![]() COMMUNICATION(S) POINT as your Homepage "அண்மை செய்திகள்,02/02/2010,காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி, ![]() ![]() தமிழகத்தில் 2-ம் கட்டமாக 70 லட்சம் குழந்தைகளுக்கு 7-ந் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது தமிழகத்தில் இரண்டாம் சுற்று பல்ஸ் போலியோ சிறப்பு முகாம் 7-ந் தேதி நடைபெறுகிறது. முதல்சுற்று முகாமின்போது சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் 7-ந் தேதி மீண்டும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடந்த முறையை போலவே இந்த சுற்றிலும், தமிழ்நாட்டில் சுமார் 40 ஆயிரத்து 399 சிறப்பு மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்டாலின் இன்று டில்லி பயணம் விலைவாசி உயர்வு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியுள்ள முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க, துணை முதல்வர் ஸ்டாலின் இன்று டில்லி செல்கிறார். இரண்டு நாட்கள் தங்கி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, மம்தா பானர்ஜி, கமல்நாத் ஆகியோரையும் சந்திக்க உள்ளார். விஷம் போல் ஏறியிருக்கும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த பிரதமரால் கூட்டப்பட்ட, முதல்வர்கள் மாநாட்டில் சனிக்கிழமை (நாளை) கலந்து கொண்டு ஸ்டாலின் உரையாற்றுகிறார். அடுத்த நாள், உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில் தமிழகத்திலிருந்து வரும் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்தும் பேச உள்ளார். இந்த இரண்டு முதல்வர்கள் மாநாடும் விஞ்ஞான் பவனில் நடக்க உள்ளது. தமிழகத்தில் நிறைவேறி வரும் பல்வேறு ரயில் திட்டங்கள், ரயில்வே அமைச்சகம் சரியான முறையில் நிதி ஒதுக்காததால் தேக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் - திண்டுக்கல் இரண்டாவது அகல ரயில் பாதை திட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தும், பணிகள் இதுவரை துவங்கவில்லை. மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு, வரும் ரயில்வே பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மம்தா பானர்ஜியை சந்திக்கும் போது ஸ்டாலின் முன்வைப்பார் என்று தெரிகிறது. ![]() திருச்சி முக்கொம்பில் ராணுவ அதிகாரி குத்திக்கொலை கர்நாடக மாநிலம் தும்கூரை சேர்ந்தவர், ரமேஷ் (வயது 33). இவர் கோவை ராணுவ அலுவலகத்தில் மருத்துவ அதிகாரியாக இருந்தார். ராணுவ பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக அவர் திருச்சி வந்திருந்தார். ரமேஷ் இன்று மாலை குடும்பத்தினருடன் முக்கொம்புக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள பூங்காவில் அவருடைய மனைவி அனுராதாவும், 5 வயது மகளும் ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 ரவுடிகள் அனுராதாவின் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனை பார்த்த ரமேஷ் அவர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடிகள் கையில் வைத்திருந்த கத்தியால் ரமேசின் கழுத்தில் குத்திவிட்டு ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் பரிதாபமாக இறந்தார். இன்று துவங்குகிறது "நம்ம திருப்பூர் - கூடல் 2010" தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, கலை, புராதனங்களை வெளிப்படுத்தும் 'நம்ம திருப்பூர்-கூடல் 2010' கலை பண்பாட்டு திருவிழா, திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் இன்று துவங்குகிறது. தமிழ் மையம் சார்பில், சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் விரிவாக, 'நம்ம திருப்பூர்-கூடல் 2010' கலை-பண்பாட்டு திருவிழா நடத்தப்படுகிறது; வரும் 7ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. கொங்கு மண்டலத்தின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரங்கள், முக்கியத்துவங்களை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இன்று மாலை 5.00 மணிக்கு, சிக்கண்ணா கல்லூரி வளா கத்தில், எம்.பி., கனிமொழி தலைமை வகித்து, 'நம்ம திருப்பூர்' கலையரங்கத்தை திறந்து வைக்கிறார். அதன்பின், 'நம்ம திருப்பூர்' கலைத்திருவிழா துவங்குகிறது. 'வசந்த வீதி' என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக்கலைஞர்கள் பங்கேற்கும் இசை நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. பழனி இசை கல்லூரி மாணவர்களின் இசை மகோற்சவம் நடக்கிறது. கொங்கு மண்டலத்தின் கம்பீரமான அடையாள மாக விளங்கும் காங்கயம் காளைகளில், சிறந்த காளைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவற்றுக்கு பரிசளிப்பு விழா, காங்கயம் அரசு பள்ளியில், நாளை காலை 10.00 மணிக்கு நடக்கிறது; அமைச்சர் பழனிசாமி தலைமை வகிக்கிறார். கனிமொழி எம்.பி., அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். வெளிநாட்டில் நடந்த கார் விபத்தில் மத்திய மந்திரி வயலார் ரவி காயம் லைபீரியாவில் நடந்த சாலை விபத்தில், வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி காயமடைந்தார். வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, கானா, தான்சானியா, கென்யா, லைபீரியா மற்றும் நைஜீரியா போன்ற ஆப்ரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், லைபீரியாவின் மான்ரோவியாவிலிருந்து லாகோஸ் திரும்பும் வழியில், அவர் பயணம் செய்த வாகனம் விபத்தில் சிக்கியது. இதில், காயமடைந்த வயலார் ரவி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவைப்படும் பட்சத்தில், மேல் சிகிச்சைக்காக, ஐவரி கோஸ்ட் அபிட்ஜான் மருத்துவமனையில் அமைச்சர் ரவி சேர்க்கப்படலாம் என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. விபத்தையொட்டி, வயலார் ரவியின் நைஜீரிய பயணம் ரத்து செய்யப்பட்டது. ராமேஸ்வரம் கோவிலில் நாளை நடை சாத்தல் ராமேஸ்வரம் கோவில் சிவராத்திரி விழா மூன்றாம் நாளை யொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன், கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுவதால், நாளை காலை 7 மணிக்கு நடை சாத்தப்பட்டு. இரவு 9 மணிக்கு திறக்கப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மாசி மகா சிவராத்திரி மூன்றாம் நாளை முன்னிட்டு, நாளை அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 2.30 முதல் 3.30 வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்க சப்பரத்தில் நான்குரத வீதிஉலா, காலபூஜைகள் நடைபெறும். காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ,கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுகின்றனர். இதன் பின் சாத்தப்படும் கோவில்நடை, இரவு 9 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து அர்த்தஜாமபூஜை, பள்ளியறை பூஜைகள் நடைபெறும். இதையொட்டி காலை 6 மணி முதல் கோவிலுக்குள் பக்தர்கள் தீர்த்தமாட அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ![]() சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற டிரைலர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் கடந்த 3-ந்தேதி முதல் சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற டிரைலர் லாரி டிரைவர்களின் வேலை நிறுத்தம் இன்று மாலை வாபஸ் பெறப்பட்டது. வருஷநாடு மலைப்பகுதியில் நக்சலைட்டுகள்: போலீஸ் தேடுதல் தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு முதல் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் ஏ.டி.எஸ்.பி., திருநாவுக்கரசு தலைமையில் 30 போலீசார் கொண்ட தனிப்படை பிரிவினர் நேற்று இரவு 9 மணிக்கு கடமலை மயிலை ஒன்றியங்களுக்கு இடையிலான மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையை துவக்கினர். முதலில் தாழையூத்து பகுதியில் இவர்கள் முகாமிட்டு, இருபிரிவுகளாக பிரிந்து சென்றனர். முத்தாயம்பாறை, அருகவேலி, வாயக்கால்பாறை, பஞ்சம்தாங்கிமலை, வாலிப்பாறை, ஓயாம்பாறை, வெள்ளிமலைப் பகுதிகளில் இவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர். ![]() போலீசார் மீது கல்வீச்சு: காஷ்மீரில் அரசியல் பிரமுகர் உள்பட 70 பேர் கைது காஷ்மீரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாரின் கண்ணிவெடித் தாக்குதலில் வாமிக் பரூக் வானி என்ற 7-ம் வகுப்பு மாணவன் பலியானான். இதை எதிர்த்து அங்கு போலீசார் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு நிதி உதவி செய்து தூண்டி விடுபவர்களுக்கு எதிராக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், ஜனநாயக விடுதலை கட்சி பிரமுகர் ஷபீர் அகமது ஷா, அவரது கூட்டாளியாக இருந்த நயீம்கான், பஷாரத், பிரிவினைவாத தலைவர் ஜிலானியின் கூட்டாளி பிர்தவுஸ் ஷா உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். மிதவாத தலைவரான ஹுரியத் மாநாட்டு தலைவர் மிர்வைஸ் உமர் பரூக், வெளியே செல்ல முடியாதபடி, அவரது வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். வழக்கு போடுவதாக மிரட்டி லஞ்சம் : மதுவிலக்கு துறை இன்ஸ்பெக்டர் கைது சாராயம் காய்ச்சுவதாக கூறி, வழக்கு போடுவதாக மிரட்டிய மதுவிலக்கு துறை இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த சிங்கலாந்தபுரத்தை சேர்ந்தவர் அசோக் குமார். இவர் மீது சாராயம் காய்ச்சியதாக கூறி, வழக்கு போடுவதாக மிரட்டி, மதுவிலக்கு துறை இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் ஏட்டு செல்வராஜ் ஆகியோர் ரூ. 18 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அசோக் குமார் புகார் செய்யவே, காந்தி மற்றும் செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ![]() பெரும் மோதலுக்கு மத்தியில் ராகுல்காந்தி இன்று மும்பை பயணம் மும்பை யாருக்கு என்ற பிரச்சினையில் அவருக்கும், சிவசேனாவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. சிவசேனாவின் கடும் எதிர்ப்பு இருந்தாலும், காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல்காந்தி ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று மும்பை நகருக்கு வருகிறார். இந்தநிலையில் மும்பை பற்றி கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மும்பை வரும் ராகுல்காந்திக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று சிவசேனா தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் பால்தாக்கரே உத்தரவிட்டு உள்ளார். இதனால் மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மரக்கடத்தலை தடுக்க பாதுகாப்பு : மண்டல வனப் பாதுகாவலர் உறுதி ''மரக்கடத்தலை தடுக்க கூடுதல் பாதுகாப்பு அளிப்பதுடன், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கோவை மண்டல வனப் பாதுகாவலர் தெரிவித்தார். மஞ்சூர் அருகே கெத்தை வனப்பகுதியில் சந்தனம் உட்பட விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. கெத்தை வனப்பகுதி வழியாக, சாலை அமைத்து, பட்டா நிலத்தில் இருந்த மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் வெளியிடப்பட்டது. நேற்று மதியம், கோவை மண்டல வனப்பாதுகாவலர் கண்ணன், கெத்தை வனப்பகுதியில் ஆய்வு செய்தார். மரத்துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வனப்பகுதியில் அமைக்கப்பட்ட மண் சாலையில் குழி தோண்டி, வாகனங்கள் செல்லாதவாறு தடை ஏற்படுத்தினர். கோவை மண்டல வனப்பாதுகாவலர் கண்ணன் கூறுகையில், ''கெத்தை வனப்பகுதியில் ஆய்வு செய்ததில், பட்டா நிலத்தில் அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டியுள்ளது தெரியவந்தது. சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மரக்கடத்தலை தடுக்க கூடுதல் பாதுகாப்பு அளிப்பதுடன், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். நீலகிரி தெற்கு வனக்கோட்ட அலுவலர் யோகேஷ்சிங், வனப்பாதுகாப்பு குழு உதவி வனப்பாதுகாவலர் நாகராஜ், குந்தா ரேஞ்சர் ராமசாமி, வனப்பாதுகாப்பு குழு ரேஞ்சர்கள் உடனிருந்தனர். ![]() இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் நாளை தொடக்கம் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் முதல் டெஸ்ட் நாக்பூரில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் "நம்பர் 1" இடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் போட்டியாக உள்ளது. சிமென்ட் விலை தொடர்ந்து குறையும் 'சிமென்ட் விலை அடுத்த மாதம் குறைவாக இருக்கும். மேலும், 2010-11ம் ஆண்டு, சிமென்ட் விலை தொடர்ந்து குறையும்' என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்தது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள செய்தி: சிமென்ட் விலை வரும் மார்ச் மாதத்துடனான காலாண்டில் குறைவாக இருக்கும் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம். 2010-11ம் ஆண்டு, சிமென்டின் விலை மேலும், குறையலாம். இந்தாண்டு, புதிதாக, 3.84 கோடி டன் சிமென்ட் விற்பனைக்கு வரும். தொழிற்சாலைகள் உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்பப்பட்ட சிமென்ட் அளவுடன், விற்பனை செய்த அளவை ஒப்பிட்டால், சந்தையில் சிமென்ட் விலை, மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப் பப்பட்ட 2.10 கோடி டன் சிமென்டால், ஏற்கனவே, அதன் விலை குறைந்துள்ளது. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், சிமென்டின் விலை 3 சதவீதம் முதல் 8 சதவீதமும், தெற்கு பகுதிகளில், 15 சதவீதம் முதல் 20 சதவீதமும், குறைந்துள் ளது. இருந்தாலும், கட்டுமானப் பணிகள் துவங்கும் பருவ காலத்தில் இருப்பதால், சிமென்ட் விற்பனை 12.8 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதிகரித்து வரும், தேவையை பூர்த்தி செய்ய, எந்த ஆண்டும் இல்லாத அளவாக, 2009-10ம் ஆண்டு, 5.23 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ![]() தூத்துக்குடி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே இன்று மாலை கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த வங்கி துணை மேலாளர் உள்பட 2 பேர் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் - லாரி மோதல் : வங்கி அதிகாரி பலி தூத்துக்குடி அருகே மாலை கார் மீது, லாரி மோதிய விபத்தில், வங்கி உதவி மேலாளர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி பெடரல் வங்கி உதவி மேலாளர் சாய்குமார்(55). இவர் அம்பாசிடர் காரில் நெல்லை சென்று கொண்டிருந்தார். ஐந்து மணியளவில் வல்லநாடு அருகே மெயின் ரோட்டில் கார் சென்றபோது, எதிரே நெல்லையிலிருந்து தூத்துக்குடி வந்த லாரி, கார் மீது மோதியது. அதில் சாய்குமார், சம்பவ இடத்திலேயே இறந்தார். வங்கி ஊழியர் லட்சுமணன், கார் டிரைவர் செல்வக்குமார் ஆகியோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முறப்பநாடு போலீசார் விசாரித்தனர். 2010, பிப்ரவரி மாதம் இரண்டாம் நாள் அண்மை செய்திகள் ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |