் டபிள்யூ.ஆர்.வரதராஜனின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்தது. இதுபற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:- டபிள்யூ.ஆர்.வரதராஜன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியதால்தான் அவர் இறந்துள்ளார் என்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தெரிவித்துள்ளார். தடயஅறிவியல் சோதனையில் அவரது வயிற்றில் இருந்து எடுத்த உள்ளுறுப்புகளில் நச்சுத்தன்மையுள்ள பொருள் எதுவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார். ![]() பிரதமர்,சோனியா வருகை : மன்னார் தீவுகளில் ஆய்வு பிரதமர்,சோனியா வருகையை யொட்டி மன்னார் வளைகுடா கடல்பகுதியில் உள்ள தீவுகளில் கடலோர காவல்படையினர்ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் புதிய சட்டசபை கட்டட திறப்பு விழாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங்,காங்.,தலைவர் சோனியா வர உள்ளனர்.இதன் பாதுகாப்பு ஏற்பாடாக மார்ச் 7 முதல்14 ம் தேதி வரை, உச்சிப்புளி முதல் ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துபணி மேற்கொள்கின்றனர். இதற்காக, போலீசார் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நேற்று இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் நிலைய கமாண்டிங் ஆபிசர் செய்னி,பிரதீப்குமார் எஸ்.பி., ஆகியோர் 'ஹோவர் கிராப்ட்' ரோந்து கப்பலில் மன்னார் வளைகுடா கடல்பகுதிகளில் உள்ள தீவுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகள் மார்ச் 11,12,13 தேதிகளில் முகாமை விட்டு வெளியில் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. மண்டபம் அகதிகள் முகாமை கியூ பிரிவு போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். பாராளுமன்றத்தில் ரகளை: துணை ஜனாதிபதியிடம் எம்.பி.க்கள் மன்னிப்பு பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே, பாராளுமன்றத்தில் மூன்று முறை தாக்கல் செய்யப்பட்ட போதிலும் அந்த மசோதாவை நிறைவேற்றுவதில் 13 ஆண்டுகளாக சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில், 100-வது சர்வதேச மகளிர் தினமான நேற்று, அந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக, அரசியல் சட்டத்தில் 108-வது திருத்தம் கொண்டு வரவும், மசோதா தாக்கல் செய்யவும் மத்திய அரசு தீர்மானித்தது. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, இடதுசாரி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரித்தன. ஆனால், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதா தளம், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை தீவிரமாக எதிர்க்கின்றன. பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அந்த கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த சூழ்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. டெல்லி மேல்-சபை கூடியதும், 100-வது மகளிர் தின வாழ்த்துச்செய்தியை சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி வாசித்தார். அப்போது அவர், "அனைத்து பெண்களும் சம உரிமை, சமவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியை பெற அர்ப்பணிப்புடன் பாடுபடுமாறு உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் ஆண், பெண் பேதம் இருக்க கூடாது. முடிவுகளை தீர்மானிப்பதில் பெண்களும் பங்கு பெற வேண்டும். அதற்கு நாம் உதவ வேண்டும்'' என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, கேள்வி நேரம் தொடங்கியது. ஆனால், சமாஜ்வாடி மற்றும் ராஷ்டிரீய ஜனதா தள எம்.பி.க்கள் எழுந்து நின்று, `சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்துள்ள ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அதுபற்றி கேள்வி நேரம் முடிந்ததும் பேசுமாறு ஹமீது அன்சாரி விடுத்த வேண்டுகோளை அவர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நண்பகல் 12 மணி வரை மேல்-சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும், பல்வேறு அமைச்சகங்கள் சார்பான அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு மத்திய மந்திரிகளை துணைத்தலைவர் ரகுமான்கான் அழைத்தார். முதலில், மகளிர் மேம்பாட்டுதுறை மந்திரி கிருஷ்ணா தீரத் எழுந்து பேச ஆரம்பித்தார். ஆனால் ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்களின் கூச்சல் காரணமாக எதுவுமே கேட்கவில்லை. தொடர்ந்து, கூச்சல்-குழப்பம் நிலவியதால் பிற்பகல் 2 மணி வரை மேல்-சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் மேல்-சபை கூடியது. மகளிர் மசோதாவை தாக்கல் செய்ய வருமாறு சட்ட மந்திரி வீரப்ப மொய்லியை மேல்-சபை தலைவர் ஹமீது அன்சாரி அழைத்தார். உடனே, ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவையின் மையப்பகுதியை நோக்கி விரைந்தனர். மேலும், மேல்-சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். லாலு கட்சியை சேர்ந்த ராஜ்நிதி பிரசாத் மற்றும் முலாயம்சிங் கட்சியை சேர்ந்த கமல் அக்தர், நந்த கிஷோர் ஆகியோர் பத்திரிகையாளர்கள் மேஜை மீது ஏறிச்சென்று மேல்-சபை தலைவரின் மேஜையில் இருந்த மசோதா நகல்களை பிடித்து இழுத்தனர். அவையின் மையப்பகுதியில் இருந்த கோப்புகள் தூக்கி வீசப்பட்டன. மேலும், மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா நகல்களை கிழித்து எறிந்தனர். மேல்-சபை தலைவரான துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை நோக்கி காகிதங்கள் பறந்தன. அவருக்கு முன்பு இருந்த "மைக்'கையும் எம்.பி.க்கள் பிடித்து இழுத்து உடைத்தனர். உடனே, சபை காவலர்கள் விரைந்து வந்து, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மீது காகிதங்கள் விழாமல் தடுத்தனர். `மைக்'கையும் கீழே விழாமல் பிடித்தனர். மேலும், அன்சாரியை சுற்றி பாதுகாப்பாக வளையம் போல் நின்றனர். சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி.க்களின் செயலுக்கு மத்திய மந்திரி ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் எழுந்து நின்று கண்டனம் தெரிவித்தனர். இத்தகைய பலத்த ரகளை மற்றும் அமளிக்கு இடையே, மகளிர் இட ஒதுக்கீடு சட்டமசோதாவை மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லி தாக்கல் செய்தார். மேலும், மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து அமளி நீடித்ததால் மூன்றாவது முறையாக பிற்பகல் 3 மணி வரையிலும், பின்னர் பிற்கல் 4 மணி வரையிலும், அதன் பிறகு மாலை 6 மணி வரையிலும் டெல்லி மேல்-சபை அடுத்தடுத்து தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு டெல்லி மேல்-சபை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மீண்டும் அவை கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மசோதா தாக்கல் செய்யப்பட்டதால் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங்கும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்தும் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து, அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். பின்னர், அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் மூத்த மத்திய மந்திரிகளுடனும், பா.ஜனதா, இடதுசாரி கட்சி தலைவர்களுடனும் பிரதமர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். மேலும், சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும், பகுஜன் சமாஜ் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பதில் உறுதியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்து விட்டனர். அதுமட்டுமல்லாமல், மேல்-சபையில் மகளிர் மசோதாவை நிறைவேற்றினால், வரும் வாரங்களில் பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் நிறைவேற்றுவது, நிதி மசோதா மீதான ஓட்டெடுப்பு போன்றவற்றிலும் எதிர்த்து வாக்களிக்கப்போவதாக அந்த கட்சிகள் அறிவித்தன. அந்த மூன்று கட்சிகளும் விலகி விட்டால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பாராளுமன்றத்தில் நூலிழை பெரும்பான்மையே இருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருப்பதால் பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு நிச்சயமாக கிடைக்காது. பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் தோல்வி ஏற்பட்டால் மத்திய அரசின் நிலைமை சிக்கலாகி விடும். எனவே, மூத்த மத்திய மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் பிரதமர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இறுதியில் மகளிர் மசோதா மீதான ஓட்டெடுப்பை தள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, இறுதி முடிவு எடுக்கவும் தீர்மானித்துள்ளது. 4-வது முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் மசோதா, இந்த முறையாவது நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பெண்கள் சமுதாயம் உள்ளது. டெல்லி மேல்-சபையை போலவே, பாராளுமன்றத்திலும் நேற்று அமளி ஏற்பட்டது. பாராளுமன்றம் கூடியதும் குரேஷியா நாட்டு குழுவினரை சபாநாயகர் மீராகுமார் வரவேற்றார். பின்னர், மகளிர் தின வாழ்த்துச்செய்தியை வாசித்தார். பின்னர், கேள்வி நேரம் தொடங்கியதும், `மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்டோர், தலித், முஸ்லிம் பெண்களுக்கும் உள் இடஒதுக்கீடு தேவை என சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மீராகுமார் மறுத்ததால் முலாயம்சிங் தலைமையில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள், அவையின் மையப்பகுதியை நோக்கி சென்றனர். அவர்களுக்கு பின்னால் லாலு பிரசாத் தலைமையில் ராஷ்டிரீய ஜனதாதளம் எம்.பி.க்களும், உமாசங்கர் சிங் தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்களும் சென்றனர். சபாநாயகர் இருக்கை அமைந்துள்ள பீடத்தை சுற்றி நின்று கோஷம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் சபாநாயகர் பீடத்தின் மீது சமாஜ்வாடி கட்சியைச்சேர்ந்த மிதிலேஷ் குமார் என்ற எம்.பி., ஏறத்தொடங்கினார். உடனே, அவை முன்னவரும், நிதி மந்திரியுமான பிரணாப் முகர்ஜி எழுந்து, `உங்கள் கட்சியினரை கட்டுப்படுத்துங்கள்' என சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங்கை எச்சரித்தார். அமளி தொடர்ந்ததால், நண்பகல் 12 மணி வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியதும் அமளி நீடித்தது. கேள்வி நேரம் முடிந்ததும் பிரச்சினையை எழுப்புமாறு சபாநாயகர் விடுத்த வேண்டுகோளை அவர்கள் கேட்கவில்லை. அவையின் மையப்பகுதிக்கு வந்து 15 நிமிடங்களுக்கு மேல் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பிரணாப் முகர்ஜி, அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் அவையில் இருந்தனர். அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி, 3 மணி, மாலை 4 மணி, மாலை 6 மணி என அடுத்தடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பாராளுமன்றத்துக்கு வெளியே பேட்டியளித்த சபாநாயகர் மீராகுமார், `சமாஜ்வாடி மற்றும் ராஷ்டிரீய ஜனதாதளம்' எம்.பி.க்களின் ஒழுங்கீன நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். ![]() பாகிஸ்தான் கைதிகளை அனுப்ப மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவு இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகளை, இரண்டு மாதங்களுக்குள் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 124 பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்கக் கோரி, ஜம்மு காஷ்மீர் சிறுத்தைகள் கட்சித் தலைவர் பீம் சிங், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகளை அந்நாட்டு அரசு விடுவிக்கும் பட்சத்தில், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாக்., கைதிகள் விடுவிக்கப்படுவர்' என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க, நீதிபதிகள் மறுத்து விட்டனர். 'இந்திய அரசியல் சட்டப்படி, எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரே விதமான நிவாரணம் வழங்க வேண்டும். இதனடிப்படையில், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகளை இரண்டு மாதங்களுக்குள் விடுவித்து, அவர்கள் நாட்டிற்கே மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க இந்தியா விருப்பம்: நிருபமா ராவ் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நிருபமா நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலக செய்தி தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியதாவது:- இலங்கையில் தற்போது கொழும்பு நகரில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. மேலும் கண்டியில் ஒரு துணைத் தூதரகமும் உள்ளது. வடக்கு பகுதியில் நடைபெற்று வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதால் யாழ்ப்பாணத்தில் துணைத்தூதரகம் அமைப்பதற்கு இந்தியா விரும்புவதாக அதிபர் ராஜபக்சேவிடம் நிருபமா கூறினார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் புனரமைப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் நிருபமா ராவ் உறுதி அளித்துள்ளதாக விஷ்ணு பிரகாஷ் தெரிவித்தார். ![]() ஜனாதிபதியுடன் லாலு சந்திப்பு ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த லாலு கூறியதாவது: ஜனாதிபதியிடம், மகளிர் மசோதா குறித்த தங்களது கட்சியின் நிலை குறித்து கூறியதாகவும், அதில் தாங்கள் எதிர்க்கும் அம்சங்கள் குறித்து அவரிடம் விரிவாக விவரித்ததாகவும் அவர் தெரிவித்தார். தமிழக பிரச்சினைகளுக்கு விஜயகாந்த்தால் மட்டுமே தீர்வுகாண முடியும்; பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு திருப்பூர் ஒன்றிய தே.மு. தி.க. சார்பில் பெருமா நல்லூரில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை ஏற்றியுள்ளது. இதனால் மீண்டும் விலை வாசி உயரத்தான் செய்யும். பால் மற்றும் அனைத்து பொருட்களின் விலையும் உயரும். கோவையில் கலர் கலராக பஸ்விட்டு கட்டணத்தை ஏற்றி விட்டனர். கேட்டால் சொகுசு பஸ் என்கிறார்கள். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்களுக்காக வாழக் கூடியவர். அரசியலுக்கு வரும் முன்பே பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவர் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர். இதுவரை தமிழகத்தில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. முல்லைப் பெரியார், காவிரி, நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. கடலில் மீன்பிடிக்க முடியவில்லை. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணக்கூடியவர் விஜயகாந்த் மட்டுமே. மேற்கண்டவாறு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். ![]() இளைஞர் காங்கிரஸ் தேர்தல் : நிர்வாகிகளுக்கு எம்.எல்.ஏ., பணம் கொடுத்ததால் பரபரப்பு தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆத்தூரில் அத்தொகுதி எம்.எல்.ஏ., எம் ஆர் சுந்தரம் தலைமையில் ஒரு குழுவினர் ஒரு பிரிவாகவும், மாநில பொதுக்குழு உறுப்பினர் தலைமையில் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற உள்ள தேர்தலில் இரு பிரிவிலும் போட்டியிடுகின்றனர். இதனால் எம்.எல்.ஏ., சுந்தரம் தனது ஆதரவாளர்களுக்கு கட்சி அலுவலகத்தில் வைத்து பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தரம் ஆதரவாளர்கள் தேர்தல் செலவுக்காகவே எம்.எல்.ஏ., பணம் கொடுத்ததாக கூறினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் நிகர்நிலை பல்கலைக்கழக வழக்கு ஏப்ரல் 13-ந் தேதிக்கு தள்ளி வைப்பு 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்தது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு எடுத்தது பற்றி விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணை நேற்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாகர் முன்னிலையில் வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு தரப்பினரும் தங்களது பதில்களை 3 வாரத்துக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை ஏப்ரல் (அடுத்த) மாதம் 13-ந் தேதிக்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டனர். ![]() சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா 13ல் துவக்கம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் 29ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, வரும் 13ம் தேதி துவங்குகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 1981ம் ஆண்டு, முதல் முறையாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி துவங்கியது. இந்த ஆண்டு 29வது நாட்டியாஞ்சலி விழா, வரும் 13ம் தேதி துவங்கி, 17ம் தேதி தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கின்றன. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தினசரி மாலை 5.30 மணிக்கு துவங்கி, இரவு 11.15 மணி வரை நடக்கிறது. துவக்க நாள் நிகழ்ச்சியன்று மகா சிவராத்திரி தினம் என்பதால், அன்று விடிய, விடிய நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நாட்டியக் கலைஞர்கள் தங்களின் நாட்டியத்தை நடராஜப் பெருமானுக்கு அஞ்சலியாக அர்ப்பணிக்கின்ற நிகழ்ச்சிதான் நாட்டியாஞ்சலி. இறை உணர்வும், அர்ப்பணிப்பு உணர்வும் நிறைந்திருப்பதால் மற்ற நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நாட்டியாஞ்சலி சிறப்பு பெறுகிறது. பாரதத்தின் பாரம்பரியம் மிக்க பரதம், கூச்சுப்புடி, மோகினி ஆட்டம், கதக், சத்ரியா வகை நடன கலைஞர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்கின்றனர். மேலும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்கின்றனர். போலீஸ் தேர்வு நெரிசலில் சிக்கி ஒருவர் பலி: 11 பேர் காயம் போலீஸ் பணிக்கான தேர்வு மும்பை கலிங்கா மைதானத்தில் நேற்று நடந்தது. 3,600 பதவிக்கு நடந்த இந்த தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார். 11 பேர் காயம் அடைந்தனர். கூடுதல் போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 2010, மார்ச் மாதம் எட்டாம் நாள் அண்மை செய்திகள் ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |